
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் டி.இமான். கடந்த 2001-ம் ஆண்டு நடிகர் விஜய் நடித்த தமிழன் என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆன இவர், தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளாக முன்னனி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் இசையமைப்பாளராகவும், பாடகராகவும் கலக்கி வருகிறார் என்றே சொல்ல வேண்டும்.
தனது இனிமையான இசையால் மக்களின் மனங்களை கொள்ளை கொண்ட டி.இமான் மிகக் குறைந்த காலத்திலேயே 25 திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். கிராமத்து இசை, மெலடி, குத்துப்பாட்டு என அனைத்து வகையான பாடல்களில் கலக்கக்கூடியவர் டி.இமான். அவரது இசையில் மைனா, கும்கி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா, ரோமியோ ஜூலியட், அண்ணாத்த, விஸ்வசம் எனப் பல பட பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் பரவி, ஹிட்களாக ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது.
2019ஆம் ஆண்டு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது பெற்ற டி. இமான், இவரது இசையில் உருவான ‘கண்ண காட்டு போதும்‘, ‘வானே வானே‘, ‘மாயோனே செல்ல மாயோனே‘ என்ற சில குறிப்பிட்ட பாடல்கள் கிராமம் முதல் நகரம் வரை அனைத்து இடங்களிலும், அனைவரும் முணுமுணுக்கும் பாடலாக மாறியுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு மோனிகா ரிச்சர்டு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் கருத்து வேறுபாடு காரணமாக 13 ஆண்டுகள் கழித்து 2021-ல் இந்த ஜோடி விவாகரத்து செய்து கொண்டனர். இவர்களுக்கு பிளெசிகா, வெரோனிகா என்ற இரண்டு மகள்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் டி.இமான் 2022-ம் ஆண்டு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற அமலியா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். அமலியாவுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது குறிப்பிட்டத்தக்கது.
‘டி இமான்’ என்கின்ற கல்வி அறக்கட்டளையை நடத்தி வரும் இவர், இதன் மூலம் பல சமூக பணிகளை ஆர்வமுடன் செய்து வருகிறார். தற்போது இவரது மனைவி அமலியாவுடன் சேர்ந்து சமூக நலப்பணிகளை செய்து வருகிறார். இந்த ஜோடி சமீபத்தில் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர்.
ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தனது ‘முழு உடல் உறுப்புதானம்’ செய்து அதற்கான சான்றிதழை பெற்று இருப்பதாக இசையமைப்பாளர் டி.இமான் வீடியோ வெளியிட்டுள்ளார். எனது காலத்துக்கு பிறகும் யாரோ ஒருவர் வாழ்வுக்கு எனது உடல் உறுப்புகள் பயன் உள்ளதாக இருக்கும் என்றும், உறுப்பு தானம் மூலம் நமது காலத்துக்கு பிறகும் பூமியில் வாழலாம் என்றும் கூறியுள்ளார். ‘முழு உடல் உறுப்புதானம்’ செய்தது மகிழ்ச்சியை தருவதாகவும், அனைவரும் உடல் உறுப்புதானம் செய்யும்படியும் கேட்டுக்கொண்டார்.
இவரது வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் ‘முழு உடல் உறுப்புதானம்’ செய்த டி.இமானுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.