
சிவாஜி - இந்தப் பெயரைக் கேட்டாலே நம் நினைவுக்கு வருவது அவரின் ஒவ்வொரு அசைவிலும் மேலோங்கி நிற்கும் நடிப்புதான். அவருடன் கதாநாயகியாக நடிக்கும் நடிகைகள் அவரை எந்த அளவுக்கு நேசித்திருப்பார்கள்... இதோ ஒரு சுவாரசிய சம்பவம் இப்பதிவில்.
சிவாஜி கணேசன் சினிமா ஷூட்டிங்கின் போது கட்டிய தாலியை அவர் மீதிருந்த காதலால் பிரபல நடிகை ஒருவர் கழட்ட மறுத்த சம்பவம் பற்றி பார்க்கலாம்.
தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம் என்றால் அது சிவாஜி கணேசன் தான். இவரின் நடிப்புக்கு ஈடு இணை எவரும் இல்லை என சொல்லும் அளவுக்கு நவரசத்திலும் பின்னிபெடலெடுத்தவர் சிவாஜி. எந்த ஒரு கேரக்டர் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி அதை டெலிவர் செய்வது தான் சிவாஜியின் ஸ்பெஷல். இதன்காரணமாகவே அவரை ரசிகர்களுக்கு மட்டுமின்றி நடிகைகளுக்கும் மிகவும் பிடிக்கும்.
சிவாஜி கணேசன் தன்னுடைய கேரியரில் ஏராளமான நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தாலும், அவர் அதிக படங்களில் ஜோடியாக நடித்த ஹீரோயின் என்றால் அது பத்மினிதான். நாட்டியத்தில் புகழ்பெற்று விளங்கிய பத்மினி, சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக தில்லானா மோகனாம்பாள் உள்பட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதன் காரணமாகவே இந்த ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பும் இருந்தது.
இன்றைய காலகட்டத்தில் ஒரு நடிகரும், நடிகையும் தொடர்ச்சியாக இரண்டு படங்களில் நடித்தாலே அவர்களுக்கு இடையே காதல் இருப்பதாக கிசுகிசுக்கள் உலா வருவதுண்டு. அப்படி இருக்கையில் சிவாஜிக்கு ஜோடியாக 50 படங்களில் நடித்துள்ளார் பத்மினி. அவர்களைப் பற்றி காதல் கிசுகிசு வராமலா இருக்கும். 'பத்மினி தான் சிவாஜியை ஒருகட்டத்தில் காதலிக்க தொடங்கினாராம். சிவாஜிக்கு பத்மினி மீது எந்த ஒரு காதலும் இல்லையாம்.' - இது ஒரு சாம்பிள் கிசுகிசு.
சிவாஜிக்கு ஜோடியாக பத்மினி ஒரு படத்தில் நடித்தபோது, இருவருக்கும் இடையேயான திருமண காட்சிகள் படமாக்கப்பட்டதாம். அப்போது சிவாஜி பத்மினி கழுத்தில் தாலி கட்டி இருக்கிறார். அந்த காட்சி படமாக்கப்பட்ட பின்னர் பத்மினி அந்த தாலியை கழட்டவில்லையாம். அவர் அதை நிஜ திருமணமாகவே பாவித்து அந்த தாலியை யாருக்கும் தெரியாமல் தன் கழுத்திலேயே சில மாதங்கள் கட்டி இருந்தாராம். ஒருகட்டத்தில் இது பத்மினியின் சகோதரிக்கு தெரியவர அவர் அம்மாவிடம் கூறி இருக்கிறார்.
இந்த விஷயம் அதிர்ந்து போன பத்மினியின் அம்மா, சினிமா வேறு நிஜ வாழ்க்கை வேறு என சொல்லி அட்வைஸ் பண்ணி அந்த தாலியை கழட்ட வைத்திருக்கிறார். அதன் பின்னர் 1961-ம் ஆண்டு பத்மினிக்கு திருமணம் ஆனது. அவர் தன் கணவருடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். அதுமட்டுமின்றி அங்கு நடனப்பள்ளி ஒன்றை ஆரம்பித்து நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.