
ஒவ்வொரு ஆண்டும் பிரதமரால் அமைக்கப்பட்ட பத்ம விருதுகள் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மருத்துவர்கள், விஞ்ஞானிகள், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் தவிர மற்ற அனைத்து நபர்களும் இந்த விருதுகளுக்கு தகுதியானவர்கள். சிறப்பான படைப்புகளை அங்கீகரிப்பதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது. பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படும் இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றாகும். பொது சேவையின் ஒரு அங்கம் சம்பந்தப்பட்ட அனைத்து செயல்பாடுகள் அல்லது துறைகளில் சாதனைகளை அங்கீகரிக்க இந்த விருது முயல்கிறது.
இந்த விருதுகள் வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச்/ஏப்ரல் மாதங்களில் இந்தியக் குடியரசுத் தலைவரால் வழங்கப்படும். இதில் விருது பெற்றவர்களுக்கு குடியரசுத் தலைவர் கையொப்பமிட்ட சான்றிதழ் மற்றும் பதக்கமும் வழங்கப்படும்.
பத்ம பூசன் விருது முதன் முதலில் 1954 -ம் ஆண்டு ஜனவரி 2-ம்தேதி இந்தியக் குடியரசுத் தலைவரால் ஏற்படுத்தப்பட்டது. இது இந்திய அரசால் வழங்கப்படும் விருதுகளில் பாரத ரத்னா, பத்ம விபூசண் ஆகிய உயரிய விருதுகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது உயர் விருதாகும். முக்கிய துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்தவர்களை கவுரவிக்க இந்த விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருவது குறிப்பித்தக்கது. இந்நிலையில், 2025ம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.
இதில் கலைத் துறையில் சிறந்த பங்களிப்பு ஆற்றியவர்களுக்கு இந்திய அரசால் வழங்கப்படுகிற உயரிய விருதுகளில் ஒன்றான, ‘பத்ம பூஷன்’ விருது இந்தாண்டு தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தனது தனித்திறன் கொண்ட நடிப்புத் திறமையால், உலகளவில் தனக்கென்று தனி இடம் பிடித்துள்ள நடிகர் ‘தல’ அஜித்குமாருக்கு ‘பத்ம பூஷன்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைதொடர்ந்து நடிகையும் பரதநாட்டிய கலைஞருமான ஷோபனா சந்திரகுமார் மற்றும் தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகியோருக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருது அறிவித்துள்ளது.
யாருடைய பின்புலமும் இல்லாமல், தனது திறமையான நடிப்பால் கோலிவுட்டில் நிலைத்து நின்ற ஒரு சில நடிகர்களில் முக்கிய இடத்தில் இருப்பவர் தல அஜித்குமார். இவரது ரசிகர்கள் இவரை அல்டிமேட் ஸ்டார் என்றும் AK என்றும் செல்லமாக அழைக்கிறார்கள். துபாயில் நடந்த 24 எச் சீரிஸ் கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமாரின் 'அஜித்குமார் ரேஸிங் அணி' 992 பிரிவில் மூன்றாவது இடத்தை பிடித்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ‘பத்ம பூஷன்’ விருது அறிவிக்கப்பட்ட நடிகர் அஜித்குமாருக்கு சினிமா பிரபலங்களும், அரசியல் கட்சித்தலைவர்களும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
விருது அறிவித்து கௌரவப்படுத்தியதற்கு நடிகர் அஜித்குமார் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இந்த மதிப்புமிக்க கௌரவத்திற்காக இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். அதே நேரத்தில், இந்த அங்கீகாரம் ஒரு தனிப்பட்ட பாராட்டு மட்டுமல்ல, பலரின் கூட்டு முயற்சிகள்.
தனது சகாக்கள் உட்பட திரைத்துறையைச் சார்ந்த உறுப்பினர்களுக்கும் நன்றி கூறியுள்ளார். மறைந்த தனது தந்தை இந்த நாளைக் காண வாழ்ந்திருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாகவும், என் அம்மாவின் நிபந்தனையற்ற அன்பு மற்றும் தியாகங்களுக்கு நன்றி என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் தனது மனைவி ஷாலினி, குழந்தைகள் அனோஷ்கா மற்றும் ஆத்விக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.