
சிறந்த கலைஞருக்கு நிறம் ஒரு தடையில்லை என நிரூபித்தவர் நடிகர் ராஜேஷ்.
ராஜேஷ் 1949 ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பிறந்தவர். காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பியூசி முடித்து பச்சையப்பா கல்லூரியில் சேர்ந்து சில காரணங்களால் இடைநின்று பிறகு பல பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவராக இருந்திருக்கிறார்.
1979 ல் 'கன்னிப்பருவத்திலே' படத்தில் கதாநாயகனாக நடித்து ரசிகர்கள் வரவேற்பு பெற்று சுமார் 150 படங்களுக்கு மேல் கதாநாயகனாகவும் குணசித்திர நடிகராகவும் பலரின் மனங்களை கவர்ந்த நடிகராக விளங்கியவர் இவர். 1974 ஆம் ஆண்டு 'அவள் ஒரு தொடர்கதை' படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்ததே வெள்ளித்திரையில் இவரின் அறிமுகம்.
அதன் பின் 1984 ல் இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் வந்த 'அச்சமில்லை அச்சமில்லை' படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்த இவரது நடிப்புத் திறன் அடுத்தடுத்து இவருக்கு கதாநாயகன் வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தது. மிக அருமையான தமிழ் உச்சரிப்பு, மிகையில்லாத யதார்த்த நடிப்பு ராஜேஷ் அவர்களின் தனித்துவம். பல படங்களில் நல்ல குணம் கொண்ட கதாபாத்திரங்களையே தேர்வு செய்து நடித்தவர்.
நடிப்புடன் புத்தகங்கள் வாசிப்பதிலும், எழுதுவதிலும் ஆர்வம் உள்ளவராகவும் இருந்துள்ளார். உலக சினிமா முதல் தத்துவம், கம்யூனிசம், ஆன்மீகம், ஜோதிடம் இவற்றுடன் நாத்திகத்தையும் பின்பற்றியவர். கடவுள் மறுப்பாளராக இருந்து பின்னாளில் ஜோதிடத்தை ஆராய்ந்து அதில் ஆழ்ந்த அறிவுடனும் மாறி இருக்கிறார்.
ஒரு பிரபலமான இதழுக்கு அளித்த பேட்டியில் "நான் தந்தை பெரியாரை நன்றாக படித்து இருக்கிறேன். வெளிநாட்டு அறிஞர்கள், கடவுள் மறுப்பாளர்கள், நாத்திகர்கள், தத்துவ மேதைகள், விஞ்ஞானிகள், புரட்சியாளர்களின் வாழ்க்கை சரித்திரங்கள் பலவற்றையும் பார்த்திருக்கிறேன். ஆனால் என்னை அதிகம் ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கியது நமது ஜோதிட சாஸ்திரம் தான்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜோதிடத்தில் நடந்த 50 உண்மை நிகழ்ச்சிகளை ஆதாரங்களுடன் எழுதிய தொகுப்பு அப்போது வாசகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று அவைகள் 'ஜோதிடம் ஒரு புரியாத புதிர்' என்ற நூலாகவும் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கமலஹாசன் நடித்த வெற்றிப்படங்களான சத்யா, மகாநதி மற்றும் விருமாண்டி போன்ற படங்களில் இவரது கதாபாத்திரங்களும் பெரியதாக பேசப்பட்டது.
திரைத் துறையில் மட்டுமல்லாமல் இவர் தொழில் துறையிலும் தடம் பதித்தவர். உணவகங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலிலும் இவர் ஈடுபட்டு தொழிலதிபராகவும் விளங்கியவர்.
பல ஹாலிவுட் நடிகர்களின் வாழ்க்கை வரலாற்றையும் தமிழில் எழுதியுள்ளார்.
1985 ஆம் ஆண்டு சென்னை கே.கே நகர் அருகே படப்பிடிப்புக்காகவே ஒரு பங்களாவை கட்டிய முதல் தமிழ் நடிகர் இவர்தான் என்கிறார்கள். இந்த பங்களாவை அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் திறந்து வைத்து அதில் பல தமிழ், மலையாளம் மற்றும் இந்தி திரைப்பட படப்பிடிப்பு நடத்தப்பட்டன. அதன் பின் வந்த சூழலில் 1993 ஆம் ஆண்டு அதை விற்றதாகவும் கூறப்படுகிறது.
இவைகளுடன் அரசியலிலும் தனது இருப்பை காட்டியுள்ளார். 1987 முதல் 91 வரை அரசியலில் தீவிரமாக இருந்தவர் இவர். கார்ல் மார்க்ஸ்ன் சீடரான இவர் இங்கிலாந்து சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
இவர் நடிகர் முரளிக்கு டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி இருக்கிறார். மேலும் பெரியதிரையில் வாய்ப்பை எதிர்பாராமல் தொலைக்காட்சி தொடர்களிலும் இடைவிடாமல் தனது நடிப்புத் திறனை காட்டியவர்.
ராஜேஷ் தமிழ்நாடு அரசு எம்.ஜி/ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரியின் தலைவராக இரண்டு ஆண்டுகளாக பொறுப்பு வகித்தது சிறப்பு.
கலைத்துறையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தனது பங்களிப்பை தந்து வந்த ராஜேஷ் சிறந்த நடிகராக மட்டுமல்லாது ஆசிரியர், பேச்சாளர், அரசியல் ஆர்வம் கொண்டவர், தொழிலதிபர், எழுத்தாளர், ஜோதிட ஆர்வலர் என பன்முக திறமைகளை பெற்றிருந்தது ஆச்சரியத்திற்குரியது.
நடிகர் ராஜேஷ் மறைவு வருத்தம் எனினும் திரைத்துறை மற்றும் அவரது எழுத்து படைப்புகள் என்றும் அவர் பெயர் சொல்லும்.