உலகின் அதிசயமாக விளங்கும் பொந்தன் புளி மரம்!

Ponthan puli Tree
Ponthan puli Tree
Published on

‘உலகின் அதிசயம்’ என தாவரவியல் அறிஞர் டேவிட் லிவிங்ஸ்டனால் அழைக்கப்பட்டது பொந்தன் புளி மரம். உலகில் உள்ள பழைமையான மரங்கள் பொந்தன் புளி இனத்தை சேர்ந்ததுதான். ஜாம்பியா நாட்டில் உருவான இந்த மரம் 2500 ஆண்டுகள் வயதுடையது என கணிக்கப்பட்டுள்ளது. ஐவிரல் அமைப்பை உடைய இலைகள், இயற்கையாக உருவாகும் பொந்துகள் கொண்ட இந்த பொந்தன் புளி மரம் 25 மீட்டர் வரை உயரமாக வளரக்கூடியது. இதன் அடி மரத்தின் சுற்றளவு சுமார் 14 மீட்டர் வரை இருக்கும். ஓராண்டில் ஆறு அல்லது ஏழு மாதங்கள் வரை இதன் இலைகள் உதிர்ந்து காணப்படும். நீண்ட காம்புகளில் பழுப்பு நிறத்தில் இதன் காய்கள் உருவாகும்.

மைக்கேல் அட்டென்ஷன் என்ற பிரெஞ்சு தாவரவியல் அறிஞர் 1750ம் ஆண்டில் செசல்  தீவில் முதன் முதலாக இந்த மரத்தை அறிமுகப்படுத்தினார். அவருடைய பெயரின் ஒரு பகுதியே இந்த மரத்தின் தாவரவியல் பெயராக வைக்கப்பட்டுள்ளது. ஒன்பது இனங்கள் கொண்ட இந்த மரத்தில் ஆறு இனங்கள் மடகாஸ்கர் தீவிலும், இரண்டு இனங்கள் ஆப்பிரிக்கா மற்றும் அரேபிய தீப கற்பத்திலும், ஓர் இனம் ஆஸ்திரேலியாவிலும் உள்ளன. தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் பொந்தன் புளி 17 மரங்கள் இருப்பதால் ராமநாதபுரம் மாவட்டம் தமிழ்நாட்டின் மடகாஸ்கர் என சிறப்புப் பெயரோடு  அழைக்கப்படுகிறது.

மரத்தின் பெயர்கள்: பொந்தன் புளி, யானைப்புளி, பாப்பிரப்புளி, பெருமரம், பெருக்க மரம், கட்டப்புளி, பேரில்லா பெருமரம், கற்பக விருட்சம், நீர்கொண்டான் மரம், யானைக்கவுனி, தலைகீழ்மரம் என பல பெயர்களில் பொந்தன் புளி மரம் அழைக்கப்பட்டாலும், பெரும்பாலான இடங்களில், ‘பேரில்லா மரம்' என்றே அழைக்கப்படுகிறது. இதன் இலைகள் புளிப்பாகவும் ஆயிரம் ஆண்டுகள் கடந்த மரங்களில் பொந்து விழுந்து இருப்பதாலும் பொந்தன் புளி என இது அழைக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
குப்பையில் வீசி எறியும் பயன்படுத்திய டீ தூளில் இத்தனை நன்மைகளா?
Ponthan puli Tree

வயதான இந்த மரத்தின் தண்டுப் பகுதி யானையின் தோலை போன்று பெரிதாக இருப்பதால் இம்மரம் யானை புளி என்றும் அழைக்கப்படுகிறது. ‘பாப்பரர்' எனும் சொல் ஆப்பிரிக்கர்களைக் குறிப்பதால், ஆப்பிரிக்காவிலிருந்து வந்தது என்பதைக் குறிக்கும் விதமாக ‘பாப்பரப்புளி' எனவும், அடிமரம் பெருத்து இருப்பதால் பெருக்கமரம் எனவும், நீரை அதிகம் சேமித்து வைப்பதால் ‘நீர் கொண்டான் மரம்' எனவும் அழைக்கப்படுகிறது.

இந்த மரங்கள் விழுந்தாலும் அதன் தண்டு, வேர்களிலிருந்து மீண்டும் முளைக்கும் திறன் பெற்றதால் இதற்கு ‘மரணமில்லா மரம்' என்று பெயர். ஆனால், மக்கள் இம்மரம் விழுந்தவுடனே இறந்து விட்டதாக நினைத்து அறியாமையால் வெட்டி விடுகின்றனர் அல்லது எரித்து விடுகின்றனர். இந்த மரம் ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட மரம் என்றாலும் உலகம் முழுவதும் பரவலாகக் காணப்படுகிறது.

மரத்தின் பயன்கள்: இம்மரத்தின் கனிகளில் வைட்டமின் இ அதிகம் உள்ளது. மேலும், இம்மரத்தின் பழங்களை உண்டால் குழந்தைப் பேறு கிட்டும் என்ற நம்பிக்கை அதிகமாக உள்ளது. இதைத் தவிர இது, ‘சாமி மரம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மரத்தின் தண்டிலிருந்து கயிறு, கூடை பொருட்கள் தயாரிக்கப்படுவதோடு, இதன் இலைகள் காய்ச்சலுக்கு மருந்தாகவும் கீரையாகவும் பயன்படுத்தப்படுகிறது. இம்மர இலையை சூப் வைத்து குடித்தால் ஆண்மை கூடும் என கணித்துள்ளனர். பழங்களை சர்பத் செய்தும் அருந்துகின்றனர்.

இதையும் படியுங்கள்:
இக்கட்டான சூழ்நிலைகளில் கை கொடுக்கும் உள்ளுணர்வு!
Ponthan puli Tree

இம்மரங்கள் கிராமக் கோயில்களாக மக்களின் வழிபாட்டில் உள்ளன. தேவிபட்டினம் தவிர்த்து, மற்ற இடங்களில் இம்மரம் முனீஸ்வரர் கோயிலாக வழிபடப்படுகிறது. இம்மரத்தில் தெய்வம் குடியிருப்பதாகவும், இதை வெட்டுபவர்கள் இறந்துபோவார்கள் அல்லது நோயில் விழுவார்கள் எனவும் மக்கள் நம்புகிறார்கள். இந்த நம்பிக்கைகளும், மக்கள் வழிபாடும் இருப்பதால் இம்மரங்கள் அழிவில் இருந்து காப்பாற்றப்பட்டு வருகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com