

உலகளவில் சினிமா துறையில் வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்று ஆஸ்கர் விருதுகள். வருகின்ற 2026 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி 98வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இம்முறை விருது வழங்குதல் மற்றும் விருது தேர்வு செய்யும் முறையில் பல்வேறு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
ஆஸ்கர் விருது விழா நடைபெறுவதற்கு இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில், விருதுக்காக பல்வேறு நாடுகளில் இருந்தும் பரிசீலனைக்காக திரைப்படங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் தற்போது ஆஸ்கர் விருது பரிசீலனைக்கு இரண்டு தமிழ்ப் படங்களும் அனுப்பப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் ஆஸ்கர் விருதுக்கு இந்தியப் படங்கள் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அவ்வகையில் தற்போது தமிழ் சினிமா சார்பில் ‘கெவி’ மற்றும் ‘தலித் சுப்பையா’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் ஆஸ்கர் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
கடந்த செப்டம்பர் மாதம் பாலிவுட்டில் வெளியான ஹோம்பவுண்ட் திரைப்படம், ஆஸ்கர் விருது பரிசீலனைக்கு அனுப்பத் தேர்ந்தெடுக்கப்பட்டது. புஷ்பா-2 மறறும் கண்ணப்பா ஆகிய படங்களுடன் போட்டியிட்ட பிறகே இப்படம் தேர்வு செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது மேலும் 2 தமிழ்ப் படங்கள் இந்தியா சார்பில் அனுப்பப்பட்டுள்ளன.
ஆர்ட் ஆஃப் டிரையாங்கில்ஸ் பிலிம் கம்பெனி தயாரிப்பில், நடப்பாண்டு ஜூலை 18 ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘கெவி’. தமிழ் தயாளன் இயக்க ஆதவன், ஷீலா மற்றும் ஜாக்குலின் லீடியா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்தனர். கொடைக்கானல் மலைக்கு அருகிலிருக்கும் வெள்ள கெவி என்ற கிராமத்தில், தங்கள் வாழ்வாரத்திற்காகப் போராடும் மலைவாழ் மக்களின் வலியை உணரத்தும் படம் தான் ‘கெவி’.
சாலை வசதியும், மருத்துவ வசதியும் இல்லாமல் தினந்தினம் போராடும் மலைவாழ் மக்களின் வலியைப் பேசியது இந்தப் படம். அறிமுக நடிகராக ஆதவன் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்த போதிலும், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இருப்பினும் ஆஸ்கர் விருதுக்கு பரிசீலனைக்கு அனுப்ப இப்படம் தேர்வாகியுள்ளது. பெரிய நடிகர்களின் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ரசிகர்கள், கெவி போன்ற நல்ல படைப்புகளை அங்கீகரிக்கத் தவறி விட்டனர்.
கிரிதரண் இயக்கிய 'தலித் சுப்பையா: கலககாரர்களின் குரல்' என்ற ஆவணப் படமும், ஆஸ்கர் தகுதி செயல்முறையின் ஒருபகுதியாக அகாடெமி திரையிடல் அறைக்கு அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆவணப் படத்தை யாழி பிலிம்ஸ் உடன் இணைந்து, நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.
தமிழ் சினிமாவில் நடப்பாண்டில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. இதில் 1 திரைப்படம் மற்றும் 1 ஆவணப் படம் மட்டுமே ஆஸ்கர் விருது பரிந்துரைக்குத் தேர்வாகி இருக்கிறது. ஆஸ்கர் விருது வழங்கும் விழாவிற்கு இன்னும் சில மாதங்கள் இருப்பதால், தேர்வாகி இருக்கும் தமிழ்ப் படங்களுக்கு விருது கிடைக்குமா கிடைக்காதா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.