பார்க்கிங் பட வெற்றிவிழாவில் நடிகர் ஹரிஷ் கல்யாண், இயக்குனருக்கு தங்க காப்பை பரிசாக வழங்கினார்,
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தோனி என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்த எல்ஜிஎம் படம் எதிர்மறை விமர்சனங்களால் ரசிகர்களிடையே போதிய வரவேற்பை பெறவில்லை. இந்தப் படத்தைத் தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வந்த படம் தான் பார்க்கிங்.
திரில்லர் டிராமாவான இந்த திரைப்படத்தை 'பலூன்' பட இயக்குனர் கே.எஸ்.சினிஷ், சோல்ஜர்ஸ் ஃபேக்டரி சார்பில் தயாரித்துள்ளார். மேலும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார்.
இந்த படத்தின் கதாநாயகியாக இந்துஜா நடித்துள்ளார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைக்க, ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படம் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் வெற்றிவிழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், இயக்குனர் ராம்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் நடிகர் ஹரிஷ் கல்யாண் படத்தின் இயக்குனர் ராம்குமாருக்கு தங்கக்காப்பு ஒன்றை பரிசளித்துள்ளார்.
இதுகுறித்து இயக்குனர் ராம்குமார் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், இந்த அன்பின் அடையாளத்திற்கு நன்றி ஹரிஷ் கல்யாண் அண்ணா. இதை நான் எதிர்பார்க்கவில்லை.
எனக்கு கையில் காப்பு அணிவது பிடிக்கும் என்பதை நினைவில் வைத்து எனக்கு பரிசளித்துள்ளீர்கள், உங்கள் மகிழ்ச்சிகரமான பரிசுக்கு நன்றி' என்று பதிவிட்டுள்ளார்.