சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த குகேஷ் பரபரப்பான கடைசி சுற்றில் சீனாவின் டிங் லிரெனை தோற்கடித்து 7½-6½ என்ற புள்ளி கணக்கில் உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதன் மூலம் உலக செஸ் வரலாற்றில் இளம் வயதில் இந்த பட்டத்தை வென்ற வீரர் என்ற பெருமையை 18 வயதான குகேஷ் பெற்றார். அவருக்கு தலைவர்களும், விளையாட்டு பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
2012-ம் ஆண்டு விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் வெற்றிக்கொடி நாட்டிய இந்தியர் என்ற சிறப்பை பெற்ற குகேஷ் பெற்றுள்ளார்.
லிரென் - குகேஷ் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கியது. இது மொத்தம் 14 சுற்றுகளை கொண்ட இந்த தொடரில் வெற்றிக்கு ஒரு புள்ளியும், டிராவுக்கு அரைபுள்ளியும் வழங்கப்படும். முதலில் 7½ புள்ளியை எட்டும் வீரரை உலக சாம்பியன் கிரீடம் அலங்கரிக்கும்.
உலகம் முழுவதும் செஸ் ஆர்வலர்கள், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இந்த போட்டியில் 13 சுற்று முடிந்த போது இருவரும் தலா 6½ புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர்.
இந்த நிலையில் பட்டம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 14-வது மற்றும் கடைசி சுற்று ஆட்டத்தில் குகேஷ் கருப்பு நிற காய்களுடன் களம் இறங்கினார். 58-வது நகர்த்தலில் லிரென் தோல்வியை ஒப்புக் கொண்டார். இதையடுத்து குகேஷ் வெற்றியை வசப்படுத்தி அதற்குரிய ஒரு புள்ளியை பெற்றார். 14-வது சுற்று முடிவில் குகேஷ் 7½-6½ என்ற புள்ளி கணக்கில் லிரெனை தோற்கடித்து புதிய உலக சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இந்த வெற்றியின் மூலம் 18 வயதான குகேஷ், செஸ் உலகின் 18-வது சாம்பியனாக சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். மேலும் குறைந்த வயதில் சாம்பியன் பட்டத்தை உச்சிமுகர்ந்த வீரர் என்ற மகத்தான சாதனையை படைத்துள்ளார்.
சாம்பியனாக மகுடம் சூடிய குகேசுக்கு ரூ.11½ கோடி பரிசுத்தொகையாக கிடைத்தது. 2-வது இடம் பெற்ற லிரென் ரூ.9¾ கோடியை பெற்றார்.
உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற தமிழக வீரர் குகேசுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் உலக சாம்பியனான விஸ்வநாதன் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
வெற்றி பெற்ற பின்.. "இந்த தருணத்துக்காக கடந்த 10 ஆண்டுகள் காத்திருந்தேன். எனது வாழ்க்கையில் மிகச்சிறந்த தருணம் இதுவாகும். என்னை பொறுத்த வரை டிங் லிரென் உண்மையான சாம்பியன், அவருக்காக நான் வருந்துகிறேன்" என்று குகேஷ் கூறியுள்ளார்.
டிங் லிரென் கூறும் போது, "இந்த ஆண்டில் நான் விளையாடிய சிறந்த தொடர் இது தான். இறுதி சுற்றில் தோற்றதில் வருத்தமில்லை" என்றார்.
குகேசின் தந்தை ரஜினிகாந்த், காது, மூக்கு, தொண்டை சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர். செஸ் போட்டியில் கலந்து கொள்ள மகனை பல்வேறு நாடுகளுக்கு அழைத்து செல்வதற்காக 2017-18-ம் ஆண்டில் இருந்து மருத்துவ பணியை துறந்தார். அவரது தாயார் பத்மா, நுண்ணுயிரியல் ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.