விமர்சனம்: வணங்கான் - 'நந்தாவும், பிதாமகனும் சேர்ந்த கலவை இவன்'
ரேட்டிங்(2.5 / 5)
‘நாச்சியார்’ படத்திற்குப் பிறகு பாலா இயக்கத்தில். வெளிவந்துள்ள படம் 'வணங்கான்.' இப்படம் அறிவிக்கப்பட்ட நாள் முதல் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த எதிர்பார்ப்பை திரையில் பாலா பூர்த்தி செய்துள்ளாரா? என்பதைப் பார்க்கலாம்.
வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி கோட்டி (அருண் விஜய்), மாற்றுத்திறனாளிகள் மீது நிகழ்த்தப்படும் அநியாயத்தைக் கண்டு கோபம் கொண்டு கொதித்து எழுந்து நியாயம் கேட்பவர். தன் தங்கையுடன் வசித்து வருகிறார். ஒரு மோசமான செயலில் ஈடுபடும் இருவரை கொடூரமாகக் கொலை செய்து விடுகிறார். இந்தக் கொலையை தானே செய்ததாக ஒப்புக்கொள்கிறார். ஆனால், ஏன் கொலை செய்தார் என்ற காரணத்தை எவ்வளவு கேட்டும் சொல்ல மறுக்கிறார். அதற்கான காரணத்தைக் கண்டறிய முயல்கிறது காவல்துறை. இதற்கான காரணம் என்ன என்பதையும், மாற்றுத்திறனாளிகளின் உணர்வுகளை இன்னொரு மாற்றுத்திறனாளியால்தான் புரிந்து கொள்ள முடியும் எனவும் சொல்ல வந்திருக்கிறார் பாலா.
அழுக்கான விளிம்பு நிலை மனிதர்கள், மனதில் ஆறாத வலியும், கோபமும் கொண்ட ஹீரோ, அதீத வன்முறை, சோகமான கிளைமேக்ஸ் என இதற்கு முன்பு தனது படங்களில் வைத்த அதே விஷயங்களை அப்படியே இந்த வணங்கானிலும் வைத்திருக்கிறார் பாலா.
படத்தின் முதல் பாதி முடிவில்தான் படம் கதைக்குள் செல்கிறது. போலீஸ் விசாரணை, நீதிமன்றம் என இரண்டாம் பாதியில் ஒரு சில காட்சிகள் ரசிக்கும்படி உள்ளன. குறிப்பாக, போக்சோ சட்டம் எப்படித் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்று புரிய வைக்கும் நீதிமன்றக் காட்சி நன்றாவே உள்ளது. இந்தக் காட்சியில் நீதிபதியாக வரும் மிஸ்கினின் நடிப்பு மிக யதார்த்தமாக உள்ளது.
1995ல் சினிமாவில் அறிமுகமான அருண் விஜய் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ‘வணங்கான்’ படத்தில் நடிப்பில் இன்னொரு முகத்தைக் காட்டி உள்ளார். வாய் பேச முடியாத, காது கேட்காத மனிதராக நடித்து 'அபாரம் ' என்று சொல்ல வைக்கிறார். அருணின் மாறுபட்ட நடிப்பை வெளிக்கொண்டு வந்த பாலாவுக்கு சபாஷ் போடலாம். தங்கையாக நடிக்கும் 'ரிது' அருண் விஜய்க்கு இணையாக நடிப்பில் ஸ்கோர் செய்துள்ளார்.
பாலா இயக்கத்தில் முன்பு வெளிவந்த ‘பிதாமகன்’ படத்தில் விக்ரம் கேரக்டரின் சாயல் இந்த ‘வணங்கான்’ ஹீரோ கேரக்டரிலும் உள்ளது. ‘நந்தா’ படத்தில் வந்த காட்சிகளின் சாயல் கிளைமேக்ஸில் உள்ளது. பாலாவின் பல படங்களின் நினைவுகள் இந்த வணங்கானை பார்க்கும்போது வருவது ஒரு குறையே. 'சாம் சி.எஸ்' பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்க்கவில்லை. ஆனால், ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கிறது.
பாலியல் குற்றவாளிகளுக்கு கொடூரமான தண்டனை வழங்க வேண்டும் என சமூக ஊடகங்களில் சொல்லப்படும் கருத்தை அப்படியே படத்தில் வைத்திருக்கிறார் டைரக்டர். பாலியல் குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வையும், சட்டபூர்வமான அணுகுமுறையையும் இந்த படம் விவாதிக்கவில்லை. இதெல்லாம் இந்தப் படத்தில் இருந்திருந்தால் இந்த வணங்கானை வணங்கி இருக்கலாம். மற்றபடி பாலா தான் இயக்கிய சில படங்களை இணைத்து ரீமேக் செய்து தந்தது போன்ற உணர்வுதான் படம் பார்க்கையில் வருகிறது.