
தற்போது கோலிவுட் திரையுலகில் மிகவும் பிசியாக வலம் வரும் நடிகர்களில் ஒருவரான தனுஷ், தென்னிந்திய நடிகர் என்பதை தாண்டி பான் இந்திய நடிகராக வளர்ந்து விட்டார். ஹாலிவுட் அளவுக்கு வளர்ந்த இவர், தமிழ், தெலுங்கு, இந்தி என மாறி மாறி வெவ்வேறு மொழி படங்களின் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், நடிகர் என்பதைத் தாண்டி வெற்றிகரமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், பாடகராகவும் பன்முக பரிமாணத்தில் தன்னை ரசிகர்கள் மனதில் நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.
2025-ல் நடிகர் தனுஷின் புதிய படங்கள் ரசிகர்களை கொண்டாட வைக்க அடுத்தடுத்து வெளியாக உள்ளன.
தனுஷ் நடிப்பில் 'குபேரா' படம் 2025 பிப்ரவரியில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் தனுஷ்க்கு 51-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் சேகர் காமுலா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவும், கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனாவும் நடிக்கிறார்கள்.
அதேபோல் தனுஷ் இயக்கி, நடிக்கும் 52-வது படம் 'இட்லி கடை'. இந்தப் படத்தை டான் பிசர்ஸ் நிறுவனமும் தனுஷின் வண்டர் பால் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்த படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளது.
தனுஷ் இயக்கத்தில் 3-வதாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படத்துக்கு ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் தனுஷின் சகோதரி மகன் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் 'காதல் பெயில்' என்ற பாடலின் வரிகளை தனுஷ் எழுதி பாடியுள்ளார். 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படமும் 2025-ல் வெளியாக உள்ளதாக தகவல்.
மேலும் 2025-ம் ஆண்டு ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் 'தேரே இஷ்க் மெய்ன்' என்கிற பாலிவுட் படத்திலும் நடிகர் தனுஷ் நடிக்கிறார். இந்த படம் முடிந்ததும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி படத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது.
விவாகரத்து, நயன்தாராவுடன் வழக்கு, வதந்தி போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையே 2025-ல் தனுஷின் படங்கள் அடுத்தடுத்து வெளிவர இருப்பதால் இது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.