
தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுதும் திரையுலகம் ஒட்டுமொத்தமாக எதிர்நோக்கும் பட வெளியீடு தீபாவளி தான். கோடை விடுமுறை வெளியீடுகளுக்கு அடுத்த இடம் தீபாவளிப் படங்களுக்கு இருக்கும். தமிழகத்தில் கடந்த முப்பது ஆண்டுகளாக தீபாவளிப் படங்களில் கோலோச்சி வந்தவர்கள் முன்னணி நடிகர்கள். முதலில் எம்ஜிஆர் சிவாஜி, பின்னர் ரஜினி கமல், அடுத்து விஜய் அஜீத் எனத் தீபாவளிப் போட்டி களைகட்டும். தங்கள் மனங்கவர்ந்த நடிகர்கள் படம் வெளிவராத தீபாவளியை கறுப்பு தீபாவளியென ரசிகர்கள் துக்கம் அனுஷ்டிப்பது வழக்கம். அப்படி இந்தத் தீபாவளி பெரிய நடிகர்கள் படம் எதுவுமின்றி சற்று களையிழந்து தான் இருக்கிறது. வரும் வரும் என்று எதிர்பார்ப்பில் இருந்த விடா முயற்சி என்ன நிலையில் இருக்கிறது என்றே தெரியவில்லை. சூர்யாவின் கங்குவா நவம்பர் 14ஆம் தேதிக்குச் சென்று விட்டது. இருந்தும் அடுத்த கட்ட பிரபலங்களின் படங்கள் வெளியாகின்றன. அப்படி இந்த ஆண்டு பல மொழிகளில் வெளியாகும் படங்களைப் பற்றிப் பார்ப்போம்.
அமரன்:
சிவகார்த்திகேயன்... இப்பொழுது குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி என்றால் இவர் பெயர் அதில் கண்டிப்பாக இருக்கிறது. இளைஞர்கள் முதல் சிறுவர் சிறுமியர் ரசிகர்களாக வைத்திருக்கிறார். இவர் நடிப்பில் ராஜ்கமலின் தயாரிப்பில் வெளியாகும் படம் அமரன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்தப் படத்திற்கு முதலில் இருந்தே ஒரு எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கிறது. லைவ் லொகேஷன்கள், சாய் பல்லவி கதாநாயகியாக, முகுந்த் என்ற ராணுவ வீரரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களைத் தழுவி எடுக்கப்படும் இந்தப் படம் பெரிய வெற்றி பெரும் என்று திரையுலகம் நம்புகிறது.
பிளடி பெக்கர்:
இயக்குனர் நெல்சனின் தயாரிப்பில் சிவபாலன் சம்பத்குமார் இயக்கத்தில் கவின் நடிப்பில் வெளியாகும் படம் தான் ப்ளடி பெக்கர். பிளாக் காமடி என்ற ஜானரில் உருவாகும் இந்தப் படம் ஒரு கறுப்புக் குதிரையாக வெற்றியை ஈட்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். காமெடியை நம்பி மட்டுமே களம் இறங்கி இருக்கிறார்கள். சமீபத்தில் இந்தப் பட ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய கவின், தீபாவளிக்கு நான்கு நாட்கள் விடுமுறை. மூன்று படங்கள் என்ன இன்னும் ஒரு படம் கூட வரலாம் என்று சொன்னார். கவினைத் தவிர பெரிதாக நட்சத்திரக் கூட்டம் இல்லையென்றாலும் நெல்சன் பாணி காமடி ஒர்க் ஆகும் என்று நம்பி வருகிறார்கள்.
பிரதர்:
ஜெயம் ரவி ப்ரியங்கா மோகன் நடிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் வரும் படம் பிரதர். அக்மார்க் குடும்பப்படமான இது தீபாவளிக்குத் தான் வர வேண்டும் என்று நம்பிக்கையுடன் வருகிறார்கள். ராஜேஷுக்கும் சரி ரவிக்கும் சரி ஒரு பெரிய பிரேக் வேண்டி இருக்கிறது. தொடர் தோல்விகளுக்குப் பிறகு ராஜேஷ் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். பொன்னியின் செல்வன் வெற்றிக்குப் பிறகும், சில பல சொந்த பிரச்சினைகளுக்குப் பிறகும் ஜெயம் ரவி இந்தப் படத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். பால் டப்பா பாடிய மக்காமிஷி பாடல் வைரல் ஹிட் அடித்திருக்கிறது. படமும் ஹிட் அடிக்குமா 31 ஆம் தேதி தெரிந்துவிடும்.
