
1994-ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய், மணிரத்னம் இயக்கிய ‘இருவர்’ திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகம் ஆனார். அந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லாலுடன் இணைந்து பணியாற்றிய ஐஸ்வர்யா ராய், முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா வேடத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு பாலிவுட் பக்கம் தனது முழு கவனத்தையும் திருப்பிய ஐஸ்வர்யா ராய் அங்கு அவருக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி குறுகிய காலத்திலேயே முன்னனி நடிகைகளில் ஒருவராக இடம் பிடித்தார்.
தமிழில் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன், ராவணன், பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் நடித்திருக்கும் இவர் அவ்வப்போது மட்டுமே தமிழ் சினிமா பக்கம் தலைகாட்டி வருகிறார். ஆனால், அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்களும், கதாபாத்திரங்களும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடிக்கிறது.
கடைசியாக இவரது நடிப்பில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினியின் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியிருந்தார் ஐஸ்வர்யா ராய். இந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.
அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஆராத்யா என்ற 13 வயது மகள் இருக்கிறார். திருமணத்திற்கு பின் ஐஸ்வர்யா ராய் சில படங்களில் நடித்திருந்தார். அதன் பின் மகளை பார்த்து கொள்வதற்காக திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அதேபோல் அபிஷேக் பச்சனும் பாலிவுட் சினிமாவில் முன்னனி நாயகனாக வலம் வருகிறார். இவரது நடிப்பில் வெளிவந்த யுவாவுடன் பண்டி அவுர் பாப்லி, சர்க்கார், தஸ் மற்றும் ப்ளஃப்மாஸ்டர், தூம், ஜூம் பராபர் ஜூம் போன்றவை அவருக்கு பிளாக்பஸ்டர் படங்களாக அமைந்தன.
நடிப்பை தாண்டி அபிஷேக் பச்சன் இந்திய சூப்பர் லீக் கால்பந்து அணியான சென்னை எஃப்சி, புரோ கபடி லீக் அணியான ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், ஏபி கார்ப் சினிமா தயாரிப்பு நிறுவனம், ரியல் எஸ்டேட், இன்னும் பல மூதலீடுகள் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.
உச்சக்கட்ட காதலோடு தங்களது வாழ்க்கையை இவர்கள் நகர்த்திக்கொண்டிருந்தாலும் அடிக்கடி இவர்களுக்குள் பிரச்சனை, விவாகரத்து என்ற வதந்தி கிளம்பிய வண்ணம் தான் இருக்கிறது. அதைப்பற்றி இருவரும் கவலைப்படாமல் தங்கள் மகள் ஆராத்யாவுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் ஐஸ்வர்யா ராயின் கணவர் அபிஷேக் பச்சன் சமீபத்தில் தனது மகள் குறித்து பேசிய விஷயம் தற்போது சமூக வலைதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.
அதில் ‘என் மகள் ஆராத்யா எந்த சமூக ஊடகங்களிலும் இல்லை. அவர் செல்போனும் பயன்படுத்துவதில்லை. இதற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். அதற்குக் காரணம் என் மனைவிதான். இந்த பெருமை முழுக்க முழுக்க என் மனைவி ஐஸ்வர்யா ராய்க்கு மட்டுமே சொந்தம். அவர்தான் என் மகளை சிறப்பாக வளர்த்து வருகிறார். எங்கள் குழந்தை எங்கள் குடும்பத்தின் பெருமை, மகிழ்ச்சி. நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்’ என அபிஷேக் பச்சன் கூறியுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த பலரும் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் தம்பதியினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.