
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் அஜித்குமார். இவரை ரசிகர்கள் செல்லமாக ‘தல’ என்று அழைக்கின்றனர். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், அஜித் நடிப்பில் உருவான குட் பேட் அக்லி படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இதுவரை தமிழ்நாட்டில் ரூ. 148 கோடி வசூல் செய்துள்ளது. இந்நிலையில் கார் ரேஸ் மீது அஜித்துக்கு இருந்த தீராத காதலால் சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி ரேஸில் கவனம் செலுத்த போவதாக கூறியிருந்தார். இதனால் தான் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களை விரைவில் முடித்து விட்டு கார் ரேஸில் கவனம் செலுத்தி வந்தார்.
கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபடும் போது பலமுறை விபத்து ஏற்பட்டு மயிரிழையில் உயிர் தப்பினார். ஆனாலும் தைரியமாக ரேஸில் பங்கேற்று வருகிறார்.
ஏற்கனவே துபாயில் நடைபெற்ற போட்டியில் 3-வது இடமும், இத்தாலியில் நடைபெற்ற போட்டியிலும் 3-வது இடத்தை அஜித்குமார் கார் ரேசிங் அணி பெற்று அசத்தியிருந்தது.
இந்நிலையில் பெல்ஜியமில் நடைபெற்ற போட்டியில் அஜித்குமார் ரேசிங் அணி 2-ம் இடம் பிடித்து உலக அளவில் சாதனை படைத்துள்ளது. இந்த போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது விபத்து ஏற்பட்டு, காயங்களுடன் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது. போட்டியில் வெற்றிபெற்ற பிறகு அஜித் குமார் தனது அணியினருடன் கோப்பையை கையில் ஏந்திக் கொண்டு குதூகலித்தார். மேலும் அஜித்குமார் இந்திய நாட்டின் தேசியக் கொடியையும் ஏந்தி சக வீரர்களுடன் தனது மகிழ்ச்சியை கொண்டாடினார்.
அப்போது குழுமியிருந்த ரசிகர்கள் அனைவரும் 'ஏ.கே. ஏ.கே.' என உற்சாக கூச்சலிட்டனர். பெல்ஜியம் கார் ரேஸ் கொட்டும் மழையில் நடைபெற்றது. இந்த சவாலான ரேசில் அஜித்குமார் அணி இந்த சாதனையை படைத்துள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.
53 வயதாகும் அஜித் சினிமா மட்டுமல்ல கார் ரேஸிலும் சாதித்து வருகிறார். சாதனைக்கு வயது தடையல்ல என்பதை இதன் மூலம் ‘தல’ அஜித் நிரூபித்துள்ளார்.