
சினிமாவை தாண்டி பிரபலங்கள் பல்வேறு தொண்டுகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றனர். அந்த வரிசையில் சினிமாவில் வில்லன் நடிகராக வலம் வந்தவர் நிஜத்தில் ஹீரோவாக கல்வி சேவையில் மிக உயர்ந்த மனிதனாக, உயர்ந்து நிற்கிறார்.. ஆமாங்க.. அது வேறு யாருமில்ல.. நம்ம நடிகர் அஜய் ரத்னம் தான்.
வெள்ளித்திரை, சின்னத்திரை நடிகராக... சினிமா வட்டாரத்தின் உயரமான (6 அடி 4 அங்குலம்) மனிதராக... நமக்கு பரீட்சயமான நடிகர் அஜய் ரத்னம். இவர் துணை நடிகராகவும், வில்லனாகவும் கிட்டத்தட்ட 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னட படங்களைத் தவிர, சீரியல்களில் பணியாற்றியுள்ளார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டார் நெடுந்தொடரிலும் நடித்து வருகிறார்.
வெள்ளித்திரை, சின்னத்திரை படப்பிடிப்புகளில் பிசியாக நடித்து வரும் அவர், தனக்கென நேரம் ஒதுக்கி, அந்த நேரத்தை அரசுப்பள்ளி மாணவ-மாணவிகளுடன் ஆக்கப்பூர்வமாக செலவழிக்கிறார். இவரது முயற்சியினால், சில அரசுப்பள்ளி மாணவர்கள் 100 சதவிகித தேர்ச்சியும் பெற்றிருக்கிறார்கள். இத்தகைய மாற்றத்தை நோக்கி நெடுங்காலமாக உழைத்து வருகிறார் அஜய் ரத்னம்.
தற்போது வரை முக்கிய நடிகர்கள், பிரபலமான இயக்குநர்களுடன் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து வரும் இவருக்கு, கல்வி சேவை மீது வந்த ஆர்வம் காரணமாக இந்த பணியை செய்து வருகிறார்.
கல்வி சேவையில் இவர் செய்த மாற்றங்கள் மற்றும் சாதனைகள்..
* பள்ளிக்குழந்தைகள் பெரும் சுமையாக கருதும் கல்வியை எளிமையான புரிதலோடு அவர்களுக்கு விருப்பமான வழிகளில் கொண்டு சேர்க்க ஆசைப்பட்டு கல்வி சேவை பணியை 2004-ம் ஆண்டு முதல் செய்து வருகிறார்.
* பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, கல்வி என்பது விருப்பப்பாடமாக இருக்க வேண்டும். ஆனால் கிராமப்புறங்களில் பெரும்பாலான குழந்தைகளுக்கு, விருப்பமில்லாத கட்டாய கல்வியாகவே தோன்றுகிறது. இதனால் கல்வி கற்க சிரமப்படும் சில குழந்தைகள் பள்ளி செல்லவே ஆர்வம் காட்டுவதில்லை. இந்த கட்டாய சூழலை, அவர்களுக்கான விருப்பமான சூழலாக மாற்றுவது தொடர்பாக சேவையை செய்கிறார்.
* எழுத, படிக்க மனப்பாடம் செய்ய சிரமப்படும் குழந்தைகளுக்கு, கல்வியை எளிமையாக முறையில் கற்றுக்கொடுக்கிறார். மனப்பாடம் செய்ய வேண்டியவற்றை, பிக்சரைசேஷன் வடிவிலும், மைண்ட் மேப் வடிவிலும் அவர்களது மனதில் நிலைநிறுத்தும் வகையில் புரிய வைக்கிறார்.
* தமிழ்நாடு முழுவதும் இருக்கும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் கல்வி கற்பிக்கும் முறைகளை தனது மோட்டிவேஷன் ஸ்பீச் மூலம் எளிமைப்படுத்தி வருகிறார்.
* பள்ளிக்கூடம் என்றதுமே சில குழந்தைகளுக்கு, ஒரு வித பயம், பதற்றம், மன அழுத்தம் வந்துவிடுகிறது. இந்த பயத்தை போக்கி அவர்களை சந்தோஷமாக்குவதுதான் இவருடைய முதல் பணி.
* பெரும்பாலான கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் இவர் மேடையில் அமர்ந்து பேசாமல் தரையில் மாணவ-மாணவிகளோடு ஒருவனாகவே அமர்ந்து எளிமையான முறையில் அவர்களின் குறைகளை களைய துணைபுரிகிறார்.
* குழந்தைகளுக்கு கல்வியை எளிமையாக கற்றுக்கொடுப்பதற்காகவே, ஸ்டோன் டு டைமண்ட் என்கிற அகாடமியை (Stone To Diamond Academy) தொடங்கி, அதன் மூலம் தமிழக குழந்தைகளுக்கு கல்வியை எளிமைப்படுத்தி வருகிறார்.
* பாடக்கல்வியை தாண்டி, குழந்தைகளின் வாழ்க்கைக்கு தேவையான வாழ்க்கை கல்வியையும் கற்றுக்கொடுக்கிறார்.
வகுப்பறையில் எப்படி நடந்து கொள்வது, ஆசிரியர்-பெரியவர்களை மதிக்கும் விதம், பெற்றோர்களிடம் நடந்துகொள்ளும் விதம், உறவினர்களிடம் அன்பு செலுத்தும்விதம், தோழர்களை தேர்ந்தெடுக்கும் விதம், பொது இடங்களில் நாகரிகமாக நடந்துகொள்வது, உயர் கல்விக்கு தயாராவது, தன்னம்பிக்கையை வளர்த்து கொள்வது, மேடை பதற்றத்தை கையாளும் விதம், பெர்சனாலட்டி டெவலெப்மெண்ட்... என குழந்தைகளை நல்வழிப்படுத்தும் எல்லா விஷயங்களையும் கற்றுக்கொடுக்கிறார்.
* நடிகர் அஜய் ரத்னம் பல கல்லூரிகளில் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் கருத்தரங்குகளை நடத்தி, அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதிலும், அவர்களின் வாழ்க்கையில் நல்ல வழிகாட்டியாக இருந்து வருகிறார். இளைய தலைமுறையினருக்கு கல்வி மட்டுமல்ல... தன்னம்பிக்கையும், போட்டி நிறைந்த உலகை கையாளும் திறனும் அவசியம் என்பதை அவர்களுக்கு மோட்டிவேஷன் ஸ்பீச் மூலம் புரிய வைக்கிறார். ஒருவருக்குள் இருக்கும் ஸ்பெஷல் திறமையை அவர்களுக்கு அடையாளப்படுத்தி, அவர்கள் சமூகத்தின் ஸ்பெஷலான மனிதர்களாக மாறிவிடும் அத்தகைய பணியைதான், ஸ்டோன் டு டைமண்ட் அகாடமி மூலம் இந்தியா முழுக்க செய்து வருகிறார்.
* அதுமட்டுமின்றி அஜய் ரத்னம் சென்னையில் 'வி ஸ்கொயர்' என்ற பேட்மிண்டன் அகாடமியை நடத்தி வருகிறார். இதில் பயிற்சி அளித்து, பல மாணவர்களை பேட்மிண்டன் வீரர்களாக உருவாக்கியுள்ளார்.
நடிகர்களில் உயர்ந்த மனிதனாக நாம் அறிந்த அஜய் ரத்னம் தன்னுடைய கல்வி பணியால் நிஜமாகவே மிக உயர்ந்த மனிதனாக, உயர்ந்து நிற்கிறார்.