
நான்கு கோபக்கார இளைஞர்கள். வேலையின்றி திரியும் இவர்களை ஒரு கடத்தல் வேலைக்குப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார் அனி (சூரஜ் வெஞ்சரமூடு). இவர் ரீமா என்ற பெண்ணிடம் பணியாற்றுகிறார். அவரோ கட்டைப் பஞ்சாயத்துகள் செய்து ஒரு பெண் தாதாவாக வலம் வருகிறார். நண்பர்களும் அந்த வேலையைப் பலவித ஆபத்துகளையும் கடந்து சாதிக்கிறார்கள். கோடிக்கணக்கில் பணத்தைப் பார்த்தபிறகு தங்கள் வேலைக்கு இவ்வளவு பங்கு வேண்டும் என்று கேட்க அங்கு ஆரம்பிக்கிறது பிரச்சினை. தங்கள் கஷ்டத்திற்கு மட்டுமல்ல. முதலும் இறுதியுமாக இந்த வேலையை நாங்கள் செய்கிறோம். இதன்பிறகு குடும்பத்திற்காகக் கிடைக்கும் பணத்தைக் கொண்டு வாழப் போகிறோம் என்று அணியிடம் சொல்கிறார்கள். அது எப்படி அவர்கள் குடும்பத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இவர்கள் அதற்குப் பிறகுச் சந்திக்கும் பிரச்சினைகள் என்னென்ன. இறுதியில் என்ன ஆனது என்பது தான் 'முரா'.
மலையாளத்திலிருந்து ரத்தமும் வன்முறையுமாக வந்திருக்கும் மற்றொரு படம் தான் இது. நான்கு இளைஞர்களும் அந்தப் பாத்திரங்களுக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார்கள். ஹ்ரிது, யதுகிரிஷ்ணன், அனுஜித், ஜுபின் என நால்வரும் அடிதடியில் ஈடுபட்டு திக்கின்றித் திரியும் கோபக்கார இளைஞர்களாக நடித்துள்ளார்கள். இவர்களுக்கு உதவி செய்யும் மதுரை இளைஞர்கள் இருவர் சுப்ரமணியபுரத்தை நினைவுக்குக் கொண்டு வருகிறார்கள். "பணத்துக்கு இல்ல மாப்ள பழக்கத்துக்குச் செஞ்சோம்" என்று அதே போல வசனமும் பேசுகிறார்கள். ஆரம்பத்தில் இவர்கள் அவர்களை ஏமாற்றிவிடுவார்களோ என நினைக்க, பின்னர் அந்த நான்கு பேரும் இவர்கள் வாழ்க்கையில் ஒன்றாகிறார்கள்.
அடிதடி, கொள்ளை, கொலை, பழி வாங்குதல் எனப் பரபரப்பாக நகர்கிறது படம். இயக்குனர் முஹம்மத் முஸ்தபா, 'கப்பேலா' என்ற அற்புதமான படத்திற்குப் பிறகு இயக்கியிருக்கும் இரண்டாவது படம் இது. இதில் ரத்தம் வன்முறையைக் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த இளைஞர்கள் செய்வது தவறாகவே இருந்தாலும் ஒரு கட்டத்தில் அவர்கள் வெல்ல வேண்டும் என்ற பதைபதைப்பை பார்ப்பவர்களுக்கு ஏற்படச் செய்கிறார். அமைதியான வில்லனாகச் சூரஜ் வெஞ்சரமூடு. தூக்கத்தில் எழுந்து நடிக்கச் சொன்னால் கூடப் போதும். நடித்திருப்பார். இது போன்ற வேடங்கள் அவருக்கு மிகவும் இலகுவானவை.
நண்பர்கள் நால்வரும் மதுரைக்குச் செல்வதிலிருந்து வேகம் பிடிக்கும் படம் இடைவேளைக்குப் பிறகு சற்று தடுமாறுகிறது. இப்படித் தான் நடக்கும் என்று மிகச் சுலபமாக ஊகிக்கக்கூடிய திரைக்கதை ஒரு பலவீனம். அதே போல் இரண்டு நண்பர்களுக்கு நடக்கும் ஒரு விஷயம் பின்னால் குறிப்பாக உணர்த்தப்பட்டாலும் அதைக் காட்சிப்படுத்தியதில் தெளிவில்லை. ஒரு நல்ல நடிகையான கனி குஸ்ருதியை தேவையே இல்லாத கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து வீணடித்திருக்கிறார்கள். சண்டைக்காட்சிகளையும், சேஸிங் காட்சிகளையும் இயல்பாக்க காட்சிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் பாசில் நசீர். இவ்வளவு வன்முறை தேவையா என்று சில காட்சிகளில் தோன்றவும் செய்கிறது.
வன்முறைக்கு வன்முறை தீர்வல்ல. கத்தி எடுத்தவனுக்கு முடிவும் அதன் கையில் தான். நண்பர்கள் இருக்க பயமேன் என்று மூன்றுவிதமான கதை முடிச்சுகளில் அடங்கும் வண்ணம் வந்திருக்கும் படம் தான் முரா. திரையரங்குகளில் வெளியானபொழுது சரியான வரவேற்பைப் பெறாத இந்தப் படம் அமேசான் பிரைமில் வெளியானபிறகு நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சண்டை மட்டுமே பிரதானம். நண்பர்களுக்குள் இருக்கும் நட்பு, குடும்பத்தின் மேல் உள்ள ஓட்டுதல் என்று இன்னும் சற்று கதையிலும் கவனம் செலுத்தியிருந்தால் ஒரு நல்ல வெற்றியை இந்தப்படம் திரையரங்குகளிலேயே பெற்றிருக்கும்.
ஏற்கனவே திரைப்படங்களைப் பார்த்து மக்கள் கெட்டுப் போகிறார்கள் என்ற குரல் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறது. இது போன்ற படங்களைப் பார்க்கும் இளைஞர்கள் பார்த்துவிட்டு மறந்துவிடுதல் நலம். இவர்களை ஆதர்சமாக எடுத்துக் கொண்டு விடக் கூடாது என்பது மிகவும் முக்கியமானதும் அவசியமானதுமாகும்.