
சமையல் தொடர்பான ஷோக்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணம் டிவி வரும் பல சமையல் நிகழ்ச்சிகள். அந்த வகையில் ரசிகர்கள் கொண்டாடும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியை பார்த்து அதற்கு போட்டியாக சன் டிவியில் தொடங்கப்பட்டது தான் ‘டாப் குக் டூப்பு குக்கு 1’ நிகழ்ச்சி.
கடந்த ஆண்டு ஒரே சமயத்தில் இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் தொடங்கப்பட்ட நிலையில், ‘டாப் குக் டூப்பு குக்கு’ சீசன் 2 நாளை (ஆகஸ்ட்17-ம்தேதி) தான் தொடங்க உள்ளது.
4 சீசன்களாக ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்ட வெங்கடேஷ் பட் விஜய் டிவியில் இருந்து விலகி சன் டிவியில் ‘டாப் குக் டூப்பு குக்கு 1’ நிகழ்ச்சிக்கு நடுவராக மாறிய போதிலும், பெருசாக சொல்லும்படி ‘டாப் குக் டூப்பு குக்கு 1’ வெற்றி பெற முடியவில்லை. இந்த நிகழ்ச்சியில் மற்றொரு நடுவராக செஃப் ராம்மோகன் இருந்தார். இந்நிலையில் வெங்கடேஷ் பட்டை தொடர்ந்து விஜய் டிவியின் செல்லப்பிள்ளை சிவாங்கியும் தற்போது ‘டாப் குக் டூப்பு குக்கு’ சீசன் 2க்கு மாறி உள்ளதால் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது என்றே சொல்லலாம்.
இந்த சீசனில் சிவாங்கியுடன் சேர்ந்து விஜே ராகேஷ் தொகுப்பாளராக களமிறங்கியுள்ளதால் இந்த சீசன் மீதான எதிர்பார்ப்பு இன்னுமும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ‘டாப் குக் டூப்பு குக்கு’ சீசன் 2 நிகழ்ச்சி பிரம்மண்டமான முறையில் நாளை (ஆகஸ்ட் 17-ம்தேதி) தொடங்க உள்ளதாக ப்ரோமோ வீடியோ அண்மையில் வெளியான நிலையில் தற்போது இதில் கலந்துகொள்ளப் போகும் 8 போட்டியாளர்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த சீசனில் கிரண், நடிகை பிரியங்கா, நடிகை ப்ரீத்தா, நடிகர் ரோபோ ஷங்கர், சீரியல் நடிகை டெல்னா, ஷிவானி நாராயணன், ராப் பாடகர் வஹீசன் மற்றும் நடிகர் பெசன்ட் ரவி ஆகியோர் போட்டியாளர்களாக களம் இறங்க உள்ள நிலையில், டூப் குக்காக முகுந்த், சௌந்தர்யா, பாரத், தீனா, மோனிஷா, கதிர், அதிர்ச்சி அருண் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள உள்ளனர்.
புதிய களம், புதிய போட்டியாளர்கள், புதிய தொகுப்பாளர், புதுப்புது டாஸ்க்குகள் என பல புதுப்புது விஷயங்களுடன் ‘டாப் குக் டூப்பு குக்கு’ சீசன் 2 வர உள்ளதால் ரசிகர்களுக்கு இந்த சீசனில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது என்றே தோன்றுகிறது.