
தமிழ் திரையுலகில் இந்தாண்டு அதிகளவில் படங்கள் ரீலிஸ் செய்யப்பட்டன. அதில் பெரிய பட்ஜெட் படங்களை பின்னுக்கு தள்ளி குறைந்த பட்ஜெட்டில் எடுத்த படங்கள் வசூலில் சாதனை படைத்தன. அதேபோல் பெரிய அளவில் வெற்றி பெரும் என்று அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய டாப் ஹீரோக்களின் படங்களும் தோல்வியடைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தின. இந்த வகையில் 2025-ம் ஆண்டு முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தோல்வியை தழுவிய டாப் ஹீரோக்களின் 10 படங்களை பார்க்கலாம்.
நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் மணிரத்தினம் கூட்டணியில் 38 வருடங்கள் இடைவெளிக்கு பிறகு உருவான படம் 'தக் லைஃப்'. திரிஷா, அமிராமி, சிம்பு, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படம் ரீலிஸ் ஆவதற்கு முன் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம், வசூலில் அதன் பட்ஜெட்டில் சுமார் 20% மட்டுமே மீட்க முடிந்ததாக சில தரவுகள் தெரிவிக்கின்றன.
மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த 'விடாமுயற்சி', சுமார் ரூ.138 கோடி செலவில் உருவாக்கப்பட்டது. ஆனால், வசூலில் வெறும் ரூ.135 கோடியை மட்டுமே தொட்டது. அந்த வகையில் இந்த படத்திற்கும் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் ஃபிளாப் ஆனது. லைகா நிறுவனம் தயாரித்த இந்த படத்தில் அஜித்துடன், அர்ஜுன், திரிஷா, ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த படம் 'ரெட்ரோ'. சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருந்த இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் ரீலிஸ் ஆவதற்கு முன் சூர்யாவிற்கு ஒரு கம்பேக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படம் தோல்வியை தழுவியது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான படம் கூலி. ரஜினிகாந்த் உடன் சரத்குமார், சத்யராஜ், நாகர்ஜுனா, அமீர்கான், சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருந்ததால் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் படம் வெளியாவதற்கு முன்பே வசூல் வேட்டை செய்தாலும், படம் வெளியான பின் விமர்சன ரீதியாக வரவேற்பை பெறவில்லை.
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யுத் ஜமால் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் மதராஸி. அமரன் திரைப்படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு விமர்சன ரீதியாக இப்படம் வெற்றியைக் கொடுத்தாலும் பட்ஜெட்டை கணக்கிட்டால் வணிக ரீதியாக குறைவாகவே வசூலித்திருக்கிறது.
இயக்குநர் அருண் குமார் இயக்கிய இந்தப் படத்தில் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ், துஷாரா விஜயன், சித்திக் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், வசூலில் எதிர்பார்த்த அளவுக்கு உயரவில்லை.
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கி, தயாரித்த ஏஸ் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மிணி வசந்த், யோகி பாபு, பி.எஸ்.அவினாஷ், பப்லு பிரிதிவிராஜ், திவ்யா பிள்ளை, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். ரசிகர்களுக்கு திருப்தி அளித்த இந்த படம் வசூலில் திருப்தியளிக்காமல் தோல்வியை சந்தித்தது.
சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ், ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் தெலுங்கில் அமோக வரவேற்பை பெற்ற நிலையில் தமிழில் தோல்வியை சந்தித்தது.
இயக்குநர் ஷங்கர் - ராம் சரண் காம்போவில் உருவாகி ‘கேம் சேஞ்சர்’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ஜெயராம், கியாரா அத்வானி, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இந்த படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார். ரூ.300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம், சுமார் ரூ.186.25 கோடி மட்டுமே வசூலித்து தோல்வியை தழுவியது. இந்த படத்தை பார்க்க சென்று, பலர் ஏமாற்றத்துடன் திரும்பியதாகவும் சில தரவுகள் கூறுகின்றது.
இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவான இந்த படத்தில் அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், மமிதா பைஜு, மிஷ்கின் மற்றும் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் கலவையான வரவேற்பைப் பெற்றாலும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. இந்த படம் அருண் விஜய்க்கு திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்த்த நிலையில் தோல்வியில் முடிந்தது.
இந்த பட்டியலில் காதலிக்க நேரமில்லை, சிக்கந்தர், வார் 2, மாரீசன், அகத்தியா, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், கிங்ஸ்டன் போன்ற படங்களும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி கடைசியில் படுதோல்வியை சந்தித்த படங்களாகும்.