
நடிகர் சூர்யா ‘அகரம் பவுண்டேஷன்’ என்ற அமைப்பு மூலம் படிப்பதற்கு பணம் கட்ட முடியாத ஏழை மாணவ, மாணவிகளை படிக்க வைத்து வருகிறார்.
நடிகர் சிவக்குமாரின் மகனான நடிகர் சூர்யா தமிழ் திரையுலங்கில் முன்னணி கதாநாயகனாக வலம் வருகிறார். இவரது தம்பியான நடிகர் கார்த்தியும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார்.
தரமான கல்வியை சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக நடிகர் சூர்யாவால் 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அமைப்பு தான் ‘அகரம் பவுண்டேஷன்’ (Agaram Foundation).
முதல் தலைமுறை மாணவர்கள் மற்றும் கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் தினக்கூலி வேலை தேடும் மாணவர்களுக்காக 20 வருடங்களுக்கு முன்பு அகரம் பவுண்டேஷன் சிறிய அறையில் தொடங்கப்பட்டது. இந்த அறக்கட்டளை மூலம் படிக்க ஆசைப்படும், ஆனால் கல்வி கட்டணம் முடியாத ஆயிரக்கணக்கான ஏழை மாணவ, மாணவிகளை படிக்க வைப்பதுடம், கல்வி தொடர்பான பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார்.
இந்த அறக்கட்டளை, சிறிய அளவில் தொடங்கப்பட்டு செயல்பட்டு வந்த நிலையில், தற்போது சென்னை தி நகரில் அகரம் அறக்கட்டளையின் புதிய அலுவலகத்தை சூர்யா திறந்து வைத்துள்ளார்.
இந்த கட்டம் திறப்பு விழாவில் பேசிய நடிகர் சூர்யா, சொந்த வீடு கட்டியபோது இருந்த சந்தோஷத்தை விட, இந்த விழா தனக்கு அதிக சந்தோஷத்தை தருவதாக கூறினார்.
அகரம் பவுண்டேஷனுக்காக சென்னை தியாகராய நகரில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலக திறப்பு விழாவில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி, நடிகை ஜோதிகா மற்றும் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர். அதுமட்டுமின்றி நடிகர் சிவக்குமாரின் மனைவியும், நடிகர் சூர்யா, கார்த்தியின் தாயாருமான லட்சுமி, இந்த கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இந்த அகரம் பவுண்டேஷனின் புதிய கட்டிடம் படிப்புக்காக கொடுக்கிற நன்கொடையில் உருவாகவில்லை என்றும், ரசிகர்களாகிய நீங்கள் எனக்கு கொடுத்த வருமானத்தின் மூலமாக உருவாகி உள்ளது என்றும் சூர்யா கூறினார்.
தற்போது இந்த அறக்கட்டளையில் 700 மாணவ, மாணவியரை படிக்க வைப்பதாக நடிகர் சூர்யா கூறினார். மேலும் இந்த பள்ளித்திட்டம் மூலம் 6 ஆயிரம் மலைவாழ் மக்களின் கல்விக்கு தொடர்ச்சியான பணிகளை மேற்கொண்டு வருகிறார் சூர்யா. அதுமட்டுமின்றி விதை திட்டத்தின் மூலம் 5,800 மாணவ, மாணவிகளின் கல்லூரி கல்விக்கு உறுதுணையாக பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.
அகரம் அறக்கட்டளை, படிக்க ஆர்வம் உள்ள, ஆனால் படிக்க வசதி இல்லாத மாணவ, மாணவிகளுக்கு அவர்களின் தடைகளைத் தாண்ட வழிகாட்டியாக இருப்பது மட்டுமில்லாமல் அவர்கள் வாழ்க்கையில் வெற்றிபெற உதவுகிறது.
20 வருடமாக அகரம் அறக்கட்டளை வெற்றிகரமாக செயல்பட்டு ஏழை மாணவர்களின் கனவை நிறைவேற்ற காரணமாக இருந்தது தன்னார்வலர்கள்தான். தன்னார்வலர்கள் தலைமையிலான இந்த திட்டம், தமிழ்நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் உள்ள பள்ளிக் குழந்தைகளை வளர்ப்பதில் மட்டுமின்றி அவர்களின் திறமைகளை வெளியே கொண்டு வந்து அவர்களின் இலக்குகளை அடைவதற்கான வாய்ப்புகளையும், பயிற்சிகளையும் வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறது.
இப்போது திறக்கப்பட்டுள்ள தனி அலுவலக கட்டிடம் கல்வி சார்ந்த பல்வேறு பணிகளை முன்னெடுக்க உதவியாக இருக்கும் என்றும் இங்கு புத்தக வெளியீடு, உரையாடல்கள், இலவச ஆங்கில வகுப்புகள் இங்கு நடைபெறும் என்றும் நடிகர் சூர்யா கூறினார்.