

இந்திய சினிமாவில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சகாப்தமாக நிலைத்து நிற்பவர் நடிகர் தர்மேந்திரா. பஞ்சாபின் ஒரு சாதாரண கிராமத்திலிருந்து வந்து, பாலிவுட்டின் உச்சம் தொட்ட இவரது பயணம், சூப்பர் ஹிட் படங்களால் மட்டும் நிரம்பவில்லை. பல சுவாரஸ்யமான, அதிர்ச்சிகரமான, திரைக்குப் பின்னால் நடந்த சம்பவங்களாலும் நிறைந்தது. அவற்றில் சில மறக்க முடியாத நிகழ்வுகளைப் பற்றிப் பார்ப்போம்.
1. சினிமாவுக்கு வந்ததே ஒரு தற்செயல்: பலருக்கும் தெரியாத ஒரு விஷயம், தர்மேந்திரா எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் பஞ்சாபிலிருந்து வந்தவர். அவர் 'ஃபிலிம்ஃபேர்' இதழ் நடத்திய ஒரு மாபெரும் 'திறமை தேடல்' (Talent Hunt) போட்டியில் வெற்றி பெற்றார். அந்த வெற்றிதான், அவருக்கு மும்பைக்கும், பாலிவுட் உலகிற்கும் நுழைவுச் சீட்டைக் கொடுத்தது.
2. Phool Aur Patthar' (1966): தர்மேந்திராவின் சினிமா வாழ்க்கையையே மாற்றிய படம் இது. அந்தக் காலத்தில் ஹீரோக்கள் எல்லாம் மென்மையான 'சாக்லேட் பாய்'களாக வலம் வந்தபோது, இந்தப் படத்தில்தான் தர்மேந்திரா முதன்முறையாகச் சட்டை இல்லாமல், தனது கட்டுமஸ்தான உடலைக் காட்டி நடித்தார். படம் பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது.
3. "ஹீ-மேன்" பட்டம் கிடைத்தது இப்படித்தான்: 'ஃபூல் அவுர் பத்தர்' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, பத்திரிகைகளும் ரசிகர்களும் தான் அவருக்கு "ஹீ-மேன் ஆஃப் இந்தியா" (He-Man of India) என்ற பட்டத்தைக் கொடுத்தனர். இந்திய சினிமாவின் முதல் உண்மையான, உடற்கட்டு மிக்க 'ஆக்ஷன் ஹீரோ'வாக அவர் உருவெடுத்தார்.
4. 'ஷோலே' தண்ணீர் தொட்டி காட்சி: அவர் ஆக்ஷன் ஹீரோ மட்டும் அல்ல, ஒரு சிறந்த காமெடியன் என்பதை நிரூபித்த காட்சி இது. 'ஷோலே' படத்தில், 'வீரு' கதாபாத்திரத்தில் குடித்துவிட்டு, "மௌசி-ஜி!" என்று கத்திக்கொண்டே அவர் தற்கொலை மிரட்டல் விடுக்கும் அந்தக் காட்சி, இந்திய சினிமாவின் சாகாவரம் பெற்ற நகைச்சுவைக் காட்சிகளில் ஒன்றாகும்.
5. ஹேம மாலினிக்காக லஞ்சம்: 'ஷோலே' படப்பிடிப்பின் போதுதான் ஹேம மாலினி மீது அவருக்குக் காதல் மலர்ந்தது. ஹேம மாலினியுடன் காதல் காட்சிகளில் நடிக்கும்போது, அந்த ஷாட்டை நாசமாக்குவதற்காக லைட் பாய்ஸ்களுக்கு தர்மேந்திரா 20 ரூபாய் லஞ்சம் கொடுப்பாராம். இதனால், அந்த ரொமான்டிக் காட்சியை மீண்டும் மீண்டும் எடுக்க நேரிடும், ஹேமாவை நீண்ட நேரம் அணைத்துக் கொள்ளலாம் என்பதே இதன் நோக்கம்.
6. திருமணத்திற்காக மதம் மாறியது: ஹேம மாலினியுடனான அவரது திருமணம் ஒரு பெரிய புயலைக் கிளப்பியது. தர்மேந்திராவுக்கு ஏற்கெனவே திருமணமாகி இருந்ததாலும், முதல் மனைவி பிரகாஷ் கவுர் விவாகரத்து கொடுக்கச் சம்மதிக்காததாலும், ஹேம மாலினியைத் திருமணம் செய்வதற்காகவே தர்மேண்டிராவும், ஹேம மாலினியும் இஸ்லாம் மதத்திற்கு மாறி, தங்கள் பெயர்களையும் மாற்றிக்கொண்டு திருமணம் செய்ததாகக் கூறப்படுகிறது.
7. "கரம் தரம்": அவருக்கு "ஹீ-மேன்" என்று மட்டுமல்ல, "கரம் தரம்" (சூடான குணம் கொண்டவர்) என்ற பெயரும் உண்டு. ஒருமுறை படப்பிடிப்பில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவர் பிரபல இயக்குனர் சுபாஷ் காயை அறைந்துவிட்டதாக ஒரு பெரிய சர்ச்சை எழுந்தது. பின்னாளில் அவர்கள் சமாதானம் ஆகிவிட்டாலும், இது அவரின் கோபமான பக்கத்தைக் அனைவருக்கும் காட்டியது.
8. கவிதை எழுதும் விவசாயி: திரையில் இப்படி ஆக்ஷன் ஹீரோவாக இருந்தாலும், தர்மேந்திராவின் உண்மையான ஆர்வம் விவசாயம் மற்றும் உருது கவிதைகள் எழுதுவது. இன்றுவரை, தன் பெரும்பாலான நேரத்தை மும்பை சத்தமில்லாமல், தனது பண்ணை வீட்டில் விவசாயம் செய்துகொண்டும், கவிதைகள் எழுதிக்கொண்டும் செலவிடுகிறார்.