

தற்காலத்தில் திருமண நிகழ்வுகளில் விருந்து என்பது ஒரு கௌரவப் பிரச்னையாக மாறிவிட்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. தங்கள் பண பலத்தையும் அந்தஸ்தையும் சுற்றத்தாருக்குக் காட்ட திருமண விருந்தினை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தற்காலத்தில் அதிகரித்துள்ளது.
சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்பு திருமண நிகழ்வுகளில் பரிமாறப்படும் உணவு வகைகளைச் சற்று பார்க்கலாம். தலைவாழை இலை, அதில் ஆவி பறக்க சாதம், கத்திரிக்காய் முருங்கைக்காய் சாம்பார், உருளைக்கிழங்கு பட்டாணி வறுவல், ஒரு லட்டு அல்லது ஜாங்கிரி அல்லது மைசூர்பா, ஒரு வாழைக்காய் வறுவல் அல்லது பீன்ஸ் கோஸ் பொரியல், பாயசம், ஊறுகாய், அப்பளம், ரசம், மோர் இவ்வளவேதான் இருக்கும். பெரும்பாலும் அனைவர் வீட்டுத் திருமண நிகழ்வுகளிலும் இதே மெனுதான் தவறாமல் இடம்பெறும். இந்த விருந்தினை சாப்பிட்ட பின்னர் ஒரு நல்ல விருந்தினை சாப்பிட்ட திருப்தி பெரும்பாலும் அனைவருக்குமே ஏற்படும். வயிறும் பெரும்பாலும் கெடாது.
ஆனால், தற்காலத்தில் விதவிதமான உணவுகள் பரிமாறப்படுகின்றன. மூன்று அல்லது நான்கு விதமான ஸ்வீட்டுகள் பரிமாறப்படுகின்றன. நான் பனீர் பட்டர் மசாலா, ஊத்தப்பம், மசாலா தோசை, கீ ரைஸ் இத்யாதி இத்யாதி. தற்காலத்தில் பலருக்கும் சர்க்கரை வியாதி இருக்கிறது. இலையில் பரிமாறப்படும் உணவுகள் பெரும்பாலும் சாப்பிடப்படாமல் வீணாவதைப் பார்க்கும்போது வருத்தமே ஏற்படுகிறது.
மேலும், பெருமைக்காக ஆயிரக்கணக்கானவர்களை அழைப்பதால் சாப்பிடும் இடங்களில் இடம்பிடிக்க போட்டா போட்டி நடைபெறுகிறது. பலர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அடுத்த பந்தியில் இடம்பிடிக்க பின்னால் நிற்கும் காட்சிகளையும் நாம் அடிக்கடி பார்க்க நேரிடுகிறது. இதனால் சாப்பிடுபவர்களுக்கு கஷ்டம். பின்னால் நின்று ஒருவர் நாம் சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தால் நம்மால் நிம்மதியாக சாப்பிட முடியுமா? நிச்சயம் முடியாது.
அக்காலத்தில் பந்தி விசாரிக்க யாரையும் நியமிக்கும் வழக்கம் இல்லை. திருமணத்திற்கு வரும் உறவுக்காரர்கள், நண்பர்கள் என அவர்களாகவே ஆளுக்கொரு உணவு பாத்திரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு அன்புடன் பந்தி விசாரிப்பார்கள். சாப்பிடுபவர்களிடம், ‘இது வேண்டுமா, அது வேண்டுமா’ என்று கேட்டுக் கேட்டு பரிமாறுவார்கள்.
இதனால் திருமணம் நடத்துபவர்களுக்கும் திருப்தி. வரும். விருந்தினர்களுக்கும் திருப்தி. ஆனால், தற்காலத்தில் பந்தி விசாரிக்க ஆட்களை நியமிக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோருக்கு எதை எப்படிப் பரிமாற வேண்டும் என்ற நடைமுறை கூடத் தெரிவதில்லை.
தற்கால திருமண விருந்துகளில் எல்லா உணவு வகைகளும் எல்லோருக்கும் முறையாகப் பரிமாறப்படுவதே இல்லை. பல உணவு வகைகள் ஒருசில வரிசைகளில் பரிமாறப்படாமல் விடுபடுகிறது. திருமண வீட்டார் யாராவது சிலர் விருந்து பரிமாறப்படும் இடத்தில் நின்று எல்லா உணவுகளும் எல்லோருக்கும் முறையாகப் பரிமாறப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். ஆனால், அப்படிச் செய்வதில்லை.
திருமண விருந்து என்பது வரும் உறவினர்களையும் நண்பர்களையும் மகிழ்விக்கத்தான். நாம் அளிக்கும் விருந்தினை சாப்பிடுபவர்கள் மன மகிழ்ச்சியோடும் திருப்தியோடும் நம்மை வாழ்த்திச் செல்ல வேண்டும். இனி, நம் வீட்டுத் திருமண விருந்தில் அளவான உணவு வகைகளைப் பரிமாறப் பழக வேண்டும். இதனால் நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணமும் மிச்சமாகும். உணவு வீணாவதும் தவிர்க்கப்படும். யோசிப்போமா நண்பர்களே!