அஜித் விஜய் படங்கள் ஒரே சமயத்தில் வந்தால், ரசிகர்களை கையிலேயே பிடிக்க முடியாது. அந்தவகையில் விரைவில் இருவரின் படமும் நேருக்கு நேர் மோதப்போகிறது. வாருங்கள் என்ன படம் எப்போது என்று பார்ப்போம்.
விஜய் அஜித் ரசிகர்கள் ஒரு காலத்தில் நேருக்கு நேராக எதிரும் புதிருமாக இருந்தார்கள். அஜித் தல என்றால், விஜய் தளபதி என்று விசில் பறக்கும். இருவரின் படங்களும் ஒரே நேரத்தில் வந்தால், வேறு யாருடைய படங்களும் ஓடாது. ரசிகர்களின் போட்டி அளவுக்கு அதிகமாக இருக்கும். இருவரின் படங்களும் வெளியாகும் அந்த நாளில் தமிழகமே ஸ்தம்பித்துப் போகும். ட்ராபிக் முதல் பல பிரச்சனைகளும் உடன் வரும்.
ஆகையால், ஒரு கட்டத்திற்கு பிறகு, இருவரின் படமும் ஒரே நாளில் வருவது குறைய ஆரம்பித்தது. ரசிகர்கள் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில்கொண்டு இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன. இப்படி ரசிகர்களை குதூகலப்படுத்திய அவர்கள், இப்போது படங்களில் நடிப்பதை குறைத்துவிட்டு, தங்களின் சொந்த விருப்பத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர். விஜய் அரசியலிலும், அஜித் கார் ரேஸிலும் பிஸியாக இருக்கிறார்கள்.
இப்படியான நிலையில், அஜித்தின் விடாமுயற்சி படம் சமீபத்தில் ரிலீஸாகி ரசிகர்களின் வரவேற்பை பெறவில்லை. சுமார் இரண்டு வருடங்களாக எதிர்பார்த்த இந்தப் படம் நல்ல விமர்சனங்களை பெறாததால், ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.
ஆகையால், அடுத்த படமான குட் பேட் அக்லி படத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், வருகிற ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும், கோடையில் கண்டிப்பாக இப்படம் வெளிவரும் என திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இப்படியான நிலையில், விஜயின் படமும் கோடையில் வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆம்! பலரின் விருப்பப் படமான சச்சின் திரைப்படம் ரீரிலிஸாகவுள்ளது. கடந்த ஆண்டு கில்லி படம் ரீ ரிலீஸாகி மாபெரும் வெற்றியடைந்த நிலையில், சச்சின் படமும் ரீ ரிலீஸ் செய்யப்படும் என, தயாரிப்பாளர் தாணு அறிவித்து இருந்தார்.
மேலும் சச்சின் படம் ரிலீஸாகி 20 வருடங்கள் ஆன நிலையில், ரீரிலிஸ் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அஜித்தின் புதுப்படமும் விஜயின் பழைய படமும் ஒரே காலத்தில் வரப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.