புத்தாண்டு கொண்டாட்டத்தை தொடர்ந்து வருகிற 14-ந்தேதி தமிழகத்தின் அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு ரசிகர்களை பரவசப்டுத்த பல தமிழ் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன. ஒவ்வொரு ரசிகனும் தனது தலைவரின் படம் வெளியாகுமா என்று ஆவலுடம் எதிர்பார்த்து காத்திருப்பார்கள். அவ்வாறு வெளியாகும் பட்சத்தில் தலைவரின் படத்தை கட்ஆவுட் வைப்பது முதல் பால் அபிஷேகம் செய்வது வரை பல்வேறு வகைகளில் தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்துவார்கள். மேலும் பொங்கல் தொடர் விடுமுறையை முன்னிட்டு புது படத்திற்கு செல்ல மக்கள் ஆர்வம் காட்டுவார்கள்.
அந்த வகையில் இந்த ஆண்டும் (2025) பொங்கல் வெளியீடாக வரவிருக்கும் சில தமிழ் படங்கள் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த பொங்கலுக்கு வெளியாகும் தமிழ் படங்களின் பட்டியல் இதோ.
அஜித்குமார் நடித்த விடாமுயற்சி படம் பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவித்து இருந்ததால் அனைத்து திரையரங்குகளும் அந்த படத்துக்கே ஒதுக்கப்பட்டு மற்ற படங்களின் ரிலீஸ் தள்ளிப்போனது. ஆனால் இப்போது திடீரென்று விடாமுயற்சி பொங்கலுக்கு வெளிவராது என்று படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.
இதையடுத்து வணங்கான், மதகஜராஜா, காதலிக்க நேரமில்லை, மெட்ராஸ்காரன், நேசிப்பாயா, தருணம், கேம் சேஞ்சர் ஆகிய 7 படங்கள் பொங்கல் விருந்தாக திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கடைசி நேரத்தில் மேலும் சில படங்கள் இதில் இணையலாம் என்றும் எதிர்பார்க்கப்டுகிறது.
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் மற்றும் கியாரா அத்வானி நடித்த பான்-இந்திய அரசியல் அதிரடியான கேம் சேஞ்சர் ரூ. 400 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது. இந்த நிலையில், கேம் சேஞ்சர் படம் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 7 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வணங்கான் படம் பாலா இயக்கத்தில் உருவாகி உள்ளது. இதில் அருண் விஜய், ரோஷினி, சமுத்திரக்கனி, அருள்தாஸ், சண்முகராஜன், மிஷ்கின், ரிதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள திரைப்படம் காதலிக்க நேரமில்லை. ஜெயம் ரவி, நித்யா மேனன் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
வாலிமோகன் இயக்கத்தில் தயாராகி உள்ள மெட்ராஸ்காரன் படத்தில் ஷேன் நிகாம், கலையரசன், நிஹாரிகா ஆகியோர் நடித்துள்ளனர். மலையாள நடிகரான ஷேன் நிகாம் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக களம் இறங்கியுள்ளார்.
நேசிப்பாயா படம் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகி உள்ளது. இதில் மறைந்த நடிகர் முரளி மகன் ஆகாஷ் முரளி நாயகனாகவும், இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் நாயகியாகவும் வருகிறார்கள்.
மதகஜராஜா படத்தை சுந்தர்.சி இயக்கி உள்ளார். இதில் விஷால் நாயகனாக வருகிறார். வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, சந்தானம் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படம் 12 ஆண்டுகளுக்கு மேல் கிடப்பில் கிடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
'தேஜாவு' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கியுள்ள தருணம் படத்தில் கிஷன் தாஸ் மற்றும் ஸ்ம்ருதி கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர்.
பொங்கல் விருந்தாக அதிக படங்கள் வருவது ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.