
ஐம்பது வயதைக் கடந்தவர்கள் சிறு வயதில் பாண்டி, பம்பரம், தாயம், போன்றவை விளையாடியிருப்போம். அப்படி சில விளையாட்டுகள். அதில் வென்றால் கட்டு கட்டாகப் பணம். தோற்றால் குண்டடி பட்டுச் சாவு. வாழ்வில் கடனில் சிக்கி விரக்தியின் உச்சத்தில் இருக்கும் மக்கள். அடுத்த வேளை சோற்றுக்கு என்ன செய்வது எனது தெரியாமல் ஓடும் கூட்டம். பலவிதமான சிக்கல்களில் மாட்டி எப்படியாவது வெளியே வந்துவிட மாட்டோமா என்று இருப்பவர்கள். இவர்களைக் குறிவைத்து ஒரு கும்பல் ஒரு விபரீத விளையாட்டு விளையாட அழைக்கிறது. என்னவென்று தெரியாமல் வந்து மாட்டிக் கொண்டு பின்னர் பணக்கஷ்டத்திற்காக உயிரைப் பணயம் வைத்து ஆடுகின்றனர். யார் தப்பினார். யார் வென்றார். பணம் கிடைத்ததா என்பது தான் ஸ்குவிட் கேம் 2.
2021 இல் இந்தச் சீரிஸின் முதல் பாகம் வந்து சக்கைப் போடு போட்டது. ஒவ்வொரு விளையாட்டும் பரபரப்பின் உச்சத்தில் நம்மை அமர வைக்கும். அதில் வென்று கோடிக்கணக்கான பணம் வென்ற ஹீரோ மன உளைச்சலில் தவிக்கிறார். இவ்வளவு உயிர்களைக் கொன்று எடுத்த பணம் அவரை வாட்டுகிறது. இந்த விளையாட்டை நடத்தும் கும்பலைக் கண்டு பிடித்து அதைக் கூண்டோடு அழிக்க அந்தப் பணத்தையே உபயோகிக்க நினைக்கிறார். இந்தச் செயலில் மீண்டும் அந்த விளையாட்டை விளையாடும் சூழ்நிலைக்குத் தள்ளப் படுகிறார். இறுதியில் என்ன ஆனது என்பது தான் இந்த இரண்டாம் பாகத்தின் கதை.
லீ ஜங் ஜெ - போட்டியாளர் எண் 456. இவர் தான் சீரிஸின் நாயகன். மீண்டும் ஆட்டத்திற்குள் நுழைந்து போட்டியாளர்களின் முகமூடியைக் கிழிக்கப் போராடுகிறார். பணத்தாசை கண்ணை மறைக்க இதில் விளையாட வந்துள்ள மக்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொள்கிறார். தனது உயிர் நண்பன் இதில் மாட்டிக் கொண்டதை பார்த்து அவனைக் காப்பாற்ற பாடுபடுகிறார்.
லீ பயங் அன் - இந்த விளையாட்டை நடத்துபவராக வருகிறார். இந்தப் போட்டியைக் காப்பாற்ற எந்த அளவு வேண்டுமெனில் இறங்கி அடிப்பேன் என்று பார்ப்பவர்களின் பதற்றத்தைக் கூட்டுவதில் இவரது பங்கு முக்கியமானது.
முந்நூறுக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் இருந்தாலும் வயதான தாய் அவரது மகன், தனது பாலின மாற்ற அறுவை சிகிச்சைக்குப் போராடும் நபர், காதனால் ஏமாற்றப்பட்டு கர்ப்பத்தை சுமந்து கலந்து கொண்ட பெண். அவளது காதலன். போதை மருந்துப் பழக்கமுள்ள ஒரு கிறுக்குத்தனமான பாத்திரம் ஒன்று. தனது மகளின் அறுவை சிகிச்சைக்காக விளையாட வந்துள்ள ஒரு பாத்திரம் எனப் பலர் நம் நினைவில் நிற்பது தான் இதை எழுதியவர்களின் பலம். அதிலும் சாமியார்போல வரும் ஒரு பெண், கடைசி நேரத்தில் நம்பிக்கையான ஒரு நபர் எடுக்கின்ற திடீர் முடிவு, இவையெல்லாம் நமக்கு அவர்கள்மேல் வெறுப்பையும், கடுப்பையும் ஒரு சேர கொண்டு வருகிறது.
வில்லனைக் கூடவே வைத்துக் கொண்டு அது தெரியாமல் விளையாடும் ஹீரோவின் அணிக்கு இருக்கிறதோ இல்லையோ பார்ப்பவர்களுக்கு ஒரு சங்கடம் இருந்து கொண்டே இருக்கிறது. சிறுவயது விளையாட்டுகள் கொலை விளையாட்டுக்களாக மாறுவது. மனிதர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு சாவது. இவ்வளவு பேர் செத்தால் இவ்வளவு லாபம் என்று கணக்கு பார்ப்பது என மனித மனங்களின் பேராசையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
இந்தச் சீரிஸில் முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் அரங்க அமைப்புகள். அவர்கள் தங்கியிருக்கும் இடம், செல்லும் பாதைகள், போட்டி நடக்கும் தளங்கள், அவர்களது உடுப்புகள், இசையென அனைத்தும் முதல் தரம். சாதாரண ஒரு பம்பர விளையாட்டு எப்படி உயிருக்கே வினையாகிறது என்று தெரிய வேண்டுமா?
முதல் பாகம் பார்த்தவர்களுக்கு இதில் முதல் இரண்டு எபிசோட்கள் சற்றே போரடிக்கலாம். போட்டிகள் ஆரம்பித்தபிறகு பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. அதைப் பார்க்காமல் இதைப் பார்க்கலாமா என்று கேட்டால் பார்க்கலாம். ஆனால் அதை ஒரு முறை பார்த்துவிட்டு வந்துவிடுங்கள் என்றே சொல்ல வேண்டும். அதில் நடக்கும் கயிறு இழுக்கும் போட்டிகள், கண்ணாடி பாலத்தில் நடக்கும் போட்டிகள், கிளைமாக்ஸ் எல்லாம் அற்புதமான அனுபவங்களைப் பார்ப்பவர்களுக்குக் கடத்தும்.
சீசன் இரண்டில் கூட ஐந்து ஆறு ஏழாவது எபிசோட்கள் அதுபோல் தான் வந்திருக்கிறது. எப்படி முடியப்போகிறது என்று ஆவலாகக் காத்திருக்க மிக முக்கியமான தருணத்தில் பிரேக் போட்டு அடுத்த சீசனுக்கு காத்திருங்கள் என்று தொடரும் போட்டு விடுகிறார்கள். காத்திருப்போம். வேறு வழி. பொதுவாக முதல் சீசன் போல இல்லை என்று இரண்டாவது சீசன் இல்லை என்ற பேச்சு தான் ஒலிக்கும். எப்போதடா மூன்றாவது சீசன் வரும் என்று காத்திருக்கும் ஒரு நிலை பொதுவாகவே குறைவு. அதற்குத் தகுதியான ஒரு வெப் சீரிஸ் தான் ஸ்குவிட் கேம்.