
தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனக்கு ஒரு பேரன் வேண்டும் என்ற அவரது விருப்பத்தை வெளிப்படையாக, விளையாட்டுத்தனமாக கூறியது இணையத்தில் நெட்டிசன்களால் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. தன்னுடைய குடும்ப விஷயமாக இருந்தாலும் அதை பொதுவெளியில் இப்படி பேசக்கூடாது என்று சிரஞ்சீவிக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
90ஸ் காலகட்டத்தில் பெண் குழந்தை பிறந்தால் வீண் செலவு எனக்கருதி கருவிலேயே அழிக்கப்பட்டன. தப்பித்தவறி பிறந்து விட்டால் கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்த சம்பவங்களும் நடந்தேறி உள்ளன. பெண் குழந்தைகளை மரணத்தின் பிடியில் இருந்து காப்பாற்றவும், பெண் சிசுக்கொலையை ஒழிக்கவும் 1992-ல் ‘தொட்டில் குழந்தை திட்டம்’ மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறியக்கூடாது என்று சட்டம் கொண்டு வரப்பட்ட பின்னர் பெண் சிசு கொலை குறையத்தொடங்கியது.
தற்போதுள்ள காலகட்டத்தில் மக்கள் பெண் குழந்தைகளை அதிகம் விரும்புவது மட்டுமில்லாமல் கொண்டாடி வருகின்றனர். ஆனாலும் ஒரு சிலர் மனதில் ஆண் குழந்தை மேல் இருக்கும் அதீத ஆசை அவர்களது பேச்சில் வெளிப்பட்டு விடுகிறது.
அது போன்ற ஒரு சம்பவம் தான் தற்போது நடந்து பெரும் விவாதத்தையே ஏற்படுத்தி உள்ளது. அதாவது தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி படம் முன் வெளியீட்டு விழாவில் பெண் குழந்தை பற்றி விளையாட்டாக பேசியது வினையில் முடிந்திருக்கிறது.
இந்த நிகழ்வின் போது, சிரஞ்சீவி, வீட்டில் எல்லோரும் பெண்களாக இருப்பதால் தான் ஒரு பெண்கள் விடுதியில் வார்டனை போல் உணர்வதாக கூறினார். மேலும் தனது குடும்பப் பரம்பரையை தொடர பேரன் வேண்டும் என்று ஆசைப்படுவதாகவும் கூறினார். அதாவது ராம் சரண்க்கு ஆண் குழந்தை வேண்டும் என்று ஆசைப்படுவதாக கூறினார். மேலும், தனது மகன் ராம் சரணுக்கு இன்னொரு பெண் குழந்தை பிறந்துவிடுமோ என்று பயப்படுவதாகவும் அவர் கூறினார்.
நடிகர் ராம் சரண் மற்றும் மனைவி உபாசனா ஆகியோர் ஜூன் 2023-ல் கிளிங்காரா என்ற பெண் குழந்தையைப் பெற்றெடுத்தனர்.
சிரஞ்சீவிக்கு மகன் ராம் சரண் தவிர, ஸ்ரீஜா கொனிடேலா மற்றும் சுஷ்மிதா கொனிடேலா என இரண்டு மகள்கள் உள்ளனர். ஸ்ரீஜாவுக்கு நவிக்ஷா மற்றும் நிவ்ரதி என்ற இரு மகள்கள் உள்ளனர். அதே போல் சுஷ்மிதாவுக்கு சமாரா மற்றும் சம்ஹிதா என்ற இரு மகள்கள் உள்ளனர்.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதை தொடர்ந்து சில தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தாலும், சில தரப்பினர் சிரஞ்சீவிக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஆண் வாரிசு பற்றி சிரஞ்சீவி பொது வெளியில் விளையாட்டுத்தனமாக பேசி இருந்தாலும் இவரைப் போன்ற பிரபலங்கள் பொதுவில் என்ன பேச வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.
ஒரு சிலர் வீட்டில் எல்லாம் பெண் குழந்தைகளாக இருப்பதால் ஒரு ஆண் வாரிசு வேண்டும் என்று சிரஞ்சீவி ஆசைப்பட்டது தவறில்லை என்று அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிலர் சிரஞ்சீவியின் குறுகிய மனப்பான்மை இதன் மூலம் வெளிப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.
எப்படி இருந்தாலும், மெகா ஸ்டார் சிரஞ்சீவி சர்ச்சை கருத்துக்களை சொல்வது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் இவ்வாறு சொல்லி பல விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார்.