கடந்த டிசம்பர் 4-ம்தேதி சந்தியா திரையரங்கில் நடந்த சோகமான சம்பவத்தின் போது பலத்த காயமடைந்த ஸ்ரீ தேஜா, ஹைதராபாத் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சை பெற்று வரும் சிறுவனை பார்க்க இன்று நடிகர் அல்லு அர்ஜூன் மருத்துவமனைக்கு சென்றார்.
மருத்துவமனையில் நடிகர் அல்லு அர்ஜுன் இருக்கும் வீடியோக்கள் மற்றும் படங்கள் சமூக ஊடக தளங்களில் வெளிவந்தன. அல்லு அர்ஜுனுடன் அவரது குழுவினர் மற்றும் தெலுங்கானா மாநில திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் (FDC) தலைவர் தில் ராஜுவும் உடனிருந்தார்.
முன்னதாக ஜனவரி 5-ம்தேதி அல்லு அர்ஜுன் மருத்துவமனைக்குச் செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால், திட்டம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. நடிகர் அல்லு அர்ஜுனின் வருகையை முன்னிட்டு மருத்துவமனையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. மேலும் போலீசின் அறிவுறுத்தலின் பேரில், பாதுகாப்பு கருதி நடிகர் அல்லு அர்ஜுன் மருத்துவமனைக்கு வருவது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
சம்பவத்திற்குப் பிறகு தொடர்ந்து மருத்துவ கவனிப்பில் இருக்கும் சிறுவனைப் பற்றி ஆழ்ந்த கவலையில் இருப்பதாக நடிகர் அல்லு அர்ஜுன் முன்பு கூறியிருந்தார். அவர் சிறுவன் விரைவில் குணமடைய வாழ்த்தினார். மேலும் அவரையும் அவரது குடும்பத்தினரையும் சந்திக்க ஆவலுடன் இருப்பதாகவும், ஆனால் நடந்துகொண்டிருக்கும் சட்ட நடவடிக்கைகள் காரணமாக வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறியிருந்தார்.
சிகிச்சை பெற்று வரும் ஸ்ரீதேஜா கடந்த டிசம்பர் 24ம்தேதி (காயம் அடைந்து 20 நாட்கள் கழித்து) முதல் முறையாக பதிலளித்ததாக அவனது தந்தை பாஸ்கர் கூறியிருந்தார். இதன் மூலம் ஸ்ரீதேஜா விரைவில் குணமடைவதற்கான சாதகமான அறிகுறிகள் இருப்பதாக மருத்துவமனை கூறி உள்ளது.
சிறுவனின் தந்தை பாஸ்கர், ‘நடிகர் அல்லு அர்ஜூனும், தெலுங்கானா அரசும் எங்களுக்கு ஆதரவளிக்கின்றனர்‘ என்று கூறினார்.
புஷ்பா 2 பிரீமியரின் போது நடிகரைப் பார்க்க ரசிகர்கள் கூடியதால் நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் இறந்தார், அவரது எட்டு வயது மகன் பலத்த காயம் அடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜூன், அவரது பாதுகாப்பு குழுவினர் மற்றும் தியேட்டர் நிர்வாகம் மீது சிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக டிசம்பர் 13-ம்தேதி கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுன் இடைக்கால ஜாமீன் கிடைத்து டிசம்பர் 14-ம் தேதி சிறையில் இருந்து வெளியில் வந்தார். ஜனவரி 3-ம்தேதி நடிகர் அல்லு அர்ஜுனுக்கு வழக்கமான ஜாமீன் கிடைத்தது. இந்த வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுன் 11-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு நடிகர் அல்லு அர்ஜுன் தந்தை அல்லு அரவிந்த் சார்பாக ரூ.2 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் ரூ.1 கோடியை படத்தின் தயாரிப்பாளர்களான மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் இயக்குநர் சுகுமார் பகிர்ந்து கொள்வதாகவும் கூறப்பட்டுள்ளது.