ஒரு மனிதன் ஓடாக தேய்ந்த கதை..! OTT-யில் பார்க்க வேண்டிய ரஜினியின் 'எவர்கிரீன்' மெகா ஹிட் திரைப்படங்கள்!

RAJINI OTT MOVIES
RAJINI OTT MOVIES
Published on

ஓடிடியில் பார்த்து மகிழ, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டு திரைப்படங்கள். ஒரு திரைப்படம் உங்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து மகிழ்விக்கும் திரைக்கதை , மற்றொரு திரைப்படம் குடும்பத்திற்காக ஓடாக தேய்ந்த தியாக மனிதனின் கலங்க வைக்கும் கதை. இரண்டு திரைப்படங்களும் பெரிய அளவில் வெற்றியை பெற்றது.

1. தில்லு முல்லு : 1981 ஆம் ஆண்டு வெளிவந்த மெகாஹிட் நகைச்சுவை திரைப்படம் இது. இந்தத் திரைப்படம் வில்லனின் இருந்து மாறிக்கொண்டிருந்த ரஜினிக்கு ஜனரஞ்சக படவாய்ப்புகள் கிடைக்க முக்கிய காரணமானது.

நடிகர்கள்: ரஜினிகாந்த் , தேங்காய் சீனிவாசன் , நாகேஷ் , மாதவி , சவுகார் ஜானகி , விஜி , கமல் (சிறப்பு தோற்றம்) , பூர்ணம் விஸ்வநாதன், குண்டு கல்யாணம் ஆகியோர் நடித்துள்ளனர்

திரைக்கதை: தேசபக்தியும் தெய்வபக்தியும் நிறைந்த தொழிலதிபர் ஶ்ரீ ராமச்சந்திர மூர்த்தியிடம்(தேங்காய் சீனிவாசன்) அவருக்கு பிடித்த மாதிரி நடித்து , அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரன்(ரஜினி) வேலைக்கு சேர்கிறார். உண்மையில் சந்திரன் விளையாட்டு , கலாட்டா , பொழுதுபோக்கு என்று ஜாலியாக தன் ஒரே தங்கையுடன் வாழ்ந்து வரும் மனிதன். ஒருமுறை முதலாளி ராமச்சந்திர மூர்த்தியிடம் பொய் சொல்லிவிட்டு சந்திரன் கால்பந்து விளையாட்டை வேடிக்கை பார்க்க செல்கிறார். அப்போது அவர் செய்யும் கலாட்டாக்களை தூரத்தில் இருந்து பார்க்கும் முதலாளி அடுத்த நாள் வேலையை விட்டு நீக்குவதாக சொல்கிறார்.

அந்த நேரத்தில் தனது நண்பர் நாகேஷ் சொல்லிய "ஒரு திரைப்படத்தின் இரட்டை வேஷம்" சந்திரனுக்கு நியாபகம் வருகிறது. முதலாளி மைதானத்தில் பார்த்தது மீசையில்லாத தன் தம்பி இந்திரன் என்று நம்ப வைக்கிறார். அதன் பின்னர் மீசை வைத்தும் எடுத்தும் அண்ணன் தம்பியாக நடித்து முதலாளியை ஏமாற்றுகிறார். தம்பியாக நடிக்கும் ரஜினியின் மீது திமிர் பிடித்த முதலாளி மகளான சரோஜினிக்கு(மாதவி) காதல் வருகிறது. இறுதியில் ரஜினியின் தில்லுமுல்லுவை ராமச்சந்திர மூர்த்தியும் , சரோஜினியும் அறிந்தார்களா?அதன் பின்னர் என்ன ஆனது? என்பதே கதை.

இசை: இந்த திரைப்படத்திற்கு எம். எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகியுள்ளன.

இயக்குனர் : கே.பாலசந்தர்

மொழிகள்: தமிழ்

ஓடிடி தளங்கள்: JioHotstar, Airtel Xstream, Youtube (Pyramid Talkies)

2. ஆறிலிருந்து அறுபது வரை: ரஜினியின் மிகச்சிறந்த நடிப்பை பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் 1979 இல் வெளியான இந்த திரைப்படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும்.

நடிகர்கள்: ரஜினிகாந்த் , படாபட் ஜெயலட்சுமி , சோ, சுருளி ராஜன் , தேங்காய் சீனிவாசன் ஆகியோர் நடித்துள்ளனர்.

திரைக்கதை: சந்தானத்தின் அப்பா ஒரு குடிகாரர் , அவருக்கு சந்தானம் உள்பட மூன்று மகன்கள் ஒரு மகள் இருக்கிறாள். சந்தானத்திற்கு 6 வயது இருக்கும் போது அவரது அப்பா குடிபோதையில் ஒரு விபத்தில் இறந்து விடுகிறார். குடும்பத்தின் மொத்த பாரமும் சந்தானத்தின் தலைக்கு வருகிறது. அப்பா வேலை செய்த அதே அச்சகத்தில் சந்தானம்(ரஜினிகாந்த்) வேலைக்கு சேர்க்கிறான். அவரது சிறுவயதையும் பொறுப்புணர்வையும் கண்ட முதலாளி , அவனுக்கு ஆதரவாக இருக்கிறார். சந்தானத்திற்கு அவ்வப்போது நண்பர் அழகப்பன்(சோ) கடனும் அறிவுரையும் கொடுத்துக் கொண்டே இருப்பார்.

சந்தானம் 2 தம்பிகளையும் , தங்கையையும் நன்றாக படிக்க வைக்கிறார். தங்கையின் திருமணத்திற்கு வரதட்சணை பற்றாக்குறையால் , தன் காதலியை கைவிட்டு வரதட்சணைக்காக வேறு பெண்ணை(ஜெயலட்சுமி) மணக்கிறான் . ஆனால் , அந்த பெண் வீட்டில் பணம் இல்லை என்பதை அறிகிறான். சந்தானத்தின் சகோதர சகோதரிகள் வசதியான வாழ்க்கை கிடைத்த பின்னர் , அவரை அவமானப் படுத்தி உதாசீனம் செய்கிறார்கள். ஒரு கட்டத்தில் வேலை இழந்து சந்தானம் மோசமான நிலைக்கு செல்கிறார். அவர் வாழ்வில் திடீர் திருப்பம் நடந்து , அதன் பின்னர் நடப்பது தான் திரைக்கதை.

இசை: இளையராஜாவின் பின்னணி இசை ரஜினியின் நடிப்புக்கு பக்க பலமாக இருக்கும்.

இயக்குனர் : SP.முத்துராமன்

மொழிகள்: தமிழ்

ஓடிடி தளங்கள்: Airtel Xtreme, Google Play , YouTube

இதையும் படியுங்கள்:
நாளை (மார்ச் 6) திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா: கும்பத்திலிருந்து மீன ராசிக்கு பிரவேசிக்கும் சனீஸ்வரர் - முழு விபரங்கள்!
RAJINI OTT MOVIES

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com