97வது அகாடமி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்னும் இரண்டு மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதையொட்டி இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருது பெறும் திரைப்படங்கள் பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் சமீபத்தில் இந்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்கு தகுதியான 323 திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டது. இவற்றில் 207 திரைப்படங்கள் ஏற்கனவே சிறந்த திரைப்படம் பிரிவில் இடம்பெற தகுதி பெற்றுவிட்டன.
207 திரைப்படங்களில் ஐந்து இந்திய திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் கங்குவா (தமிழ்), ஆடு ஜீவிதம் - தி கோட் லைஃப் (இந்தி), சந்தோஷ் (இந்தி), ஸ்வாதந்த்ரியா வீர் சாவர்கர் (இந்தி) மற்றும் ஆல் வி இமாஜின் அஸ் லைட் (மலையாளம்-இந்தி) ஆகியவை அடங்கும்.
சூர்யாவின் கங்குவா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மந்தமான வரவேற்பையே பெற்றிருந்தது. வரலாற்று கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களே கிடைத்தன. இருந்தபோதிலும், இந்தப்படம் 2025 ஆஸ்கார் விருதுகளுக்கான போட்டியாளர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சிறுத்தை சிவா இயக்கிய கங்குவா படத்தின் மூலம் நடிகர் சூர்யா இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு பெரிய திரையில் மீண்டும் தோன்றினார்.
திரைப்பட கண்காணிப்பாளர் மனோபாலா விஜயபாலன் எக்ஸ் தளத்தில், போட்டியாளர் பட்டியல் மற்றும் சூர்யாவின் போஸ்டருடன் "BREAKING: Kanguva ENTERS Oscars 2025" என்று பகிர்ந்தார். அவரின் இந்த பதிவு சில மணி நேரத்தில் வைரலானதை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் கலாய்ந்து வருகின்றனர்.
ஒரு பயனர்கள், 'ஆஸ்கார் பந்தயத்தில் கங்குவா படம் இடம் பிடித்தது எப்படி?' என்று கேள்வி எழுப்பி உள்ளனர். மற்றொரு பயனர் ’எந்த பிரிவின் கீழ்? இந்த ஆண்டின் மோசமான படம்? என்ற பிரிவின் கீழா?‘ என கேள்வி எழுப்பி உள்ளார். மற்றொருவர் ‘Surya nominating his own film:‘ என்று பதிவு போட்டு அதன் கீழ் ஓபாமா தனக்கு தானே விருதை அணிவித்து கொள்வது போன்ற படத்தை பதிவிட்டுள்ளார்.
இந்த திரைப்படங்களை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நாளை (ஜனவரி 8) துவங்கி ஜனவரி 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதன்பிறகு, ஜனவரி 17-ம்தேதி இறுதிப் பட்டியலில் தேர்வான திரைப்படங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
இறுதிப்பட்டியலில் எத்தனை இந்திய திரைப்படங்கள் இடம்பெறும் என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். இந்த ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் 2-ம்தேதி ஒவேஷன் ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெறவுள்ளது.
சினிமா உலகில் மிகப் பெரிய விருதாக பார்க்கப்படுவது ஆஸ்கர் விருது. கடந்த 2009-ம் ஆண்டு ஆஸ்கர் விருதை வென்றன் மூலம் ஏ.ஆர். ரஹ்மான் ஆஸ்கர் வென்ற முதல் தமிழர் என்கிற பெருமையைப் பெற்றார்.