
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தனது நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் படையை கொண்டிருக்கும் சமந்தா, தற்போது தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். ஒரு நடிகையாக பல்வேறு கதாப்பாத்திரங்களில் சிறப்பாக நடித்தவர், ஒரு தயாரிப்பாளராகவும் நல்ல படங்களைக் கொடுக்க நினைக்கிறார். இதற்காக கடந்த 2023 இல் ‘ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார் சமந்தா. சமூகத்தில் நடக்கும் அவலங்கள், வலிமையான மற்றும் சிக்கலான கதைகளை இந்தத் தளத்தின் மூலம் மக்களுக்கு எடுத்துச் செல்வோம் என அன்றே தெரிவித்திருந்தார்.
பொதுவாக நடிகர்கள் தான் படத் தயாரிப்பில் ஈடுபடுவார்கள். தயாரிப்பில் ஆர்வம் கொண்ட நடிகைகள் மிகவும் குறைவு தான். இருப்பினும் தரமான படங்களை நடிப்பின் மூலமாக மட்டுமின்றி, தயாரிப்பின் மூலமாகவும் ரசிகர்களுக்கு கொடுக்க முடியும் என முதல் அடியை எடுத்து வைத்துள்ளார் சமந்தா. தனது தயாரிப்பு நிறவனத்தின் மூலம் ‘சுபம்’ என்ற தெலுங்கு படத்தையும் தயாரித்துள்ளார். இப்படம் வருகின்ற மே 9 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
நடிகை மற்றும் தயாரிப்பாளர் என இருவேறு பரிமாணங்களில் என்னென்ன வேறுபாடுகள் உள்ளன. இதில் எது தனக்கு திருப்தியளிக்கிறது என்பது குறித்து சமீபத்தில் மனம் திறந்தார் நடிகை சமந்தா.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்...
“யாராக இருந்தாலும் வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுவோம். ரிஸ்க் எடுத்தால் தான் ஒரு அர்த்தமுள்ள மாற்றத்தை நம்மால் ஏற்படுத்த முடியும். நானும் எனது சினிமா பயணத்தில் பல ரிஸ்க்குகளை எடுத்துள்ளேன். அவையனைத்தும் எனக்கு நல்ல பலன்களையே கொடுத்துள்ளன. 15 வருடங்களாக நான் சினிமா துறையில் பலவற்றைக் கற்றுக் கொண்டேன். நல்லவற்றை ரசிகர்களுக்கு எடுத்துக் கூற முடியும் என்ற நுண்ணறிவும், தன்னம்பிக்கையும் எனக்கு உள்ளது.
ஒரு நடிகையாக இருப்பதில் எனக்கு அதிக மகிழ்ச்சி. தற்போது தயாரிப்பாளராகவும் சினிமாவில் புதுமாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறேன். திரைப்படத் தயாரிப்பும் கற்றுக் கொள்வதில் ஒரு பகுதி தான். படத்தைத் தயாரிக்கும் போது தான் நாம் எதிராபார்க்காத பல விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியும். அதில் சொல்ல முடியாத திருப்தியும் இருக்கிறது. ஒரு சினிமா நடிகையாக நான் கற்றுக் கொண்டதைக் காட்டிலும், தயாரிப்பாளராக அதிகம் கற்றுக் கொண்டேன். இன்னமும் கற்றுக் கொள்வதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன.
ஒரு குறிப்பிட்ட வகையான படங்களை மட்டுமே தயாரிக்க நான் விரும்பவில்லை. பல விதமான கதைகளைக் கேட்க ஆவலாக இருக்கிறேன். நல்ல கருத்துள்ள படங்களைத் தொடர்ந்து தயாரிப்பேன். ஒரு பெண்ணாக எவ்வகையான கதையால் நான் ஈர்க்கப்படுகிறேன் மற்றும் எந்தெந்தக் கதைகளை படமாக எடுக்க விரும்புகிறேன் என்பதை எனது அனுபவத்தின் மூலம் தீர்மானிப்பேன்”
என சமந்தா கூறினார்.
15 ஆண்டு காலமாக நடித்து வரும் சமந்தா, ஒரே ஒரு படத்தைத் தயாரித்ததன் மூலம் பலவற்றைக் கற்றுக் கொண்டுள்ளார் என்பது ஆச்சரியம் தான். இருப்பினும் ஒரு படத்தைத் தயாரிக்கும் போது தான் அனைத்து விதமான சாதக, பாதகங்களை அறிந்து கொள்ள முடியும். சமந்தாவின் இந்த முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள்!