விமர்சனம்: தண்டேல் - "நிறைய காதலும், துளியூண்டு தேச பக்தியும்"
ரேட்டிங்(3 / 5)
"என்கிட்ட பேசாத, என் வாழ்க்கையில் நீ இல்ல". என்று காதலி சொன்ன பிறகு, நேரிலும், போனிலும் காதலியை சமாதானம் செய்ய நம்ம பசங்க படும் பாடு சொல்லி மாளாது. சம காலத்தில் ஆண்களில் பலர் சந்திக்கும் இந்த காதல் அவஸ்தையை சரியாக பதிவு செய்துள்ள படமாக வந்துள்ளது 'தண்டேல்'. காதலர் தினத்திற்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் காதல் கதையை களமாக கொண்ட படமாக வந்துள்ளது தண்டேல். தண்டேல் என்றால் மீனவர்கள் குழு தலைவன் என்று பொருள். நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்துள்ள இந்த படத்தை சந்து மான்டே டி இயக்கி உள்ளார்.
ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் பகுதியில் உள்ள மீனவர்கள், ஒப்பந்த அடிப்படையில் குஜராத் வரை சென்று மீன் பிடி தொழில் செய்து வருகிறார்கள். இந்த மீனவ குழுவின் தண்டேல்லாக (தலைவன்) இருப்பவன் இளைஞன் ராஜு (நாகசைதன்யா) ராஜுவும் அதே மீனவ பகுதியில் உள்ள சத்யாவும் காதலர்கள். மீன் பிடிக்க கடலுக்கு செல்லும் போது மீனவ குழுவில் இருவர் இறந்து விடுகிறார்கள். இதனால் பயம் கொள்ளும் சத்யா தன் காதலன் ராஜுவும் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல கூடாது என தடை போடுகிறார். மீறி போனால் தன்னையும், தன் காதலையும் மறந்து விடும் படி சொல்கிறார். இருந்தாலும் காதலியின் பேச்சை கேட்காமல் செல்கிறான் ராஜு. இதனால் மனமுடைந்த சத்யா வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறார். மீன் பிடிக்க செல்லும் ராஜுவும் மற்ற மீனவர்களும் எதிர்பாராத விதமாக எல்லை தாண்டி விடுவதால் பாகிஸ்தான் ராணுவம் இவர்களை கைது செய்து காராச்சி சிறையில் அடைக்கிறது. சத்யா பல போராட்டங்களை நடத்தி இந்திய வெளி உறவு துறை அமைச்சரை சந்தித்து ராஜுவை பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்க முயற்சி செய்யும் படி வேண்டுகோள் வைக்கிறார். அமைச்சரின் அழுத்தம் காரணமாக பாகிஸ்தான் அரசு இந்திய மீனவர்களை விடுவிக்க ஒப்பு கொள்கிறது. இந்த சூழ்நிலையில் இந்திய அரசு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 பிரிவை ரத்து செய்கிறது. இதனால் கோபம் கொள்ளும் பாகிஸ்தான் அரசு இந்திய மீனவர்களின் விடுதலையை தள்ளி வைக்கிறது. தண்டேல் ராஜுவும், மீனவர்களும் எப்படி விடுதலையானார்கள் என்று சொல்கிறது இந்த தண்டேல்.
இந்த படத்தை காண பரிந்துரை செய்வது என்றால் காரணம் சாய் பல்லவி மட்டுமே. ஒட்டு மொத்த படத்தையும் தன் தோள்களில் அல்ல, தனது கண்களின் நடிப்பால் சுமந்து இருக்கிறார். ரோஜா உட்பட பல்வேறு படங்களில் நாம் பார்த்து பழகிய கணவனை மீட்க போராடும் மனைவியின் கதை, பாகிஸ்தான் மக்களை எதிரியாக சித்தரிப்பது என ரிபீட் மோடில் இருக்கும் படத்தை தனது சிறப்பான நடிப்பால் பார்க்க வைத்திருக்கிறார் சாய் பல்லவி. காதலனிடம் ரொமான்ஸ் செய்யும் போதும், காதலனை மீட்க போராடுவது, தன் காதலனிடம் கண்டிஷன் போடுவது என நடிப்பில் வியாபித்து நிற்கிறார். நாக சைதன்யா மற்ற படங்களை ஒப்பிடும்போது இந்த படத்தில் ஓரளவு நன்றாக நடித்திருக்கிறார். ஆக்ஷனில் காட்டும் வேகத்தை சிறிது நடிப்பிலும் காட்டி இருக்கலாம்.
கடலையும், காதலையும் தனது ஒளிப்பதிவில் சிறப்பாக காட்டி இருக்கிறார் ஷ்யாம். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் நமசிவாய பாடல் ஆட்டம் போட வைக்கிறது. காதல், தேச பக்தி என இரண்டு விஷயங்கள் இருந்தாலும் மனதில் நிற்பது காதல் மட்டும் தான். கடலுக்குள் தாவி குதிப்பது, கலவரத்தில் சிறு காயம் இல்லாமல் தப்பிப்பது, என தெலுங்கு படத்தின் அட்ராசிட்டி படம் முழுவதும் இருக்கிறது. நடிப்பு ராட்சஷி சாய் பல்லவியின் நடிப்பையும், ஆழமான காதலையும் பார்க்க விரும்பினால் இந்த தண்டேல் உங்களுக்கு பிடிக்கலாம்.