தேவா குடும்பத்தில் மீண்டும் ஒரு பெரிய சோகம்: இசையமைப்பாளர் சபேஷ் மகன், நடிகர் கார்த்திக் காலமானார்!

இசையமைப்பாளர் தேவாவின் மறைவுத் துயரம் விலகும் முன், நடிகர் கார்த்திக் சபேஷ் (37) திடீர் மரணம்!
Karthik sabesh passed
karthil sabesh passed
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on: 

தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளரான தேவா இரு தினங்களுக்கு முன்னர் காலமானார். தேவா மறைந்த செய்தி, ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் சோகத்தை ஏற்படுத்திய வடு மாறுவதற்கு முன்னர், அந்த குடும்பத்தை சேர்ந்த மற்றொருவரும் மறைந்து இருப்பது, ரசிகர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது. தேவாவின் சகோதரரும் , தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற இசையமைப்பாளரான சபேஷ்ஷின் மகன் கார்த்திக் சபேஷ் இன்று காலையில் காலமானார் , அவருக்கு வயது 37 .

90-களின் காலத்தில் தமிழ் சினிமாவில் இசை சாம்ராஜ்யத்தை நடத்தி வந்தவர் தேனிசைத் தென்றல் தேவா அவர்கள். தேவாவிற்கு இசையமைப்பில் உதவியாக அவரது சகோதரர்கள் சபேஷ் - முரளி இருந்தனர். தேவா இசை அமைக்கும் திரைப்படங்களுக்கு பின்னணி இசையையும் இவர்களை அமைத்து வந்தனர்.பின்னர் சபேஷ் - முரளி ஆகியோர் தனியாக இசையமைக்கவும் தொடங்கினர். இந்த இணை 'சமுத்திரம்' திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானது. தவமாய் தவமிருந்து, இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி , பொக்கிஷம் , மாயாண்டி குடும்பத்தார் உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களுக்கு இவர்கள் இசையமைத்தனர்.

மகிழ்ச்சிகரமாக சென்று கொண்டிருந்த தேவா குடும்பத்தில் , கடந்த ஆண்டு இசையமைப்பாளர் சபேஷ் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக காலமானது பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. அவரின் மறைவு தேவாவையும் அவரது குடும்பத்தினரையும் மிக கடுமையாக பாதித்திருந்தது. அந்த துயரம் மறைவதற்கு முன்னர் , அந்த குடும்பத்தின் மூத்த உறுப்பினரான இசையமைப்பாளர் தேவா கடந்த சில தினங்களுக்கு முன்னால் காலமானார். தேவாவின் மறைவிற்கு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் திரண்டு அஞ்சலி செலுத்தியது.

தமிழக முதல்வர் விஜய் உள்ளிட்ட பல்வேறு அரசியல் பிரமுகர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். தமிழக அரசின் மரியாதையுடன் தேவாவின் இறுதிச் சடங்குகள் அவரது சொந்த ஊரில் நடைபெற்றது.தேவா மறைந்த சோகமே இன்னும் திரையுலகை விட்டு அகலாத நிலையில், தற்போது அவரது குடும்பத்தில் அடுத்த அதிர்ச்சியாக மற்றொரு நபரும் உயிரிழந்துள்ளது குடும்பத்தினரை நிலைகுலையச் செய்துள்ளது.

இசையமைப்பாளர் தேவா குடும்பத்தில் மிகவும் இளம் வயதில் திரைத்துறையில் அறிமுகமானவர் கார்த்திக் சபேஷ். ஒரு சில திரைப்படங்களில் இவர் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து உள்ளார். காதல் சொல்ல வந்தேன் , பட்டத்து யானை ஆகிய திரைப்படங்களில் இவரது நகைச்சுவை கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. மேலும் வல்லவன், குளிர் 100 டிகிரி ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.

karthik in pattathu yaanai
karthik in pattathu yaanai youtube

நகைச்சுவை நடிப்பில் வளர்ந்து வந்தாலும், உடல் நலக்குறைவு காரணமாக திரைப்படங்களில் நடிப்பதை பிற்காலங்களில் தவிர்த்து வந்துள்ளார். நீண்ட காலமாக உடல்நிலை குறைவிற்கு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கார்த்திக்கிற்கு ரம்யா கார்த்திக் என்ற மனைவியும் , பிரிஷானிதாரா, ஹைரானிதாரா என்ற ​இரு பெண் குழந்தைகளும் உள்ளனர். அவருக்கு கீதா சபேஷ் மற்றும் அர்ச்சனா சபேஷ் என்கிற இரு மூத்த சகோதரிகளும் உள்ளனர்.

கார்த்திக் மறைவிற்கு திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் நண்பர்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதல்களையும் தெரிவித்து வருகின்றனர்.​இளம் வயதிலேயே நடிகர் கார்த்திக் சபேஷ் மரணமடைந்த செய்தி தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com