சிங்கம் அகைன்:
நம்ம ஊர் ஹரி மூன்று பாகத்தோடும் நிறுத்தி விட்டாலும் அதைத் தழுவி இவர்கள் ஆரம்பித்த ஹிந்தி சிங்கம் நிற்பதாகத் தெரியவில்லை. அதிலிருந்து கிளைக்கதைகள் எல்லாம் கொடுத்து ஒரு போலீஸ் யுனிவெர்சை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் ரோஹித் ஷெட்டி. ஐந்து நிமிடத்திற்கும் மேல் ஒரு ட்ரைலரை வெளியிட்டு இருக்கிறார். அதைப் பார்த்தாலே படம் பார்த்த நிறைவு நமக்கு வந்து விடுகிறது. ட்ரைலர் இப்படி என்றால் படம் எப்படியென்று யோசித்துப் பாருங்கள் என்று சூளுரைத்திருக்கிறார். அக்ஷய் குமார், அஜய் தேவ்கான், கரீனா கபூர், ரன்பிர் கபூர், தீபிகா படுகோன், என நட்சத்திர பட்டாளங்களுடனும், பலவிதமான சண்டைக்காட்சிகளுடனும் வெளியாகிறது சிங்கம் அகைன்.
பூல் புலையா 3:
சந்திரமுகி என்று ஒரே படம் தான் வந்தது. அதை வைத்து அங்கே மூன்று பாகங்கள் ஓட்டி விட்டார்கள். அதுவும் இப்போது ஸ்த்ரீ 2 என்ற படம் வெளியாகித் தொள்ளாயிரம் கோடி சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது. பேயும் காமெடியும், எங்கும் வெல்லும். பாலிவுட்டின் சுந்தர் சியான அனீஸ் பஸ்மி இயக்கத்தில் வெளியாகும் இந்தப் படம் கார்த்திக் ஆர்யன், வித்யா பாலன், மாதுரி தீக்ஷித், த்ரிப்தி திம்ரி நடிப்பில் வெளியாகிறது. சிங்கம் ரசிகர்கள் வேறு, எங்கள் ரசிகர்கள் வேறு. ரசிகர்கள் இரண்டு படங்களையும் வெற்றி பெறச் செய்வார்கள் என நம்புகிறார்கள் பாலிவுட்டில்.
லக்கி பாஸ்கர்:
துல்கர் சல்மான் நடிப்பில் ஒரு பான் இந்தியா படமாக வெளியாகும் லக்கி பாஸ்கர் படம் தெலுங்கு படவுலகில் ஒரு எதிர்பார்ப்பைக் கிளப்பி இருக்கிறது. உல்ப் ஆப் வால் ஸ்ட்ரீட் படத்தைப் போல உருவாகியுள்ள இந்தப் படம் துல்கரின் இன்னொரு முகத்தை மக்களுக்குக் காட்டும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் இயக்குனர் வெங்கி அட்லூரி.
இப்படி பல மொழிகளில் படங்கள் போட்டி போட்டுக் கொண்டு வெளியாகும் தீபாவளியாக, இந்த ஆண்டு இருக்கிறது. இதைத் தவிர இன்னும் சில படங்கள் வரக்கூடும். ஆனால் திரையரங்குகள், ஷோக்கள் கிடைப்பதில் தொந்தரவு இருக்கும். இருந்தும் ஒரு தீபாவளிக்கு பத்து படங்கள்வரை வெளியாகி ஓடி ஓடிப் பார்த்த காலம் எல்லாம் இப்பொழுது மலைஏறிப் போய் விட்டது. இரண்டாவது படமே வரக் கூடாது என்று கொடி பிடிக்கும் காலம் இது. இந்தச் சூழ்நிலையில் இவ்வளவு முக்கியமான படங்கள் பலவிதமான எதிர்பார்ப்புகளுடன் வெளியாவது சற்றே உற்சாகத்தை ரசிகர்களுக்குக் கொடுத்திருக்கிறது. பெரிய நடிகர்கள் படம் வெளியாகவில்லை என்றாலும் தொடர் விடுமுறைகள், குடும்பத்துடன் கூடி இருத்தல் என ரசிகர்கள் இந்தத் தீபாவளியை திரையரங்குகளில் கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் தான் இருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். எது வெற்றி எது தோல்வி என்பதை விடச் சினிமா இல்லாமல் தீபாவளிக் கொண்டாட்டங்கள் என்றும் நிறைவுறுவதில்லை என்பதும் உண்மை.