சில வாரங்களுக்கு முன்னால் Kill என்ற படத்தின் விமர்சனம் எழுதியபொழுது BLOODIEST GORIEST என்று எழுதியிருந்தேன். அதுவும் அப்படித்தான் வெளியானது. மிதமிஞ்சிய ரத்தம், வெட்டு, வன்முறை, என்று இருந்த அந்தப் படத்தைச் சிறு குழந்தைபோல் ஆக்கிவிட்டது நெட் பிலிக்ஸிஸ் வந்துள்ள தி ஷேடோ ஸ்ட்ரேஸ்.
படத்தில் சண்டை இருக்கலாம், அதில் வன்முறை இருக்கலாம். ஆனால் சண்டையும் வன்முறையும் மட்டுமே படம் என்றால் எப்படி இருக்கும்? பத்து நிமிடம் படம் இருபது நிமிட சண்டைக்காட்சிகள் எனப் படம் முழுதும் இருந்தால் அதுவும் தலையைத் துண்டாக்குவது, முகத்தைக் கிழிப்பது என வந்துகொண்டிருந்தால் அது தான் இந்தப் படம்.
சாவின் நிழல்கள் (SHADOWS OF DEATH) என்ற ஒரு கூட்டம். இவர்கள் வேலையே கொலை செய்வது தான். அதில் ஒரு பெண் தான் கதாநாயகி 13. ஆம் அவள் பெயரே 13 தான். ஜப்பானின் மிகப்பெரிய தாதா ஒருவரை கொல்லப் போகும் அசைன்மென்டில் ஒரு சிறிய குளறுபடி நடந்து விடுகிறது. ஒரு அப்பாவிப் பெண் அதில் பலியாகிவிடுகிறார். இவரும் மாட்டிக் கொள்ளும் சூழ்நிலையில், இவர்கள் கும்பலைச் சேர்ந்த மற்றொரு பெண் அவரைக் காப்பாற்றி விடுகிறார். ஒரு சாவிற்கு இப்படி மனது உடையும் பெண் கொலைகாரியாக இருக்க இன்னும் தகுதி பெறவில்லை என்று கதாநாயகியைச் சிறிது காலம் எதிலும் ஈடுபட வேண்டாம் என்று விலக்கி வைக்கிறது அவர் குழு. அப்போது தனது வீட்டின் பக்கத்தில் வசிக்கும் ஒரு சிறு பையனிடம் அவருக்குச் சொல்லத் தெரியாத அன்பு ஏற்படுகிறது. அந்தச் சிறுவனின் அம்மா ஒரு கடத்தல் கும்பலால் கொலை செய்யப்படுகிறாள். இந்தச் சிறுவனும் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப் படுகிறான். அந்தச் சிறுவனை மீட்க அந்தக் கும்பலுடன் மோதுகிறார் கதாநாயகி. அதன் பின் என்ன ஆனது என்பது தான் கதை.
முதலிலேயே சொன்னது போல் பத்து நிமிடத்திற்கு ஒரு முறை பதினைந்து நிமிட சண்டை. ஒவ்வொன்றும் வேறு ரகம். சிலவற்றை கண்கொண்டு பார்க்க முடியவில்லை. பார்க்கும் இடத்திலெல்லாம் கத்தியைச் சொருகுகிறார். கத்திச் சண்டை, துப்பாக்கிச் சண்டை, கராத்தே, சேசிங் என்று அனைத்து சாஸ்திரங்களையும் உபயோகப்படுத்தி இருக்கிறார் இந்தோனேஷியா இயக்குனர் டிமோ ஜாஞ்சாடோ. இவர் இயக்கிய படங்களில் வன்முறை மட்டுமே இருக்கும். (Night comes for us, Macabre) சண்டைக்காட்சிகளை அந்த அளவு அமைப்பதில் வல்லவர். இதுவும் அதுபோல் தான். ஒவ்வொரு சண்டையும் ஒவ்வொரு ரகம். முதல் சண்டையும் க்ளைமாக்ஸ் சண்டையையும் குறிப்பிட்டுச் சொல்லலாம். ஆக்க்ஷன் படப் பிரியர்கள் கண்டிப்பாகத் தவற விடக் கூடாத படம்.
சிறுவர்களும், ரத்தம் பார்த்தால் மயக்கம் வருபவர்களும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டிய படமும் இது தான். கதை என்று பார்த்தால் இது கொலைகாரர்கள் கதை. ஒரு கொலைகாரக் கும்பலை ஒழிப்பதால் ஒரு கொலைகாரி கதாநாயகியாகி விடுகிறார் அவ்வளவு தான்.