தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். கீர்த்தி சுரேஷ் 15 வருடங்களாக காதலித்து வந்த, துபாயில் வசிக்கும் கேரளாவை சேர்ந்த தொழில் அதிபர் ஆண்டனி தட்டிலை இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
தற்போது கீர்த்தி சுரேஷ் இந்தியில் வருண் தவான் ஜோடியாக இந்தியில் 'தெறி' படத்தின் ரீமேக்கான 'பேபி ஜான்' திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக பாலிவுட்டில் நுழைந்திருக்கிறார். கிறிஸ்துமஸ் அன்று வெளியான இந்த படம் தற்போது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் முடிந்து 'பேபி ஜான்' ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஒருவாரம் மும்பையில் முகாமிட்டிருந்து பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தியது. மேலும் இந்த படத்தின் ப்ரமோஷனுக்கான பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.
தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் ரிவால்வர் ரீட்டா, கன்னி வெடி ஆகிய படங்கள் கைவசம் வைத்துள்ளார். இந்த நிலையில் சினிமாவை விட்டு விலக நடிகை கீர்த்தி சுரேஷ் முடிவு செய்து இருப்பதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மும்பை சென்ற நடிகை கீர்த்தி சுரேஷை சிலர் புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது அவர்கள் கீர்த்தி சுரேஷை பார்த்து கிரித்தி என்ற அழைத்து போட்டோவுக்கு போஸ் கொடுக்கும்படி கூறினர். அவர்களிடம் தனது பெயர் கிரித்தி இல்லை, கீர்த்தி சுரேஷ் என்று கூறினார். தொடர்ந்து சிலர் வேண்டுமென்றே 'கிரித்தி தோசை' என்று அழைத்து அவரை கோபப்படுத்தினர்.
தென்னிந்திய நடிகர்களை வடநாட்டில் தோசை என்று அழைப்பது உண்டு. தன்னை தோசை என்று அழைத்ததும் கடுப்பான நடிகை கீர்த்தி சுரேஷ், ''நான் கிரித்தி தோசை இல்லை. கீர்த்தி சுரேஷ். ஆமாம் எனக்கு தோசை பிடிக்கும்'' என்று சொல்லி பதிலடி கொடுத்தார்.
நடிகை கீர்த்தி சுரேஷின் இந்த அணுகுமுறை இணையத்தில் வைரலாகி அவருக்கு பலர் பாராட்டுக்களை தெரிவித்தாலும், சிலர் தென்னிந்தியர்களைக் கிண்டல் செய்யும் இந்த வார்த்தைக்கு கடுமையாக எதிர்வினையாற்றாமல் கீர்த்தி சுரேஷ் சென்றது தவறு என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்திய சினிமாவில், சில குறிப்பிட்ட நடிகைகளுக்கு மட்டுமே, தென்னிந்தியாவில் இவர்களின் வெற்றியை பார்த்து, ஹிந்தி படவுலகில் கதவுகள் தானே திறந்தது. அவர்களும், அந்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக்கொண்டு, தங்கள் முத்திரையை பதித்துள்ளனர். அந்த வகையில், பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவி தொடங்கி தற்போது ஜவானில் நடித்துள்ள லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா வரை பலரும் இங்கிருந்து சென்றவர்களே.
10 வருடங்களுக்கு முன் தென்னிந்திய படங்களை, வட இந்தியாவில் கேலி செய்வார்கள். பிறகு கலை வடிவத்தைப் புரிந்துகொள்ள தொடங்கினார்கள். ஆனாலும் பாலிவுட்டில் பல சமயங்களில் தென்னிந்திய நடிகர், நடிகைகளை ஏளனம் செய்யும் போக்கும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. சமீபத்தில் கூட கபில் சர்மா நிகழ்ச்சியில் இயக்குநர் அட்லியின் நிறத்தை கேலி செய்தது குறிப்பிடத்தக்கது.
என்னதான் தென்னிந்திய நடிகர், நடிகைகள் பல ஏளனங்களை சந்தித்தாலும், பாலிவுட் படங்களுக்கு நம் தென்னிந்திய படங்கள் சளைத்ததல்ல என்பதை பல வெற்றிப்படங்கள் மூலம் நிறுபித்ததது மட்டுமல்லாமல் ஆஸ்கார் விருதை (ஆர்ஆர்ஆர் படம்) வென்றதன் மூலம் நிரூபித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.