
உலகில் ஆயிரக்கணக்கில் நடிகைகள் உள்ளனர்; அவர்களின் நடிப்புத்திறன் பற்றி வியந்து பாராட்டுவோரும் ஏராளம்.
ஆனால் இந்த நடிகைகளில் ஒரே ஒரு நடிகை மட்டும் அவரது நினைவாற்றல் திறனுக்காக இன்னும் அதிகமாகக் கொண்டாடப்படுகிறார்.
அவர் தான் மரிலு ஹென்னர்! உலகில் அதிக நினைவாற்றல் திறன் கொண்ட நூறு பேரில் ஹென்னரும் ஒருவர் என்றால் ஆச்சரியம் தானே!
1980, ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி என்று சொல்லுங்கள். உடனே ஹென்னர் அது ஒரு புதன்கிழமை. என்று ஆரம்பித்து அன்று தான் எந்த இடத்தில் இருந்து யாரைப் பார்த்து என்னென்ன செயல்களைச் செய்தேன் என்று விவரிப்பார்.
இப்படி தன் வாழ்வின் ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு கணத்தையும் அதிசயிக்கத் தக்க விதத்தில் ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருக்கும் இவரை ஹெச் எஸ் ஏ எம் ஸ்பெஷலிஸ்ட் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
ஹெச் எஸ் ஏ எம் என்றால் Highly Superior Autobiographical Memory – HSAM -மிக உயரிய சுயசரிதை நினைவாற்றல் என்று பொருள்.
இவருக்கு ஐந்து வயதாகும் போதே இவருடன் பழகியவர்கள் இவரது இந்த அதிசய நினைவாற்றலைக் கண்டு வியந்து பிரமித்தனர்.
இவரை விஞ்ஞானிகள் ‘மூளையின் நினைவாற்றல் திறன்’ ஆய்வுக்காக அழைத்தனர். மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்ட இவரிடம் ஐநூறு கேள்விகள் கேட்கப்பட்டன. அத்தனைக்கும் பளீர் பளீரென்று பதில் அளித்தார் இவர். எம் ஆர் ஐ ஸ்கேன் உள்ளிட்ட அனைத்தும் எடுக்கப்பட்டன. ஆய்வாளர்களுக்கு வியப்பு தான் மிஞ்சியது!
இவர் தனது அனுபவங்களை டோடல் மெமரி மேக் ஓவர் (2012ல் வெளியானது) என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.
அமெரிக்காவில் சிகாகோவில் 1952ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி ஹென்னர் பிறந்தார்.
1977ல் ஒரு காமடி படத்தில் நடிக்க ஆரம்பித்த இவர் வெகு விரைவில் பல படங்களில் நடித்துப் புகழ் பெற்றார். இவரது ஐம்பதுக்கும் மேற்பட்ட புகழ் பெற்ற திரைப்படங்கள் மற்றும் டிவி ஷோக்களின் பட்டியலைப் பார்த்தாலேயே இவர் எப்படிப்பட்ட வித்தியாசமானவர் என்பது புரியும்.
சிறந்த நடனக் கலைஞர். ஆரோக்கிய நலத்திற்காக இவர் விசேஷ தயாரிப்புகளைத் தயாரிப்பவர். ஸ்டேஜில் ஏறினாலே போதும், அனைவரையும் சிரிக்க வைப்பவர். பல பத்திரிகைகளிலும் கட்டுரைகளை எழுதுபவர்; பத்திரிகைகளின் அட்டைப்படத்தை அலங்கரிப்பவர்! எல்லாவற்றிற்கும் மேலாக இவர் ஒரு சிறந்த உணர்வூக்கம் தரும் பேச்சாளர் (மோடிவேஷனல் ஸ்பீக்கர்)! இப்படி பல சிறப்புகளைக் கொண்டவர் இவர்!
இவரது புகழ் பெற்ற பொன்மொழிகளுள் இரண்டை இங்கு காணலாம்:
உங்களுக்குத் தெரியுமா, பல பிரபலங்கள் நான் டாக்ஸியில் அமர்ந்திருக்கும்போதே நான் யார் என்பதைத் தெரிந்து கொள்கிறார்களே, அப்போது எனக்கு ஏற்படும் மகிழ்ச்சி இருக்கிறதே, அது தனி தான்!
எந்தவிதமான சூழ்நிலைகள் உங்களுக்கு உகந்தது என்பதை நீங்கள் நிர்ணயித்துக் கொள்வது மிக மிக முக்கியம்; பிறகு உங்களின் தேவைக்குத் தக அந்த சூழ்நிலையை நீங்கள் கட்டமைக்க வேண்டும்!
ஹென்னர், - உலகில் நூறு பேரில் ஒருத்தியம்மா, நீ!