

தமிழ் திரை உலகில் 50 ஆண்டுகளாக ஒரு சகாப்தமாக திகழ்ந்து வருபவர் ரஜினிகாந்த். எத்தனை நடிகர்கள் வந்தாலும் ஒட்டு மொத்த தமிழகத்திலும் ரஜினி என்ற பெயர் மந்திர சொல்லாக ஒலித்து வருகிறது. அவரது தனி ஸ்டைல்தான், ரஜினியின் தாரக மந்திரம். இந்த மந்திரம் தான் அவரை சூப்பர் ஸ்டாராக உயர்த்தியது.
இத்தனை ஆண்டு காலம் திரை உலகில் தனி சகாப்தத்தை உருவாக்கி வரும் ரஜினி நடிப்பில் படம் எப்போது வரும் என காத்திருக்கும் ரசிகர்கள், தமிழகம் மட்டுமின்றி சர்வதேச அளவில் காத்திருக்கின்றனர்.
அந்த அளவுக்கு சினிமாவில் ஒரு மாயாஜாலத்தை உருவாக்கி உள்ளார் ரஜினிகாந்த். இது நான் சேர்த்த கூட்டம் அல்ல. இது தானாக சேர்ந்த கூட்டம் என ரஜினியின் கம்பீர குரல் தமிழ் சினிமா ரசிகர்களை ஆட்டுவித்து வருகிறது.
ரஜினிகாந்தின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல பல கவிஞர்கள் கவிதைகள் இயற்றியுள்ளனர். அவர் இளமையின் பெருமை, உச்ச நட்சத்திரம், ரசிகர்கள் மனதில் மகிழ்ச்சி பொங்கும் புன்னகைக்கு சொந்தக்காரர் எனப் பலவிதமாகப் போற்றப்பட்டு, அவரது பிறந்தநாள் விழாக்கள் விமர்சையாகக் கொண்டாடப்படுகின்றன.
75-வது பிறந்தநாள் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்தநாளுக்கு கவிதை வடிவில் வாழ்த்து...
நூற்றியிருபது ஆண்டுகள் வாழ்ந்திடுக!
கர்நாடகத்தில் பிறந்த கறுப்புச் சூரியரே!
தமிழ்நாட்டில் வதிந்து தங்கமாக ஜொலிப்பவரே!
இமயத்தில் என்றைக்கும் இறைதேடும் பக்திமானே!
எழுபத்தைந்தாண்டு அகவையில் ஐம்பது ஆண்டுகளை
அகலத்திரை தனக்கே அர்ப்பணித்த அருட்செம்மலே!
தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி வங்கமென்று
ஆறேழு மொழிப் படங்களிலும் அசத்தி வருபவரே!
சூப்பர் ஸ்டாராகவே சொக்க வைக்கும் தனியிடத்தில்
என்றைக்கும் நின்று ரசிகர்களின் இதயத்தில் வாழ்பவரே!
எந்த நடிகருக்கும் எம்மூர் இளைஞர்கள் இவ்வளவுபேர்
பாலாபிஷேகம் செய்து பவித்திரமாய் மகிழ்ந்திருந்ததாய்
ஏடுகள் எதிலுமே இல்லை இதுபோன்ற வரலாறு!
இறைவனின் கடாட்சம் இல்லாத மனிதர் எவருக்கும்
இதனையொத்த தருணங்கள் எப்பொழுதுமே வாய்க்காது!
ஆண்டுகள் ஐம்பதிலும் அயராது நீவிர் உழைத்ததனால்
இருநூறுக்கு முப்பதே இன்னும் வேண்டுமென்ற நிலையில்
நூற்றியெழுபதை நுணுக்கமுடன் கடந்து விட்டீர்!
ஆண்டுச் சராசரியென்று அன்புடனே கணக்கிட்டால்
மூன்று படங்களுக்கு மேல் முழுதான ஓராண்டில்
முடித்துக் கொடுத்தபடி முன்னேறி வந்துள்ளீர்!
பின்னாளில் இதுகூடப் பெருமைமிகு டார்கிட்டாய்
நின்று இலங்கிடலாம் நீங்காஇடம் பிடித்திடலாம்!
அபூர்வ ராகங்களில் அடியெடுத்து வைத்த உங்கள்
கால்களிலே சக்கரங்கள் களிப்புடனே இணைந்தனவோ?
1977 ல் மட்டும் 15 படங்களையே பக்குவமாய்க் கடந்திட்டீர்!
மூன்று முடிச்சு முள்ளும் மலரும் புவனா ஒரு கேள்விக்குறி
பைரவி பில்லா தில்லுமுல்லு அவள் அப்படித்தான்
தளபதி முத்து படையப்பா சந்திரமுகி நல்லவனுக்கு நல்லவன்
எந்திரன் ஜெயிலர் என்றபடி படங்கள் நீண்டு
அவார்டுகள் பலவற்றை அள்ளிக்கொண்டே வந்தன!
இடையிடையே இந்தி தெலுங்கு மலையாளமென்று
ஏராளமாய் வந்து நின்று வெற்றிக்கொடி பிடித்தன!
பிறவிகள் பல பெருவாரியாய் வரிசை கட்டினாலும்
அத்தனையிலும் அன்புள்ள ரஜினி காந்தாகவே
பிறந்திட வேண்டுமென்று பிரிதொரு நிகழ்வில் தாங்கள்
பேசிய பேச்சினையே பெரிதும் கேட்டு இன்புற்றோம்!
இந்த இனிய எழுபத்தைந்தாம் பிறந்த நாளில்
அப்படியே நடக்கவென்றே ஆண்டவனைப் பிரார்த்திக்கிறோம்!
நூற்றியிருபது ஆண்டுகள் நோய்நொடி ஏதுமின்றியே
இன்னும் படங்கள் பல எங்களுக்குத் தர வேண்டும்!
விருதுகளின் நாயகனாய் விளங்கிப் புகழ் பெற வேண்டும்!
-ரெ.ஆத்மநாதன்,
பிறந்த நாள் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்றும் என்றும் வெற்றிகளை அறுவடை செய்தபடி உற்சாகமாக வாழ மனதார வாழ்த்துவோம்....