
2024 நவம்பர் நடுப்பகுதி முதல், நியூ ஜெர்சியின் மத்திய மற்றும் வடக்கு பகுதிகளில் மர்மமான பெரிய ட்ரோன்கள் இரவில் பறப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இராணுவத் தளம், கோல்ஃப் கிளப் போன்ற முக்கிய இடங்களுக்கு அருகிலும் இவை காணப்பட்டதால், மத்திய அரசு விசாரணையைத் தொடங்கியுள்ளது. கடலோர காவல்படையும் குறிப்பிடத்தக்க ட்ரோன் செயல்பாட்டைப் பதிவு செய்துள்ளது. ஒரு இடத்தில், 12 முதல் 30 ட்ரோன்கள் வரை ஒரு மோட்டார் லைஃப் போட்டைப் பின்தொடர்ந்துள்ளன.
இந்த அடையாளம் தெரியாத ட்ரோன்கள் மிகவும் பெரியவை என்று நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். சிலரின் கூற்றுப்படி, அவற்றின் அளவு சிறிய கார்களைப் போன்றது. சுமார் ஆறு அடி விட்டம் கொண்ட இந்த ட்ரோன்கள், தனித்தனியாகவும் சில சமயங்களில் ஒன்றாக சேர்ந்தபடியும் இரவு நேரங்களில் விளக்குகள் இல்லாமல் பறந்துள்ளன. இதனால், அவற்றைக் கண்காணிப்பது கடினமாக உள்ளது. ஒரு இரவில் 4 முதல் 180 ட்ரோன்கள் வரை பறந்த காட்சி பதிவாகி அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த மர்ம ட்ரோன்களைக் கண்டறியும் முயற்சிகள் சவால்கள் நிறைந்ததாக உள்ளது. ஏனெனில் அவை வழக்கமான ரேடார் மற்றும் கண்காணிப்பு அமைப்புகளைத் தவிர்ப்பதாகத் தெரிகிறது. உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் கூற்றுப்படி, இந்த ட்ரோன்கள் மேம்பட்ட திறன்களைக் கொண்டுள்ளன. வழக்கமான கண்டறிதல் முறைகளைத் தவிர்ப்பதுடன், அவற்றின் தொழில்நுட்பம் முற்றிலும் மேம்பட்டதாக இருக்கிறது.
இதனால், பொதுமக்களின் கவலை அதிகரித்து வருவதால், மர்மமான ட்ரோன் காட்சிகளைக் கண்காணித்து ஆவணப்படுத்துவதற்காக ஆன்லைன் சமூகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ட்ரோன்களை அடையாளம் காணும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஒரு பேஸ்புக் குழுவில், சில நாட்களில் 30,000 க்கும் அதிகமான உறுப்பினர்கள் இணைந்துள்ளனர்.
செனட்டர் ஒருவர், நிலைமை தீர்க்கப்படும் வரை அவசர நிலை பிரகடனப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மர்மம் மற்றும் பொதுப் பாதுகாப்பு குறித்த தாக்கங்கள் குறித்து விசாரிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பென்டகன் அதிகாரிகள், இதற்குப் பின்னால் வெளிநாட்டுத் தலையீடு அல்லது ஈரான் தொடர்பு போன்ற கருத்துகளை மறுத்துள்ளனர். தற்போது, ட்ரோன்களின் புதிய தொழில்நுட்பம் மற்றும் அவற்றைக் கண்டறிவதில் உள்ள சவால்கள் காரணமாக, இந்த மர்மம் நீடிக்கிறது.