Aabavanan
Aabavanan

திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கெல்லாம் முன்னோடி - தமிழ் சினிமாவில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திய ஆபாவாணன்!

Published on

தோல்வி நிலையென நினைத்தால்

மனிதன் வாழ்வை நினைக்கலாமா?

வாழ்க்கையில் தோல்வியடைந்து மரணத்தின் இறுதிவரை சென்றவரைக் கூட, உயிர் பெற்று எழச்செய்யும் ஒரு தன்னம்பிக்கை நிறைந்த பாடல்தான் ஆபாவாணன் எழுதிய தோல்வி நிலை என நினைத்தால்... என்ற பாடல். 

தோல்வியை தழுவிய எந்த ஒரு மனிதனும் இந்தப் பாடலை அவ்வளவு எளிதில் கடந்து விட முடியாது. அந்த அளவுக்கு நெஞ்சில் தன்னம்பிக்கையையும், போராட வேண்டும் என்ற வைராக்கியத்தையும் உண்டாக்கும் பாடல் இது. இப்படி ஒரு பாடலை கொடுத்த பன்முகப் படைப்பாளி ஆபாவாணன் அவர்களைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஆறு வயதிலேயே சினிமாவின் மீது ஒரு தணியாத தாகம் ஏற்பட்டுவிட்டது ஆபாவாணனுக்கு. கல்லூரி படிப்பை முடித்த அவர் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு படித்துக் கொண்டிருக்கும் போது  கல்லூரியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த பிரபல இயக்குனர் ஒருவர் மூன்று ஆண்டுகள் கல்லூரி படிப்பை காட்டிலும், எங்களிடம் உதவியாளர்களாக பணியாற்றினால் நிறைய கற்றுக் கொள்ளலாம் என்று ஏளனமாக பேசினாராம். அது ஆபாவாணனுக்கு ஒரு மிகப்பெரிய சவுக்கடியாக இருந்ததாம்.

பெரும்பாலும் வாரிசுமுறையில் வந்து, திரைப்படத்துறையில் இயக்குனர்களாக பணியாற்றி கொண்டிருந்த காலகட்டத்தில், முதன்முதலாக திரைப்பட கல்லூரி மாணவர்களால் இயக்கப்பட்ட முதல் திரைப்படம்தான் ஊமை விழிகள்.

ஊமை விழிகள் படத்தை  ஒரே வாரத்தில் எடுக்க திட்டமிட்டு இருந்தார்களாம். அதற்காக படத்தை நான்கு யூனிட்டுகளாக பிரித்து  நான்கு இயக்குனர்கள், 60 படப்பிடிப்பு தளங்களை மட்டுமே பயன்படுத்தி இடைவேளை இன்றி இரவு பகலாக உழைத்து படப்பிடிப்பை முடித்தார்களாம்.

மிகப்பெரிய ஜாம்பவான்களாக இருந்த இயக்குனர்களுக்கு மத்தியில் திரைப்படக் கல்லூரி மாணவர்களால் உருவாக்கப்பட்ட முதல் திரைப்படம் ஊமை விழிகள். படப்பிடிப்பு நிறைவு அடைந்து, வெளியிடுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு படத்திற்கு தரச்சான்று வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டதாம். இதனால் ஆகஸ்ட் 13ஆம் தேதி வெளியிடுவதாக இருந்த திரைப்படத்தை போராடி தரச் சான்றிதழ் பெற்று ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியிட்டர்களாம். அன்றைய காலகட்டங்களில்  இன்று முதல் நாங்கள் சுதந்திரம் அடைகிறோம் என திரைப்பட கல்லூரி மாணவர்கள் திரைப்படத்தில் விளம்பரம் செய்து, ஒட்டிய சுவரொட்டிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதாம்.

இந்த படத்தின் மற்றுமொரு முக்கிய அம்சம்  என்னவென்றால்  இந்த படத்தில் இடம் பெற்ற 'தோல்வி நிலையென நினைத்தால்' என்ற பாடலே. ஆபாவாணன் இந்த பாடலை எழுதியிருப்பார், மத்தியமாவதி ராகத்தில் இடம்பெற்ற இந்த பாடலை பிபி ஸ்ரீனிவாஸ், ஆபாவாணன் இருவரும் சேர்ந்து பாடி இருப்பார்கள்.

போர்க்களத்தில் தோல்வியடைந்து களைத்துப்போய் இருக்கும் வீரர்கள், அங்கு இசைக்கப்படும் வீர வணக்கத்தின் குரல் கேட்டு எழுந்து, உட்கார்ந்து, ஓடி, மீண்டும்  எதிரிகளுடன் போரிட்டு வெற்றியை நிலை நாட்ட புறப்படுவது போல் ஒரு தன்னம்பிக்கையை கொடுக்கும் விதமாக இப்பாடலின் வரிகளும், இசையும் அமைந்திருக்கும். இந்த படம் வெளியான பிறகு திரை உலகில் ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதாம். பிரபல இசையமைப்பாளர்களும், ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளரும் கூட இதன் இயக்குனர்களை அழைத்து பாராட்டி பேசினார்களாம்.

