
ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் வெளியாகும் படங்களை போல் ஒடிடி தளங்களில் வெளியாகும் படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது. அந்த வகையில், இன்று ஒடிடியில் வெளியாகும் 'குட் பேட் அக்லி' படத்தை பற்றி பார்க்கலாம்.
தமிழ் திரையுலகில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வருபவர் நடிகர் அஜித். இவரது நடிப்பில் கடைசியாக 2023-ல் துணிவு திரைப்படம் வெளியான நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதம் விடாமுயற்சி ரிலீஸ் ஆகி ரசிகர்களை குஷி படுத்தியது. விடாமுயற்சி திரைப்படம் அஜித் பட சாயலில் இல்லாமல் ரசிகர்களை ஏமாற்றி இருந்தாலும் பாக்ஸ் ஆபிசில் ஹிட்டாகி உலகளவில் ரூ.143 கோடி வசூல் செய்திருந்தது.
அஜித்குமார் நடிப்பில் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி வெளியான படம் 'குட் பேட் அக்லி'. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், உருவான இந்த படம் அஜித்தின் 63-ஆவது படமாகும்.
இந்த படத்தில் விடாமுயற்சி படத்தை தொடர்ந்து நடிகை திரிஷா தான் அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர் பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், சிம்ரன், பிரபு, ரகுராம், யோகிபாபு, சைன் டாம் சாக்கோ உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தில் அஜித்திற்கு வில்லனாக இளம் நடிகரான அர்ஜுன் தாஸ் நடிப்பில் அசத்தியிருந்தார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ரூ.250 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மும்பையில் ‘டான்’னாக இருக்கும் நாயகன், மனைவியின் பேச்சுக்கு கட்டுப்பட்டு புதிதாக பிறந்த குழந்தையை கூட பார்க்காமல் சிறைக்கு சென்று திருந்தி வாழ்கிறார். 18 ஆண்டுகள் சிறைவாசம் முடிந்து நாயகன் வெளியே வரும்வேளையில் தனது மகனை யாரோ ஒருவன் கடத்தியது தெரிகிறது. இதனால் மீண்டும் அடிதடியில் இறங்கி மகனை கடத்தியவர்களை புரட்டி எடுத்து மீட்பதே கதை.
என்னதான் குட் பேட் அக்லி திரைப்படம் ஒரு சில கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு இப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருவது மட்டுமின்றி மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று பிளாக் பஸ்டர் வெற்றி பெற்றது. குறிப்பாக அஜித் ரசிகர்களால் மட்டுமல்லாமல் பொதுவான ரசிகர்களாலும் இப்படம் ரசிக்கும் வகையில் இருந்ததாக கூறப்படுகிறது. முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பிய இப்படம் இதுவரை ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அஜித்தின் படங்களில் அதிக வசூலித்து நம்பர் 1 படமாகவும் 'குட் பேட் அக்லி' சாதனை புரிந்துள்ளது.
இந்த நிலையில், இப்படம் எப்போது ஒடிடியில் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இன்று (8-ந் தேதி) நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது. இன்று நெட்பிளிக்ஸில் வெளியாகும் இந்த படத்தை ரசிகர்கள் தங்கள் குடும்பத்துடன் பார்த்து என்ஜாய் செய்யலாம்.