

சிறப்பான நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு ரசிகர் வட்டத்தை ஏற்படுத்திக் கொண்டவர் நடிகர் தனுஷ். வித்தியாசமான கதைக்களங்களில் தனது தனித்துவமான இயல்பான நடிப்பின் மூலம் தனுஷ் நிறைய வெற்றி திரைப்படங்களை கொடுத்துள்ளார். தமிழ் திரை உலகையும் தாண்டி பாலிவுட்டிலும் தனுஷ் ஒரு சில வெற்றி திரைப்படங்களை கொடுத்துள்ளார். இதனால், தனுஷிற்கு தேசிய அளவில் எந்த ஒரு அறிமுகமும் தேவையில்லை. சமீபத்திய பரபரப்பாக நடிகர் தனுஷின் செயல்பாடுகள் பெரிய அளவில் பேசப்பட்டு வருகின்றன.
வெளிப்படையாக தனுஷ் தனது அரசியல் பயணத்தைப் பற்றி எதுவும் பேசாமல் இருந்தாலும் , அவர் தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று ஒருபோதும் கூறவில்லை. அவரது மழுப்பலான பதில்கள் அவர் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்ப்பினை அதிகப்படுத்தி உள்ளது. தற்போது தினமும் தனுஷ் சம்பந்தப்பட்ட செய்திகள் மீடியாக்களில் உலா வரத் தொடங்கியுள்ளன. அவரும் அடிக்கடி தனது ரசிகர் மன்றத்தினரை சந்தித்துக் கொண்டு வருகிறார்.
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று , ஒரு சில கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. விஜயின் இந்த வெற்றியை ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது மட்டுமின்றி , பல தமிழ் நடிகர்கள் மனதிலும் அரசியல் ஆசையை விதைத்துள்ளது. சமீபத்திய காலமாக தனுஷ் , சிவகார்த்திகேயன் ஆகியோரின் தொடர் நடவடிக்கைகள் , அவர்கள் அரசியலுக்கு அச்சாரம் போடுவதைப் போல இருக்கிறது.
தனுஷ் தொடர்ச்சியாக அரசியல் சார்பு கொண்ட ஒரு சில பணிகளை வெளிப்படையாகவே மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக அவரது நற்பணி மன்றம் நற்பணி இயக்கமாக மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக நிர்வாகிகளை நியமனம் செய்யும் பணியும் வேகமாக நடந்து வருகிறது. தனுஷ் நற்பணி இயக்கத்தின் சார்பில் நேற்று சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள செம்மஞ்சேரியில் அமைந்துள்ள ஒரு தனியார் கல்லூரியில் , மாவட்ட மகளிர் அணி கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து சுமார் 5000 பெண்கள் கலந்து கொண்டனர். இவர்கள் தனுஷை நேரில் சந்தித்து உரையாடி புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிக்கன் பிரியாணி , சிக்கன் 65 , முட்டை, பிரட் அல்வா உள்ளிட்ட உணவுகள் பரிமாறப்பட்டது. மேலும் விழாவில் கலந்து கொண்ட அனைத்து மகளிருக்கும் வெள்ளி காமாட்சி விளக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
இந்த காமாட்சி விளக்கு பின்புறத்தில் தாமரை சின்னம் போன்ற அச்சு பதியப்பட்டிருப்பதால் , தனுஷ் பாஜகவில் சேர இருக்கிறாரா? என்று கேள்விகள் கிளம்பியுள்ளது. மேலும் இத்தனை காலம் இல்லாமல் இப்போது தனுஷ் எதற்காக அரசியல் கட்சியின் நிகழ்ச்சியை போல் கூட்டம் நடத்துகிறார். அதுவும் விலை உயர்ந்த வெள்ளி விளக்குகளை பரிசாக அளிக்க என்ன காரணம்? என்று சமூக வலைதளங்களில் விவாதம் தொடங்கியுள்ளது. மேலும் தனுஷின் பின்னணியில் பாஜக இருப்பதாக ஒரு சில சந்தேகங்களை கிளப்பியுள்ளனர்.
இந்த விழாவிற்கு பாரம்பரிய உடையில் வந்த தனுஷ், மகளிர் கூட்டத்தில் 5 நிமிடங்கள் மட்டுமே பேசினார். அவரது பேச்சில் எந்த ஒரு அரசியலும் கலக்கப்படவில்லை. சாதாரண விசாரிப்புகளுடன் , அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த ஆண்களை , நிர்வாகிகள் திருப்பி அனுப்பினர்.