தமிழ் சினிமாவில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திய முன்னோடி என்று ஆபாவாணன் அவர்களை சொல்லலாம். இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவர் ஆபாவாணன்.  இவர் தனது தந்தையின் பெயரில் உள்ள என்ற முதல் எழுத்தையும் தாயின் பெயரில் உள்ள பா என்ற முதல் எழுத்தையும் இணைத்து  மதிவாணன் என்ற பெயரை ஆபாவாணன் என மாற்றிக் கொண்டாராம்.

சினிமாவில் பல தொழில் நுட்பங்களை பயன்படுத்தியவர் ஆபாவாணன். செந்துறை பூவே படத்தில் பல சிறப்பு சப்தங்களை பயன்படுத்தி இருப்பார். சென்ட்ரல் ஸ்டேஷனில் ரயில் வரும் சத்தத்தை சவுண்ட் இன்ஜினியர் மூலம் பதிவு செய்து அதனை திரைப்படத்தில் பயன்படுத்தினார்களாம். அதன் பிறகுதான் தமிழ் திரைப்படங்களில் ஒலிக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாம்.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: டிமான்டி காலனி 2 அமானுஷ்யம், திரில்லர் கலந்த கலவை!
Aabavanan

ஊமை விழிகள் படத்தில் இடம்பெற்ற 'நிலை மாறும் உலகில்' என்ற பாடலில், 'தினந்தோறும் உணவு அது பகலில் காணும் கனவு' என்று அன்றைய பசி கொடுமையின் நிலையை அப்பட்டமாக தனது எழுத்துக்களில் காட்டியிருப்பார் ஆபாவாணன். மேலும் மனோஜ் - கியான் என்ற இரட்டையர்களை இசையமைப்பாளர்களாக தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியவரும் இவர்தான்.

இவரது மற்றொரு வெற்றி திரைப்படம் என்றால் அது இணைந்த கைகள் திரைப்படத்தை  சொல்லலாம். இளைஞர்களுக்காக, இளைஞர்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் பயணத்தை கதையாக கொண்டு எடுக்கப்பட்டது. இப்படத்தில் பின்னணி இசை மிகவும் அருமையாக இருக்கும். பின்னனி இசைக்காக மட்டுமே கிட்டத்தட்ட 40 நாட்கள் வேலை செய்தார்களாம்.

இணைந்த கைகள் திரைப்படம் வெளியான காலகட்டங்களில் மிகப்பெரும்  சாதனைகளை படைத்தது. அன்றைய காலகட்டங்களில்  உலக அளவில் திரையிடப்பட்ட ஒரே திரைப்படம் இணைந்த கைகள் திரைப்படமே.

ஊமை விழிகள், செந்தூரப்பூவே, இணைந்த கைகள் இப்படி வெற்றி படங்களுக்குப் பின்பு ஆபாவாணனுக்கு கிட்டத்தட்ட 44 படங்களுக்கு மேல் இசை அமைக்க வாய்ப்பு தேடி வந்ததாம். ஆனால் இசையமைப்பது தன்னுடைய வேலை அல்ல என்று கூறி அந்த வாய்ப்புகளை மறுத்து விட்டாராம்.

இப்படி பல மெகா ஹிட் படங்களை கொடுத்த ஆபாவாணனுக்கு அடுத்தடுத்து வந்த படங்கள் வசூல் ரீதியாக பெருமளவு கை கொடுக்காததால் அவரது சினிமா வாழ்க்கையில் ஒரு தொய்வு ஏற்பட்டு விட்டது. இறுதியாக இரண்டு பேர் என்ற படத்தை எடுக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் கால சூழலால் இப்படமும் வெளிவர முடியாமல் போனது. இப்படத்தில் இடம்பெற்ற குழந்தைகளை பெரிதும் கவரக்கூடிய "வரான் வரான் பூச்சாண்டி ரயிலு வண்டியில" என்ற பாடல் பட்டித்தொட்டி எங்கும் மிகவும் பிரபலமானது.

இதையும் படியுங்கள்:
Review: தங்கலான் - நல்ல நடிப்பும், குழுவும் அமைந்தால் மட்டும் போதுமா? திரைக்கதையில் தெளிவு வேண்டாமா?
Aabavanan

தன்னால் முடியாது என்று பிறர் கூறும் போது தனக்கு முன் வரும் ஆயிரம் தடைகளையும் தாண்டி சாதித்து காட்டுகிறோமே அதுதான் வாழ்க்கையின் மிகப்பெரிய வெற்றி! எவ்வளவு பாகுபாடுகள் இருந்தாலும், திறமை இருந்தால் நிச்சயம் ஒரு நாள் வெல்ல முடியும் என்பதை தன் வாழ்வில் நிரூபித்து காட்டியவர் ஆபாவாணன்.

இன்றும் கூட மிகப்பெரிய இயக்குனர்களாக ஜொலிக்கும் பலர் திரைப்படக் கல்லூரிகளில் பயின்று வந்தவர்களே! அதற்கு முன்னோடியாக நின்று விதை போட்டவர்  இந்த ஆபாவாணன்  என்று சொன்னால் அது மிகையாகாது!

logo
Kalki Online
kalkionline.com