டிசம்பர் 5-ம்தேதி புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியை ரசிகர்களுடன் பார்க்க, நடிகர் அல்லு அர்ஜுன் ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டருக்கு முன் அறிவிப்பு இல்லாமல் சென்ற போது மெகாஸ்டாரைப் பார்க்க ரசிகர்கள் முண்டியடித்ததால் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு 35 வயதான ரேவதி என்ற பெண் உயிரிழந்ததார். பலத்த காயம் அடைந்த அவரது மகன் கோமாவில் உள்ளார்.
இதனிடையே, "அல்லு அர்ஜுனை பற்றி கவலைப்படுகிறீர்களே, அந்த கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டு ஒரு பெண் உயிரிழந்தார், சிறுவன் கோமாவில் உள்ளான், அவனை பற்றி ஏன் யாரும் கவலைப்படுவதில்லை" என்று கேள்வி எழுப்பியுள்ளார், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி.
பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடிகர் அல்லு அர்ஜுனை கைது செய்தனர். கோர்ட் அவருக்கு 4 வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. அதாவது டிசம்பர் 13-ம் தேதி மாலை சிறைக்கு சென்ற அல்லு அர்ஜுன் 14-ம் தேதி காலை ஜூப்ளி ஹில்ஸில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பினார்.
சிறையில் இருந்து வெளிவந்த நிலையில் கண்ணாடி அறையில் உட்கார்ந்துக் கொண்டு மீடியாக்கள் பார்வைபடும் வகையில் சினிமா பிரபலங்களை சந்தித்து வந்தார் நடிகர் அல்லு அர்ஜுன். மீடியாக்களுக்கு இது ஒரு TRPயை உயர்த்தும் செய்தி மட்டுமே.
புஷ்பா 2 படத்தின் இயக்குநர் சுகுமார், நடிகர்கள் விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, நாக சைதன்யா, அகில், வெங்கடேஷ், ஸ்ரீகாந்த் போன்ற பல முன்னணி தெலுங்கு சினிமா பிரபலங்கள் அல்லு அர்ஜுனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர். நண்பர்கள் மற்றும் சகாக்கள் இவரை பார்வையிட்ட மகிழ்ச்சியான முகங்களின் படங்கள் சிறிது நேரத்தில் இணையத்தில் வைரலாகின.
நடிகர் அல்லு அர்ஜுனின் இந்த 'கொண்டாட்டங்களை' இணையவாசிகள் ஏற்கவில்லை. ஏனெனில், நெரிசலில் பாதிக்கப்பட்ட சிறுவன் இன்னும் கவலைக்கிடமாக இருக்கிறார். இந்த செயல் அல்லு அர்ஜுன் 'உணர்வின்மை' காட்டுவதாக இணையவாசிகள் விமர்சித்துள்ளனர்.
நடிகர் அல்லு அர்ஜுனின் இந்த செயலுக்கு எதிராக இணையதளத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதில் சிலவற்றை பார்க்கலாம்..
ஒரு கருத்து, "எனக்கு அல்லு அர்ஜுனை பிடிக்கும். ஆனால் இன்று சுயபரிசோதனைக்கான நாள், கொண்டாட்டத்திற்கான நாள் அல்ல" என்று கூறப்பட்டுள்ளது.
மற்றொரு கருத்து, "ஜாமீன் தருணங்களை வெட்கமின்றி கொண்டாடுகிறார்கள், ஆனால் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. ஒட்டுமொத்தமாக ரேவந்த் ரெட்டி துணிச்சலான நடவடிக்கை எடுப்பதற்கு அஞ்சாத தைரியமான தலைவராக சித்தரிக்கப்படுகிறார்."
மற்றொரு கருத்து, "இப்போது அல்லு அர்ஜுன் திரும்பி வந்துள்ளார். டோலிவுட் முழுக்க அவர் வீட்டில் இறங்கியிருக்கும் இந்த தமாஷை, ஒவ்வொரு நொடியும் லென்ஸில் படம்பிடிக்கப்படுகிறது. அவர்கள் இதை மீறிச் செல்கிறார்கள். இது இப்போது PR ஸ்டண்ட் போல் தெரிகிறது."
ஒரு X பயனர் கருத்துத் தெரிவிக்கையில், "இதுபோன்ற குணாதிசயங்களைக் கொண்ட அனைத்து நடிகர்களையும் நாம் எதிர்பார்க்கக்கூடாது. ஏனென்றால் @PawanKalyan போன்ற ஆண்கள் மில்லியன் ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகிறார்கள். இவர்கள் வெறும் விளம்பரத்தை வைத்துக்கொண்டு வாழ்க்கையை நடத்தும் நடிகர்கள். அனைத்து உணர்ச்சிகரமான காட்சிகளும் பத்திரிகையாளர்களுக்கு முன்னால் நடந்தன. இது தற்செயல் நிகழ்வு அல்ல என்பதை விளக்க வேண்டிய அவசியமில்லை."
பல்வேறு விமர்சங்கள் ஒருபுறம் இருக்க இந்த படத்தை ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் கொண்டாடிவரும் நிலையில் புஷ்பா 2 படம் இதுவரை உலக அளவில் ரூ.1,200 கோடிக்கு மேல் வசூல் குவித்து சாதனை நிகழ்த்தி உள்ளது. இந்த வசூல் இன்னும் இரு தினங்களில் ரூ.1,500 கோடியை எட்டும் என்று கூறப்படுகிறது. இந்திய அளவில் மட்டும் வசூல் ரூ.825 கோடியை தாண்டி உள்ளது. இதனால் படக்குழுவினர் மிகப்பெரிய அளவில் உற்சாகத்தை கொண்டாடி வருகின்றனர்.