
விளையாட்டு, சினிமா என பல்வேறு துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு அரசு சார்பாக விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படும். அந்த வகையில் சினிமா துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் 2019-ம் ஆண்டுக்கான கன்னட திரையுலக சிறந்த நடிகர், நடிகைகள், மற்றும் திரைத்துறையை சேர்ந்தவர்களுக்கான விருதுகளை கர்நாடகா அரசு அறிவித்தது. அதில் 2019ல் வெளியான பயில்வான் திரைப்படத்தில் நடித்த நடிகர் கிச்சா சுதீப்பிற்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டது.
ஆனால் நடிகர் கிச்சா சுதீப் கர்நாடக அரசு அறிவித்த சிறந்த நடிகருக்கான விருது தனக்கு வேண்டாம் என்று நிராகரித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் விருதை மறுத்ததற்கான காரணத்தை விளக்கி உள்ளார். அதில், சுதீப் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக பல ஆண்டுகளுக்கு முன்பே விருதுகள் ஏற்றுக்கொள்வதை நிறுத்திவிட்டதாக வெளிப்படுத்தி உள்ளார். சிறந்த நடிகருக்கான விருதுக்கு தன்னை தேர்ந்தெடுத்தற்கு கர்நாடக அரசுக்கும் மதிப்பிற்குரிய நடுவர் குழுவிற்கும் அவர் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தார்.
'என்னை விட தகுதியானவர்கள் இந்த துறையில் அதிகம் பேர் உள்ளனர். அவர்களுக்கு இந்த விருதை கொடுத்தால் என்னை விட அவர்கள் மிகவும் சந்தோஷப்படுவார்கள். அதுதான் சிறப்பானதாகவும் இருக்கும். அதுமட்டுமில்லாமல் என்னை விட சிறந்த ஒருவர் இந்த விருதை வாங்கும் போது தான் எனக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்' என்று கூறியுள்ளார். விருதுகள் எதையும் எதிர்பார்க்காமல் மக்களை மகிழ்விக்கும் பணியில் தொடரவே விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், நடுவர் குழு இந்த விருதுக்கு தன்னை தேர்வு செய்ததன் மூலம் மேலும் ஊக்கத்துடன் தனது பணியை தொடர ஊக்கமளிப்பதாக கூறினார். 'இந்த கவுரவத்தை நிராகரிப்பதற்காக நடுவர் குழு மற்றும் மாநில அரசிடம் மனதார மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். மேலும் எனது விருப்பத்தை மதித்து நான் தேர்ந்தெடுத்த பாதையில் என்னை ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறேன். எனது பணியை அங்கீகரித்து இந்த விருதுக்கு என்னை பரிசீலித்ததற்காக மீண்டும் ஒருமுறை நடுவர் குழு உறுப்பினர்களுக்கும், மாநில அரசுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்' என்றும் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.
கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர் கிச்சா சுதீப் புலி, தமிழில் நான் ஈ, பாகுபலி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமானாலும், நான் ஈ படத்தில் அவரது வசீகர நடிப்பால் பட்டிதொட்டி எங்கும் அவரது புகழ் பரவத்தொடங்கியது. சமீபத்தில் கலைப்புலி தாணு தயாரிப்பில் கிச்சா சுதீப் நடித்த ’மேக்ஸ்’ திரைப்படம் கர்நாடகாவில் மட்டுமல்லாமல் தமிழிலும் நன்றாக ஓடி ரசிகர்களின் ஆதரவை பெற்றது குறிப்பிடத்தக்கது.
2001-ம் ஆண்டு வெளியான ஹுச்சா திரைப்படத்தில் அவரது நடிப்பால் ஈர்க்கப்பட்ட அவரது ரசிகர்கள் அவரை 'கிச்சா சுதீப்' என்று செல்லமாக அழைக்க தொடங்கினர்.
2013-ல் இருந்து கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியை 11 ஆண்டுகளாக நடிகர் கிச்சா சுதீப் தொகுத்து வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.
விருதுக்காக மட்டுமே நடிப்பவர்களுக்கு மத்தியில் விருதை துச்சமென நினைத்து மறுத்த கிச்சா சுதீப்பின் செயலை அனைவரும் பாராட்ட வேண்டும்.