விமர்சனம்: வேடுவன் - வெப் தொடர்!
ரேட்டிங்(3 / 5)
ஒரு போலீஸ் என் கவுன்டர் அதிகாரி முன்னாள் காதலியை சந்திக்கிறார். காதலி தன் முன்னாள் காதலனை வீட்டிற்கு அழைத்து செல்கிறார். கணவர், குழந்தைகளை அறிமுகம் செய்து வைக்கிறார். அனைவரும் அன்பாக பழகுகிறார்கள். ஒரு கட்டத்தில் அந்த அதிகாரி தான் என் கவுன்டர் செய்ய வேண்டியது முன்னாள் காதலியின் கணவரை என்று தெரிய வருகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் அந்த அதிகாரி என்ன செய்வார் என்ற ஒரு பரபரப்பான, ஆர்வத்தை தூண்டும் கதையை 'வேடுவன்' வெப் தொடரில் வைத்துள்ளார் இயக்குநர் பவன்குமார். இந்த தொடர் ஜி 5 ஒரிஜினல் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
மொத்தம் ஏழு எபிசோட்களை கொண்ட தொடரின் முதல் இரண்டு எபிசோட்கள் மெதுவாக நகர்கிறது. என்கவுன்டர் செய்ய வேண்டிய நபர் முன்னால் காதலியின் கணவர் என்று தெரிந்த பிறகு கதை வேகம் எடுகிறது. என்கவுன்டர் நடக்கபோகிறதா? இல்லையா? என்று கதை நகர்ந்து கொண்டிருக்கும் போது ஒரு உளவியல் ரீதியான பிரச்சனைக்குள் சென்று தொடரை இன்னும் ரசிக்க வைக்கிறது.
சினிமாவிலும், தொலைக்காட்சி தொடரிலும் தனது முழு திறமையை வெளிப்படுத்த முடியாத நடிகர்களுக்கு ஓடிடி தொடர்கள் ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது என்று சொல்லாம். பல தொலைக்காட்சி தொடர்களில் அப்பாவி கணவனாக நடித்து வரும் சஞ்சீவ் வெங்கட் இந்த வேடுவனில் குறைவான வசனங்கள் பேசி அமைதியான தாதா வாக மாஸாக நடித்திருக்கிறார்.
முன்னால் காதலியாகவும், இரண்டு குழந்தைகளின் தாயாகவும் வரும் 'பாரதி கண்ணம்மா' வினுஷா தேவி இந்த தொடரின் கூடுதல் பலம். முன்னாள்காதலனை பார்த்து பூரிப்படையும் போதும், கணவன் மீது அன்பு செலுத்தும் போதும் நடிப்பில் நம் வீட்டில் இருக்கும் குடும்ப தலைவியை கண் முன் நிறுத்துகிறார்.
கூலி படத்திற்கு பிறகு கண்ணா ரவி தனது மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்த இந்த வேடுவன் சிறந்த வாய்ப்பாக அமைந்து விட்டது. தனது எக்ஸ் காதலியை சந்திக்கும் போது அடையும் பரவசம், காதலியின் கணவனை என்கவுன்டர் செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் தவிக்கும் தவிப்பு என நடிப்பில் சபாஷ் போட வைக்கிறார் கண்ணா ரவி. தமிழ் சினிமாவில் சம காலத்தில் கிடைத்த சிறந்த இளைய தலைமுறை நடிகர் என உறுதியாக சொல்லலாம்.
சினிமாவை ஒப்பிடுகையில் ஓடிடி தொடர்களில் ஒரு விஷயத்தை ஆழமாக விளக்கி (detailing) சொல்லலாம். இந்த வேடுவன் தொடரில் டீடெயிலிங் திரைக்கதையில் சில இடங்களில் சற்று குறைவாக உள்ளது. இருப்பினும் முன்னாள் காதலியின் கணவனை சுட்டுக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் என்ற ஒன்லைனில் திரில்லர், காதல், எமோஷனல் என்ற மூன்றையும் சரி விகிதத்தில் தந்ததற்கு டைரக்டரை பாராட்டலாம்.
தன் எக்ஸ் காதலியின் மஞ்சள், குங்குமத்தை காக்க போராடும் ஹீரோக்களை மையமாக கொண்டு 'நெஞ்சில் ஓர் ஆலயம்' முதல் பல படங்கள் வந்துள்ளன. ஆனால் தனது காதலியின் கணவனை என்கவுன்டர் செய்ய வேண்டிய அவசியம் வந்தால் ஹீரோ எப்படி ரியாக்ட் செய்வார் என்ற பின்னணியில் வேடுவன் வந்துள்ளது.
இந்த வார இறுதியில் (weekend) சரியான ஓடிடி விருந்து என இந்த தொடரை சொல்லாம். இந்த தொடரை பார்த்து முடித்த பின் கணவர்கள் பார்த்த பின் தங்களது பழைய காதலியின் நினைவு வந்து தங்களை அறியாமல் பகிர்ந்து கொண்டால் மனைவிகள் பெருந்தன்மையோடு தங்கள் கணவரை மன்னித்து விடவும். வேடுவன்-பார்த்து ரசிக்கலாம்.