Interview: பிளாக் மேஜிக் செய்யும் காட்டு மனிதனாக... - காந்தாரா சம்பத் ராம் ஓபன் டாக்!
காந்தாரா படத்தில் ரிஷப் ஷெட்டி பஞ்சுருளி தெய்வமாக மாறி மிகப்பெரிய சத்தம் தரும் போதெல்லாம் பயந்த ரசிகர்கள், அடுத்தபடியாக மிகவும் பயந்தது, பிளாக் மேஜிக் செய்யும் நபராகவும், வனத்தில் ஒரு குழுவின் தலைவனாகவும் நடித்த சம்பத் ராமின் ஒப்பனையையும், நடிப்பையும் பார்த்துதான். கடந்த 26 ஆண்டுகளாக தமிழ் உட்பட பல்வேறு படங்களில் நடித்து வந்த சம்பத் ராமை காந்தாரா சாப்டர் 1 படம் பல படிகள் உயரத்தில் கொண்டு வைத்துள்ளது. காந்தாராவுக்காக நேரிலும், தொலைபேசியிலும் ரசிகர்களின் வாழ்த்துகளை பெற்றுக் கொண்டே நம் கல்கி ஆன்லைனுக்கு பேட்டி அளிக்கிறார் சம்பத் ராம்,
பிளாக் மேஜிக் மேனாக காந்தாராவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி?
கடந்த 2006 ல் குப்பி என்ற படத்தில் நடித்தேன். அந்த படத்தில் ரிஷப் ஷெட்டி உதவி இயக்குனராக பணியாற்றினார். அந்த படத்தில் என் கேரக்டர் பெயர் மாஸ்டர். அன்று முதல் இன்று வரை மாஸ்டர் என்று தான் ரிஷப் ஷெட்டி அழைப்பார். அடுத்தடுத்த வருடங்களில் ரிஷப் ஷெட்டி பல படங்களில் நடித்து கொண்டிருந்தார். 2022 ஆம் ஆண்டு வெளியான காந்தாரா பார்த்து விட்டு போனில் ரிஷப் ஷெட்டியை பாராட்டினேன். "மாஸ்டர் அடுத்த படம் நாம சேர்ந்து பண்ணுவோம்" என்றார். சொன்னது போலவே காந்தாரா Chapter 1 ஷூட்டிங் தொடங்கும் முன் அழைத்தார். இது இருபது வருட நட்புக்காக கிடைத்த வாய்ப்பு.
உங்க கேரக்டரை பற்றி முன்பே சொன்னாரா ரிஷப்?
இல்லை. ஆனால் நல்ல கேரக்டர், நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கும் என்று சொன்னார். ஷூட்டிங் முதல் நாள் பல பக்கங்கள் கன்னடத்தில் உள்ள வசனத்தை பேச சொன்னார் ரிஷப். "சார் இத்தனை பக்கம் கன்னடத்தில் இருக்கே, பேசுவது கஷ்டம் Prompt நடிகர்கள் (வசனம் பேசும் போது பின்னால் இருந்து உதவுவது) வைத்து கொள்ள முடியுமா? என்று கேட்டேன். Prompt க்கு வாய்ப்பில்லை என்று சொல்லிவிட்டார் ரிஷப். ஒரு வழியாக டயலாக் பேசி விட்டேன். மறுநாள் சென்னை வந்து சேர்ந்தேன். எங்கே என்னை அழைக்கப்போகிறார்கள் என்று நான் என் வேலையை பார்க்க போனபோது "கிளம்பி வாங்க" டைரக்டர் ரிஷப் அழைக்கிறார் என்று அழைப்பு வந்தது. மகிழ்ச்சியாக பெங்களூரு கிளம்பி சென்றேன்.
பிளாக் மேஜிக் செய்யும் காட்டு மனிதனாக மேக் அப் போட்ட அனுபவத்தை சொல்லுங்களேன்...
முகம், கை, கால்களில் மேக்அப் போட்டு பார்த்திருப்பீர்கள். காந்தாரா படத்திற்கு என் பல், கண்களுக்குள் கூட மேக்அப் போட்டார்கள். மேக்அப் போட பல மணி நேரம் ஆகும். நடித்து முடித்த பின் மேக் அப்பை கலைக்க சில மணி நேரமாவது ஆகும். இதன் பலன் தான் திரையில் நீங்கள் என்னை பார்த்து பயப்படுவது.
கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறீர்கள்... ஆனால் உங்களை இந்திய அளவில் திரும்பி பார்க்க வைத்தது கன்னட சினிமாதானே?
இன்று என்னை திரும்பி பார்க்கும் இடத்திற்கு வர பல வாய்ப்புகளை இத்தனை ஆண்டுகள் வழங்கியது, இப்போதும் வழங்கி கொண்டிருப்பது தமிழ் சினிமாதான். இதை இந்த இடத்தில் பதிவு செய்கிறேன்.
நீங்கள் நடிக்கும் பெரும்பான்மையான படங்களில் வில்லனுக்கு வலது கையாக நடிக்கிறீர்கள் அல்லது ஹீரோவுக்கு வலது கையாக நடிக்கிறீர்கள். எப்போது உங்கள் தனிப்பட்ட திறமையை காட்டும் படங்களில் உங்களை பார்க்கலாம்?
இப்போது ஜி.வி பிரகாஷ், சமுத்திரகனி நடிக்கும் படங்களில் நடிக்கிறேன். இந்த படங்களில் எனக்கான முக்கியத்துவம் இருக்கும். இனி வரும் காலங்களில் கேரக்டர்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க போகிறேன்.
ரஜினி, கமல் தொடங்கி அனைத்து முன்னணி ஹீரோக்கள் படத்திலும் நடித்து கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு பிடித்த ஹீரோ யார்?
ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விஷயம் சிறப்பாக இருக்கும். நான் இவர்கள் அனைவரிடமிருந்தும் கற்று கொண்டு இருப்பதால் இவர்கள் அனைவரையும் பிடிக்கும். அஜித்சார் பற்றி சொல்வதற்கு ஒரு விஷயம் இருக்கிறது. 'உன்னை கொடு, என்னை தருவேன்' தொடங்கி அஜித் சாருடன் இணைந்து பன்னிரண்டு படங்கள் வரை நடித்து விட்டேன். தீனா படத்தில் அஜித் சார் பைக் ஓட்டும் காட்சிகளில் என் சொந்த பைக்கை பயன்படுத்தினார். என் பைக்கை படத்தில் பயன்படுத்தியதில் எனக்கு மிகப்பெரிய கெளரவமாக நினைக்கிறேன்.
சினிமா தாண்டி உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன?
பேஸ்கட் பால் விளையாட்டு. நான் சிறுவயது முதல் பேஸ்கட் பால் விளையாடுகிறேன். பேஸ்கட் பால் விளையாட்டிற்கு இருந்த ஒதுக்கீடு மூலமாகத்தான் ஜெயின் கல்லூரியில் பட்டப்படிப்பு படிக்க இடம் கிடைத்தது. என் நண்பர்கள் இந்த விளையாட்டின் மூலம் கிடைத்த ஒதுக்கீடு வழியாக பல்வேறு நல்ல வேலையில் இருக்கிறார்கள். இன்று வரை நண்பர்களுடன் சேர்ந்து பேஸ்கட் பால் விளையாடுகிறேன். மேட்ச்சில் கலந்து கொள்கிறேன். இப்போதும் திருவனந்தபுரத்தில் நடந்த மேட்சில் கலந்து கொண்டு தான் வந்திருக்கிறேன்.