

புரூஸ் லீ-க்கு பிறகு அதிரடி ஆக்ஷன் காட்சிகளால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர், ஜாக்கிசான். வேடிக்கையான சண்டைக்காட்சிகளின் மூலம் 90ஸ் கிட்ஸ்களின் நாயகனாக திகழ்ந்து வரும் ஜாக்கி சான், ஆக்ஷன் ஸ்டண்ட்ஸ் என்று சொன்னாலே அதில் நம்பர் 1 இடத்தில் இருப்பவர் இவர்தான். உலக புகழ் நடிகர், குங்ஃபூ மற்றும் கராத்தே கலைஞருமான நடிகர் ஜாக்கி ஜானுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
சண்டை காட்சிகளில் இவர் செய்யும் சாகசம் பிரம்மிக்க வைக்கும். இவரது உடல் ரப்பரால் செய்ததா... சண்டைக் காட்சிகளில் இவருக்கு மட்டும் இறக்கை முளைத்துவிடுமா.. என ஆச்சரியத்தின் உச்சிக்கே நம்மைக் கொண்டு செல்பவர் ஜாக்கி சான்.
அதுமட்டுமின்றி இவர் பொதுவாக சண்டை காட்சிகளில் டூப் போடுவதில்லை என்பது ஆச்சரியமான விஷயம். இதனால் பலமுறை அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பல அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார் ஜாக்கி சான்.
ஹாலிவுட்டையே அண்ணாந்து பார்க்க வைத்த இந்த ஆசிய சூப்பர் ஸ்டார் இதுவரை 100 படங்களுகு மேல் நடித்துமுடித்துவிட்டார். அவற்றில் பெரும்பாலும் வசூலைக் குவித்த படங்களே அடங்கும்.
‘1985', ‘போலீஸ் ஸ்டோரி', ‘டிரங்கன் மாஸ்டர்', ‘ரஷ் ஹவர்', ‘கராத்தே கிட்' போன்ற பல ஹிட் படங்களை கொடுத்ததன் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்துள்ளார். இவரது படங்கள் உலகம் முழுவதும் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டு வருகிறது. ஜாக்கிசான் நடிப்பில் ‘கராத்தே கிட்: லெஜண்ட்ஸ்' படம் கடந்த மே மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது 71 வயதாகும் ஜாக்கிசான் ஆரம்ப கட்டத்தில் இவரது குடும்பம் வறுமையில் மிகவும் கஷ்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாக்கிசான் தனது ரூ.3,400 கோடி சொத்துகளை ஏழை மக்களின் படிப்புக்காகவும்,
இயற்கை பேரிடர்களுக்கும் தனது ஜாக்கிசான் சாரிடபிள் பவுண்டேஷனுக்கு நன்கொடையாக வழங்கி விட்டார் என்ற செய்து இணையதளங்களில் வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்றது.
இந்த நிலையில், ரூ.3400 கோடியை தானமாக வழங்கியது குறித்து தனது மகன் என்ன கூறினார் என்பது பற்றி உணர்ச்சிவசப்பட்டு பேசியுள்ளார் நடிகர் ஜாக்கி சான்.
அதில், என்னுடைய மகனிடம், ‘என்னுடைய ரூ3400 கோடி சொத்துக்களை ஏழைகளுக்காக அறக்கட்டளைக்கு வழங்கியது உனக்கு வருத்தமாக இல்லையா என்று கேட்டேன். அதற்கு என் மகன், 'ஜேசி சான்' நானும் திறமைசாலிதான், தானாகவே உழைத்து பணம் சம்பாதிக்க விரும்புகிறேன். நீங்கள் சம்பாரித்த செல்வத்தை நான் வாரிசு என்பதற்காக கொடுப்பதில் எந்த அர்த்தமுமில்லை. பிறர் உதவியின்றி உழைப்பின் மூலம் நானும் முன்னேற ஆசைப்படுகிறேன் என கூறிவிட்டான்’ என்று தனது மகன் குறித்து பெருமையுடன் கூறியுள்ளார் ஜாக்கி சான்.
தந்தையின் கொடை வள்ளலையும், மகனின் பெருந்தன்மையையும் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.