Jackie Chan
Jackie Chan

‘இந்த மனசு யாருக்கு வரும்’- ஏழை மாணவர்களின் கல்விக்காக சொத்துகளை தானமாக வழங்கிய ஜாக்கிசான்

ஏழை மாணவர்களின் கல்விக்காக ரூ.3,400 கோடி சொத்துகளை ஜாக்கிசான் தானமாக வழங்கி உள்ளார். இந்த மனசு யாருக்கு வரும் என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
Published on

புரூஸ் லீ-க்கு பிறகு அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர், ஜாக்கிசான். வேடிக்கையான சண்டைக்காட்சிகளின் மூலம் 90ஸ் கிட்ஸ்களின் நாயகனாக திகழ்ந்து வரும் ஜாக்கிசான், ஆக்ஷன் ஸ்டண்ட்ஸ் என்று சொன்னாலே அதில் நம்பர் 1 இடத்தில் இருப்பவர். உலக புகழ் நடிகர், குங்ஃபூ மற்றும் கராத்தே கலைஞருமான நடிகர் ஜாக்கிசானுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

சண்டை காட்சிகளில் இவர் செய்யும் சாகசம் பிரம்மிக்க வைக்கும். இவரது உடல் ரப்பரால் செய்ததா... சண்டைக் காட்சிகளில் இவருக்கு மட்டும் இறக்கை முளைத்துவிடுமா.. என ஆச்சரியத்தின் உச்சிக்கே நம்மைக் கொண்டு செல்பவர் ஜாக்கிசான். அதுமட்டுமின்றி இவர் பொதுவாக சண்டை காட்சிகளில் டூப் போடுவதில்லை என்பது ஆச்சரியமான விஷயம். ஹாலிவுட்டையே அண்ணாந்து பார்க்க வைத்த இந்த ஆசிய சூப்பர் ஸ்டார் இதுவரை 100 படங்களுக்கு மேல் நடித்துமுடித்துவிட்டார். அவற்றில் பெரும்பாலும் வசூலைக் குவித்த படங்களே அடங்கும்.

இதையும் படியுங்கள்:
என்னது… ஜாக்கி சானுக்கு வயசாயிடுச்சா? சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்!
Jackie Chan

‘1985', ‘போலீஸ் ஸ்டோரி', ‘டிரங்கன் மாஸ்டர்', ‘ரஷ் ஹவர்', ‘கராத்தே கிட்' போன்ற பல ஹிட் படங்களை கொடுத்ததன் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்துள்ளார். இவரது படங்கள் உலகம் முழுவதும் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டு வருகின்றன. ஜாக்கிசான் நடிப்பில் ‘கராத்தே கிட்-2' படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

தற்போது 71 வயதாகும் ஜாக்கிசான் ஆரம்ப கட்டத்தில் இவரது குடும்பம் வறுமையில் மிகவும் கஷ்டப்பட்டதாக கூறப்படுகிறது. திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு, சீனா நாடக அகாதமியின் செவன் லிட்டில் ஃபார்ச்சூன்களில் ஒருவராக இருந்தார். அங்கு இவர் கம்பக்கூத்து, தற்காப்புக் கலைகள், நடிப்பு ஆகியவற்றைப் பயின்றார்.

இதற்கிடையில் ஜாக்கிசான் தனது சொத்தை நன்கொடையாக அளித்துள்ள தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் தனது ரூ.3,400 கோடி சொத்துகளை ஏழை மக்களின் படிப்புக்காகவும், இயற்கை பேரிடர்களுக்கும் தனது ஜாக்கிசான் சாரிடபிள் பவுண்டேஷன் மூலம் நன்கொடையாக வழங்கியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “சிறிய வயதில் வறுமையால் தவித்திருக்கிறேன். அந்த கஷ்டம் எனக்கு தெரியும். நான் பட்ட கஷ்டங்கள் மற்றவர்கள் படக்கூடாது என்பதால்தான் இந்த முயற்சி. மற்றவர்களுக்கு உதவி செய்யும்போது வரும் சந்தோஷம் அளவிட முடியாதது'', என்று குறிப்பிட்டார்.

ஏழை மக்களுக்காக தனது சொத்துகளை வழங்கியுள்ள ஜாக்கிசானுக்கு உலகம் முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இதையும் படியுங்கள்:
"சண்டைக் காட்சிகளில் யதார்த்தமே இல்லை" - ஜாக்கி சான் ஓபன் டாக்!
Jackie Chan
logo
Kalki Online
kalkionline.com