
தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்த் திரைப்படத்துறையில் பணியாற்றும் நடிகர்களையும், நடிகைகளையும் உறுப்பினராகக் கொண்ட ஒரு சங்க அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைமையகத்தை குறிக்கும் ஒரு கட்டிடமாகும். தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சென்னை தியாகராய நகரில் உள்ள அபிபுல்லா சாலையில் நவீன வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு கடந்த 2016-ல் கட்டுமான பணிகளை தொடங்கினர். திரையரங்கம், திருமண மண்டபம், நடிகர் சங்க அலுவலகங்கள், உடற்பயிற்சி கூடம், நடிப்பு பயிற்சி மையம் போன்றவை கட்டப்பட்டு வந்தன. 60 சதவீதம் பணிகள் முடிந்த நிலையில் 2019-ல் நடந்த நடிகர் சங்க தேர்தல் வழக்கு சர்ச்சைகளால் கட்டுமான பணிகள் முடங்கின. அதுமட்டுமின்றி அதனை தொடர்ந்து வங்கி கடன் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல்களைத் தொடர்ந்து கட்டிடம் பணிகளில் தொய்வு ஏற்பட்டன. இதனைத் தொடர்ந்து முன்னணி நடிகர்-நடிகைகள் நிதி வழங்கினர்.
வங்கி கடன் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல்களும் களையப்பட்டதை தொடர்ந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நிலுவையில் இருந்த கட்டிடப் பணிகள் மீண்டும் வேகம் எடுத்ததை தொடர்ந்து நடிகர் சங்க கட்டிடம் வேகமாக கட்டப்பட்டு வருகிறது. ரூ.35 கோடியில் நடிகர் சங்க கட்டிடத்தை கட்ட திட்டமிடப்பட்டது. ஆனால் திட்டமிட்டதை விட கூடுதலாக ரூ.50 கோடி வரை செலவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகளுக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன், நடிகர் விஜய், தனுஷ், கார்த்தி, சூர்யா, நெப்போலியன் ஆகியோர் தலா ரூ.1 கோடி நிதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் நடிகர் சங்க கட்டிடத்தின் திறப்பு தேதி குறித்து நடிகர் விஷால் பேசியுள்ளார். நடிகரும், நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால் கூறும்போது, ‘தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழா வருகிற ஆகஸ்டு 15-ந்தேதி நடைபெறும். கட்டிடப் பணிகளை ஜூலை மாதத்துக்குள் முடிவுக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறோம்.
நான் ஏற்கனவே கூறியது போல நடிகர் சங்கம் கட்டப்பட்டதற்கு பிறகுதான் எனது திருமணம் நடைபெறும். அதில் உறுதியாக இருக்கிறேன். இது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்காக கட்டப்பட்ட கட்டிடம் எனவே அனைவரும் திறப்பு விழாவுக்கு வருகை தரவேண்டும் வாசலில் இருந்து வரவேற்கும் முதல் ஆளாக நான் காத்திருப்பேன்’ என்றார்.
நடிகர் சங்க கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடந்து வந்தாலும் விஷால் கூறியது போல ஆகஸ்டு மாதத்துக்குள் பணிகள் முழுமை அடையுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. ஏனெனில் உள்கட்டமைப்பு பணிகள் பெரும்பாலும் முழுமை அடையாத சூழலில் விஷால் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு அனைவரையுமே வியப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.
இதனால் வரும் காலங்களில் பணிகள் இன்னும் வேகம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.