

டாடா படத்தின் மூலம் பிரபலமான நடிகரான கவின், தற்போது தனது வாழ்க்கையின் முக்கியமான கட்டத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார். தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பாலும், எதார்த்தமான நடிப்பாலும் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் நடிகர் கவின். தொடக்க காலகட்டத்தில் விஜய் டிவி சீரியலில் தலை காட்டிய கவின், பின்னர் தனது திறமையின் மூலம் வெள்ளித்திரையில் வாய்ப்புகளை பெற்றார்.
விஜய் டிவியின் புகழ்பெற்ற தொடரான 'கனா காணும் காலங்கள்' மூலமாக தனது நடிப்பு வாழ்க்கையை கவின் தொடங்கினார். அதைத் தொடர்ந்து விஜய் டிவியின் ஒரு சில நிகழ்ச்சிகளில் தலைக்காட்டி வந்தார். 'சரவணன் மீனாட்சி' தொடர் இரண்டாம் பாகத்தில் 'வேட்டையன்' என்ற கதாபாத்திரத்தில் நடித்து, அதன் மூலம் சின்னத்திரையில் புகழ் பெற தொடங்கினார். அதற்கு கிடைத்த பின்னர் பெயரை வைத்து பல விஜய் டிவி தொடர்களிலும் நடித்து வந்தார்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு துணை நடிகராக தொடக்கத்தில் அறிமுகமாகி, ‘பிட்சா’, ‘இன்று நேற்று நாளை’, ‘சத்ரியன்’ உள்ளிட்ட திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார்.கவின் முதன்முறையாக ‘நட்புனா என்னனு தெரியாதா’ என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக திரையில் தோன்றினார். அந்த திரைப்படத்தை சிவா இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அதன் பின்னர் மீண்டும் விஜய் டிவியில் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு வந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சி கவினுக்கு மேலும் நல்ல பிரபலத்தை கொடுத்தது.
அதைத் தொடர்ந்து, கணேஷ் கே.பாபு இயக்கத்தில் அவர் கதாநாயகனாக நடித்து வெளியான ‘டாடா’ திரைப்படம், அவரது சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று, சூப்பர் ஹிட் திரைப்படமானது. இந்த திரைப்படத்தின் மூலம் கவின் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இளம் கதாநாயகனாக உயர்ந்தார்.
தற்போது நயன்தாராவுடன் அவர் ‘ஹை’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் , அது ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாக உள்ளது. மேலும் ‘பேர் சொல்லும் பிள்ளை’ என்ற திரைப்படத்திலும் கவின் நடித்து வருகிறார். சினிமாவில் தனது வெற்றி பயணத்தை சிறப்பாக தொடங்கிய கவின் 2023 ஆம் ஆண்டு, தனது நீண்ட நாள் காதலியான மோனிகா டேவிட்டை திருமணம் செய்து கொண்டார். கவினின் திருமணம் திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் முன்னிலையில் பிரமாண்டமாக நடைபெற்றது.
தனது சினிமா வாழ்க்கையிலும் திருமண வாழ்க்கையிலும் ஒருசேர மகிழ்ச்சிகரமாக சென்று கொண்டிருந்த கவின், தனது வாழ்க்கையில் மேலும் ஒரு மகிழ்ச்சிகரமான மைல் கல்லை எட்டியுள்ளார். கவின் மோனிகா தம்பதிக்கு இன்று மதியம் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த செய்தி தமிழ் சினிமா வட்டாரத்தையும் ரசிகர்களையும் மகிழ்ச்சிக்கு ஆளாகியுள்ளது.
இந்த மகிழ்ச்சியான செய்தியை கவின் தனது X பக்கத்தில் " எங்கள் வாழ்க்கையை இரட்டிப்பு மகிழ்ச்சியால் நிறைத்த இறைவனுக்கு நன்றி. 🙏🏻 எங்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளனர். :) ♥️" என்று மகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார். டாடா திரைப்படத்தில் சிறந்த அப்பாவாக நடித்திருந்த கவின், தற்போது உண்மையாகவே அப்பா ஆகி உள்ளார்.