பொதுவாகவே, திரைப்படங்களில் கதாநாயகர்களை விட, படத்தின் கதைக்கு வலுவூட்டும் வகையில் துணை கதாபாத்திரங்கள் சில நேரங்களில் அதிகம் பேசப்படும். அந்த வகையில் சிறந்த குணச்சித்திர நடிகராக சினிமாவில் வலம் வந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் நடிகர் வினுச்சக்கரவர்த்தி.
ரஜினி முதல் விஜய் வரை அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் வினுசக்கரவர்த்தி நடித்திருக்கிறார். அவரின் சிறப்பு அம்சமே அவருடைய தனித்துவமான கட்டைக் குரல்தான். இந்தக் குரலால் கம்பீரம், நகைச்சுவை, வில்லத்தனம், பாசம் என கலவையான நடிப்பில் மிளிர்ந்தவர் இவர். இவர் வில்லனாக மிரட்டிய படங்கள் ஏராளம். வில்லனாக மட்டுமல்லாமல், குணச்சித்திர வேடங்களிலும் சிறப்பாக நடிக்க முடியும் என்பதையும் நிரூபித்தவர்.
உசிலம்பட்டியில் பிறந்த இவர், சென்னையில் கல்வி பயின்று காவல்துறையில் பணியில் சேர்ந்தார். பிறகு தெற்கு ரயில்வேயில் 4 ஆண்டுகள் பணிபுரிந்த இவருக்கு கதை எழுதுவதிலும் நடிப்பின் மீதும் ஆர்வம் இருந்ததால், பல நாடகங்களை எழுதி அதில் நடித்தும் உள்ளார்.
முழு நேரக் கலைத்துறையில் ஈடுபட தனது வேலையை விட்டு விட்டு கன்னட இயக்குனர் புட்டன்னா கனகலிடம் கதை ஆசிரியராக பயிற்சி பெற்றுள்ளார். பிறகு அவரோடு சேர்ந்து சில கன்னட சினிமாவில் கதாசிரியராக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கி, சில திரைப்படங்களில் பணியாற்றினார்.
நடிகர் சிவகுமாரின் 100வது படமான ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’யில் நடிகராக வெற்றியுடன் தனது தமிழ்த் திரைப்பட பயணத்தைத் துவங்கினார். அதையடுத்து சிவகுமார் நடித்த ‘வண்டிச்சக்கரம்’ கதை இவருடையதே. அதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பெருமைக்குரியவர் வினுசக்கரவர்த்தி.
இவரது நடிப்பில் வெளியான குருசிஷ்யன், அண்ணாமலை, அருணாச்சலம், நாட்டாமை, மாப்பிள்ளை கவுண்டர், அமர்க்களம், நினைத்தேன் வந்தாய், சுந்தரா டிராவல்ஸ் போன்றவை பெரிய வெற்றிப் படங்களாக அமைந்து இவருக்கு பெயர் பெற்றுத் தந்தன.
குறிப்பாக, நகைச்சுவை படமான, ‘சுந்தரா டிராவல்ஸ்’ திரைப்படத்தில் இவருடைய நடிப்புத்திறமை பலருடைய மனதையும் கவர்ந்தது. இப்படி பன்முகத் திறமையாளராக திரையுலகில் வலம் வந்த இவரது இறுதிப் படமாகியது 2007ம் ஆண்டு ராகவா லாரன்ஸ் நடித்த முனி திரைப்படம்.
கவர்ச்சிக் கன்னியாக மக்கள் மனங்களில் நிரந்தரமாகக் குடிகொண்டுள்ள சில்க் ஸ்மிதாவை 1980ம் ஆண்டு ‘வண்டிச்சக்கரம்’ படத்தின் மூலம் சிலுக்கு என்ற பாத்திரத்தில் திரை உலகுக்கு அறிமுகப்படுத்தி பாராட்டு பெற்றவர் இவர்தான்.
சில்க் ஸ்மிதாவின் நம்பிக்கைக்குரியவர்களுள் ஒருவர் என்ற வகையில், சில்க்கின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் படமான, ‘தி டர்ட்டி பிக்சர்சி’ல் சில்க் ஸ்மிதாவை சித்தரித்த விதத்தை இவர் கடுமையாக விமர்சித்தது அப்போது முதல் இப்போது வரை பேசப்படுகிறது.
நடிகர் ரஜினிகாந்த்துடன் பல படங்களில் நடித்திருந்தாலும் அவரை வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்ற இவரது ஆசை கடைசி வரை நிறைவேறாமல் போய்விட்டதாக அவருடைய மனைவி பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
1945 டிசம்பரில் பிறந்து, 2017 ஏப்ரலில் மறைந்த வினுசக்கரவர்த்தியின் கம்பீர உருவமும், தனித்துவக் குரலும், நவரச நடிப்பும் என்றும் ரசிகர்களின் மனங்களில் நீங்காமல் நிறைந்திருக்கும்.