நாளை (மார்ச் 6) திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா: கும்பத்திலிருந்து மீன ராசிக்கு பிரவேசிக்கும் சனீஸ்வரர் - முழு விபரங்கள்!

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் சனிப்பெயர்ச்சி விழா நாளை நடைபெற உள்ளது.
Tirunallar Dharbaranyeswarar Temple
Tirunallar Dharbaranyeswarar Templeimg credit - thetempleguru.com
Published on

புதுவை மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறு பகுதியில் பிரசித்தி பெற்ற தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனீஸ்வரர் கிழக்கு நோக்கி அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் சனிக்கிழமைதோறும் பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.

இக்கோவிலில் 2½ ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி விழா வெகு விமர்சையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு வாக்கிய பஞ்சாங்கப்படி நாளை (மார்ச் 6-ந் தேதி) காலை 8.24 மணி அளவில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. அது சமயம் சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பிரவேசிக்க உள்ளார்.

சனிப்பெயர்ச்சி நேரத்தை கணக்கீட்டு, சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, தீபாரனைகள் நடைபெற உள்ளன.

மேலும் பக்தர்கள் நெரிசல் இன்றி தரிசனம் செய்ய, இலவச தரிசனம், கட்டண தரிசனம், வி.ஐ.பி. தரிசனம் என 3 விதமான கட்டண தரிசனத்திற்காக 15 டிக்கெட் கவுண்ட்டர்களை கோவில் தேவஸ்தான நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

இதையும் படியுங்கள்:
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் சனிப்பெயர்ச்சி விழா - இந்த ஆண்டா? அடுத்த ஆண்டா?
Tirunallar Dharbaranyeswarar Temple

அந்த வகையில் சனீஸ்வர பகவானை தரிசனம் செய்ய, இலவச தரிசன வரிசை மற்றும் ரூ.300, ரூ.600, ரூ.1000 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் சிரமத்தை தவிர்க்க இதில் ஏதாவது ஒரு கட்டண டிக்கெட்டை தேர்வு செய்து சிறப்பு தரிசனத்தில் சனீஸ்வர பகவானை வழிபாடு செய்யலாம். மேற்சொன்ன அனைத்து டிக்கெட்டுகளும் தேவஸ்தானம் அங்கீகரித்த கவுண்ட்டர்களில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்றும் டிக்கெட், பாஸ் போன்ற அனைத்திலும் தேவஸ்தான ‘ஹாலோகிராம்’ ஒட்டப்பட்டிருக்கும் என்பதால் பக்தர்கள் வெளிநபர்களிடம் போலி டிக்கெட்டுகளை வாங்கி ஏமாற வேண்டும் என்றும் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் மாற்றுத்திறனாளி பக்தர்கள் சனீஸ்வரர் பகவானை சிரமமின்றி தரிசனம் செய்ய தனிப்பட்ட வழியும், சிறப்பு தரிசனம் செய்ய வசதியும் செய்யப்பட்டுள்ளது.

திருநள்ளாறு வரும் பக்தர்களின் வசதிக்காக கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்கு போலீசாரின் ஒத்துழைப்புடன் குழந்தைகளுக்கு தேவையான பால், பிஸ்கட் உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்குவதற்கும் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

சனிப்பெயர்ச்சியையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும் பக்தர்களின் வசதிக்காக, திருநள்ளாறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தற்காலிக பஸ் நிறுத்தம் அமைப்பது, பஸ் நிலையத்தை மேம்படுத்துவது,

அடிப்படை வசதிகள், பக்தர்கள் தங்கள் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு, தனிப்பட்ட வாகன நிறுத்தும் இடங்கள் என சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பஸ் நிலையத்தில் இருந்து கோவில் அருகே பக்தர்கள் சிரமமின்றி சென்று வருவதற்கு பேட்டரி கார்களை இயக்குவது, வரிசை காம்ப்ளக்ஸ் பகுதிகளில் பொது மக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது.

நளன் குளத்தில் அனைத்து பக்தர்களும் சவுகரியமாக நீராடும் வகையில், குளம் முழுவதும் சீரமைக்கப்பட்டு புதிய நீர் நிரப்பப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாட்டை தவிர்க்க, குளத்தில் நீராடும் பக்தர்கள் சோப்பு, ஷாம்பு, சீயக்காய் போன்றவற்றை பயன்படுத்த கூடாது என்றும் கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் பெண்கள் குளித்துவிட்டு உடை மாற்ற வசதியாக அதிகளவில் உடைமாற்றும் அறைகள் அமைக்கப் பட்டுள்ளன.

இந்த சனிப்பெயர்ச்சி விழாவுக்கு இலவச கட்டுப்பாட்டு அறை எண்கள் 1070, 1077 மற்றும் அவசர உதவிக்கு 83002-61071 என்ற செல்போன் எண்ணை பக்தர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் கோவில் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு நடைபெறும் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் கூடுதலாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
விதி மாறும் திருத்தலம்! திருநள்ளாறு சென்று பரிகாரம் செய்வது எப்படி?
Tirunallar Dharbaranyeswarar Temple

மேலும் இந்தாண்டு சனிப்பெயர்ச்சி விழாவை வெகு விமரிசையாக நடத்துவதற்காக புதுச்சேரி அரசால் ரூ.2.¼ கோடி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com