
தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை உருவாக்கி அதில் சிம்மாசனமிட்டு வெற்றித்தலைவனாக அமர்ந்திருப்பவர் ‘தல’ அஜித். அஜித் குமாரைப் பொறுத்தவரையில், மற்ற சினிமா நடிகர்களை காட்டிலும் மொத்தமாக வித்தியாசமானவர். இவர், சினிமா நடிகர்களுக்கு என்று இருக்கும் பழக்க வழக்கங்களை தாண்டி இப்படி தான் நான் இருப்பேன் என தனக்கென தனி பாதையை வகுத்து அந்த வழியில் பயணித்து வருபவர்.
கடைசியாக அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்த ‘குட் பேட் அக்லி' படம் கடந்த ஏப்ரல் 10-ம்தேதி வெளியாகி உலகம் முழுவதும் ரூ.282 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதற்கு முன்பு வெளிவந்த 'விடாமுயற்சி' திரைப்படத்தை விடவும் 'குட், பேட் அக்லி' திரைப்படம் நல்ல வசூலை அள்ளி குவித்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே சமீபத்தில் அவருக்கு ஒன்றிய அரசு பத்மபூஷன் விருதை வழங்கி கௌரவித்தது.
அஜித்தை வைத்து படத்தை இயக்க, பல முன்னனி இயக்குனர்கள் போட்டி போட்டு காத்துக் கொண்டிருக்க, ஆனால் அவரோ தனக்கு மிகவும் பிடித்த கார் ரேஸில் கவனம் செலுத்தி வருவது மட்டுமில்லாமல் “அடுத்த ஆண்டு வரை புதிய படங்களில் ‘கமிட்' ஆகமாட்டேன்'' எனவும் ஏற்கனவே அறிவித்துள்ளார்.
சினிமா தாண்டி கார் பந்தயங்களில் ஆர்வம் காட்டி வரும் அஜித்குமார், தற்போது உலக நாடுகளில் நடக்கும் கார் பந்தய போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை அள்ளி வருவதுடன் உலக அளவில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் தொடங்கி உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வரும் ரேஸில் கலந்து கொண்ட இவரது அணி இரண்டு முறை மூன்றாவது இடமும், ஒரு முறை இரண்டாவது இடமும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால் உச்சக்கட்ட உற்சாகத்தில் இருக்கும் அவர் அடுத்ததாக பிரேசிலில் நடக்கவிருக்கும் பந்தயத்தில் கலந்துகொள்வதற்காக கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் தனது ரோல் மாடல் மற்றும் கார் ரேஸரான சென்னாவின் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலியும், மரியாதையும் செலுத்தினார். பலமுறை கார்ரேஸ் பயிற்சியில் விபத்து நடந்தபோதும் நம்பிக்கை தளராமல் மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
நடிகர் அஜித் கடந்த பல வருடங்களாக பொது நிகழ்ச்சி மற்றும் பேட்டிகளை தவித்து வந்த நிலையில் தற்போது கார் பந்தயங்களில் கலந்து கொள்ள ஆரம்பித்ததில் இருந்து பல பேட்டிகளை கொடுத்து வருகிறார். அவர் பேட்டியளிப்பதை பார்த்து பலரும் ஆச்சரியம்தான் பட்டார்கள்.
அந்த வகையில் சமீபத்தில், நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகர் அஜித்குமார், “இந்தியாவில் அரசியல், சினிமா, கிரிக்கெட் போன்றவற்றுக்குதான் ஊடகங்கள் அதிக கவனம் தருகின்றன. மோட்டார் ஸ்போர்ட்ஸ்-க்கு கவனம் கிடைக்க இன்னும் நிறைய காலம் ஆகும். நான் கலந்துகொள்ளும் endurance ரேஸிங் என்பது எங்களுக்கே புதிதான ஒன்று. இந்திய மக்களுக்கு அது குறித்து ஒரு புரிதலை கொடுக்கவே நிறைய நேர்காணல்களை இப்போது அளிக்கிறேன்" என கூறியுள்ளார்.
இந்நிலையில் நடிகர் அஜித்குமார் 'AJITHKUMAR RACING' என்ற பெயரில் அதிகாரப்பூர்வ புதிய யூடியூப் சேனல் தொடங்கி உள்ளதாக நடிகரும், ரேஸருமான அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா அவரது X தளத்தில் தெரிவித்துள்ளார். இதிலிருந்து, அஜித்குமார் ரேசிங் அணி பங்கேற்கும் ரேஸ்கள் அனைத்தும் இந்த யூடியூப் சேனலில் ஒளிபரப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது இந்த அறிவிப்பால் உற்சாகமடைந்த ரசிகர்கள் அவரது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து வருகிறார்கள்.