Interview: "மைலாஞ்சி... மாறுபட்ட காதல் திரைப்படம்" - அஜயன் பாலா!
பல நாவல்கள், தொடர்கள், சிறுகதைகள் எழுதியவர் அஜயன் பாலா. சில படங்களில் நடித்தும் உள்ளார். எழுத்தாளர், நடிகர், வசனகர்த்தா என பன்முகத்தன்மை கொண்ட அஜயன் பாலா தற்போது மைலாஞ்சி என்ற படத்தை இயக்கி உள்ளார்.
இளையராஜா மட்டுமல்லாமல் ஒளிப்பதிவிற்கு செழியன், பட தொகுப்பிற்கு ஸ்ரீகர் பிரசாத், ஆர்ட் டைரக்ஷனுக்கு லால்குடி இளையராஜா என தேசிய விருது பெற்ற கலைஞர்கள் இந்த படத்தில் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.
டைரக்ஷன் மீது ஆர்வம் ஏற்பட்டது எப்படி? மைலாஞ்சி என்றால் என்ன?... பதில் தருகிறார் அஜயன் பாலா!
எழுத்தாளரான உங்களுக்கு டைரக்ஷன் மீது ஆர்வம் ஏற்பட்டதன் காரணம் என்ன?
நான் சினிமாவுக்கு வந்ததன் முக்கிய நோக்கமே இயக்குநர் ஆவதற்காகத்தான். ஆனால் இயக்குனாராவதற்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பல ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு இப்போது தான் படம் இயக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
மைலாஞ்சி என்றால் என்ன?
மருதாணிக்கு சுத்தமான தமிழ் பெயர் மைலாஞ்சி. மருதாணி இலைகளை அரைத்து கையில் வைத்து கொண்டால் கை சிவக்கும். மருதாணி சிவக்கும் தன்மையைப் பொறுத்து அப்பெண்ணின் காதல் ஆழம் தெரியும். இது ஒரு நம்பிக்கை. ஒரு பெண்ணின் மனதில் இருக்கும் அத்தகைய ஆழமான காதலை பற்றி இப்படம் பேசுகிறது. மேலும் இந்த படத்தில் கதை நடக்கும் ஊரின் பெயர் மைலாஞ்சி. காதல், ஊர் இரண்டையும் மனதில் வைத்து மைலாஞ்சி என்று பெயர் வைத்தேன்.
காதல் கதை என்பதால், சம காலத்தில் நடக்கும் ஆணவ படுகொலைகளை பற்றி இருக்குமா?
இது போன்ற எந்த விஷயங்களும் இந்த படத்தில் வேண்டாம் என தயாரிப்பாளர் டாக்டர் அர்ஜுன் சொல்லிவிட்டார். ஆனாலும் காதல் கதை தான் வேண்டும் என்றும் சொல்லி விட்டார். எனக்கும் முதல் படம் காதல் படம்தான் தர வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. எங்கள் இருவரின் சிந்தனையில் உருவான மாறுபட்ட காதல் திரைப்படம் இது. இந்த படத்தை பார்க்கும் போது உங்களுக்கு கண்டிப்பாக நீங்கள் இது வரை பார்க்காத ஒரு காதல் படத்தின் அனுபவத்தை தரும்.
இளையராஜாவை இசை அமைக்க வைத்த ரகசியம் என்ன?
நான் ராஜா சாரின் மிகப்பெரிய ரசிகன். இப்போது தன் சிறுவயதில் ரசித்த நடிகர்களை வைத்து படம் எடுக்கும் Fan Boy Trend தமிழ் சினிமாவில் இருக்கிறது. கமலின் ரசிகரான லோகேஷ் கனகராஜ் விக்ரம் இயக்கினார். ரஜினி ரசிகரான கார்த்திக் சுப்புராஜ் பேட்ட படம் தந்தார். இந்த வரிசையில் இளையராஜா ரசிகனான நான் ராஜா சாரை என் படத்தில் இசையமைக்க வைத்தள்ளேன். காதல் படங்கள் என்றால் ராஜா சாரை தவிர வேறு யாரை யோசிக்க முடியும்.
ஹீரோ - ஹீரோயின் செலெக்ஷன் பற்றி...?
பெண்ணை அவளின் உடல் சார்ந்து பார்ப்பது தவறு. பெண்ணின் அழகு என்பது அவளின் சிந்தனையில் உள்ளது. சாலையில், படிக்கும் இடத்தில், வேலை செய்யும் இடத்தில் நாம் பார்க்கும் ஒரு சராசரி பெண்ணை போன்று உள்ள ஹீரோயினை இந்த படத்தில் காட்டியுள்ளேன்.
மைலாஞ்சி படத்தின் ஹீரோயின் 'கிரிஷா குருப்' கோலி சோடா 2 உட்பட பல படங்களில் நடித்தவர். என் சிந்தனையில் உருவான கதைக்கு நடிப்பில் நல்ல வடிவத்தை திரையில் தந்திருக்கிறார்.
இப்போது திரையில் வன்மையாக ஹீரோக்கள் தான் அதிகம் இருக்கிறார்கள். மென்மையான ஹீரோக்கள் இல்லை. இந்த குறையை மைலாஞ்சி படத்தின் ஹீரோ ஸ்ரீராம் கார்த்தி போக்கி விடுவார். 80 களின் கால கட்டத்தில் இருந்த மோகன், முரளி போல் ஒரு காதல் ஹீரோவை ஸ்ரீராம் கார்த்தியிடம் எதிர் பார்க்கலாம்.
இனி உங்கள் பயணம் எழுத்தா? அல்லது இயக்கமா?
எழுத்தை எப்போதும் நிறுத்த முடியாது. தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். நான் சொல்ல வந்த விஷயத்தை பெரிய திரையில் சொல்லும் போது இன்னும் அதிகம் மக்களை சென்றடையும். இனி டைரக்டர் அஜயன் பாலாவை அதிகம் பார்க்கலாம்.

